Published:Updated:

`செங்கோட்டையன் வந்து போயிருந்தா இப்படி இருக்குமா?'- பழங்குடிகளின் நிலையால் கலங்கிய சுப்பராயன் எம்.பி

பழங்குடியினருடன் எம்.பி சுப்பராயன்
பழங்குடியினருடன் எம்.பி சுப்பராயன்

சாலை வசதியில்லாத பழங்குடிகள் வசிக்கும் கிராமத்துக்குச் சென்ற எம்.பி சுப்பராயனை, மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவில் இருக்கிறது விளாங்கோம்பை மலைக் கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராளி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 43 குடும்பங்கள் வசிக்கின்றன. மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கவோ, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லவோ இந்தக் கிராமத்திலிருந்து 10 கி.மீ பயணம் மேற்கொள்ள வேண்டும்.

வெறும் 10 கி.மீ பயணம் தானே.. என நாம் சொல்லலாம். முற்றிலும் சாலை வசதியற்ற, அடர்த்தியான காடுகளினூடே, 4 இடங்களில் காட்டாறுகளைக் கடந்தால்தான் விளாங்கோம்பை கிராமத்துக்குச் செல்லவோ, அங்கிருந்து வெளியுலகுக்கு வரவோ முடியும். அதிலும் குறிப்பாக இந்த 10 கி.மீ தூரமும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை நடமாட்டம் அதிகம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் அரிசியை தலையில் சுமந்து பேரனோடு வந்துகொண்டிருந்த பொம்மி என்ற பெண்மணியை யானை தாக்கி கை, கால்களைத் தனியாக பிய்த்துப் போட்டிருக்கிறது. இப்படி பல இடர்பாடுகளுக்கு இடையேதான் விளாங்கோம்பை மக்களின் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரை இந்தக் கிராமத்துக்கு உதவி செய்வதற்கென எந்த அரசியல்வாதியும் சென்றதில்லை என்ற தகவல் சொல்லப்பட, திருப்பூர் எம்.பி சுப்பராயன் நேற்று விளாங்கோம்பைக்கு விசிட் அடித்திருக்கிறார். `நம்மைத் தேடி அரசியல்வாதிகள் யாரோ வருகிறார்கள்’ என விளாங்கோம்பையே சுறுசுறுப்பாகியிருக்கிறது. காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி எம்.பி-க்கு அணிவித்து அக்கிராம மக்கள் வரவேற்றனர்.

எம்.பி சுப்பராயன்
எம்.பி சுப்பராயன்

ஊருக்கு நடுவே உட்கார்ந்து எம்.பி சுப்பராயன் நிலவரத்தை விசாரித்திருக்கிறார். `ஏதாவது உடம்புக்கு நோவுன்னா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடக்கூட சரியான ரோடு வசதி இல்லீங்க. புள்ளைங்களை எப்படிங்க இந்தக் காட்டு வழியா அனுப்பி படிக்க வைக்க முடியும். அரசாங்கம் எங்களுக்குன்னு எந்த வசதியும் செஞ்சு கொடுக்க மாட்டேங்குது’ என எம்.பி-யிடம் குமுறியுள்ளனர்.

`பேப்பர் வாங்கக்கூட பணம் இருந்ததில்லை..!' -கேரளாவின் முதல் பழங்குடி இன கலெக்டரான ஸ்ரீதன்யா

`சுதந்திரம் கிடைத்து 70 வருஷத்துக்குப் பிறகும் இப்படியொரு கிராமம் இருக்கா... சாலை வசதியில்லாத கிராமம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நான் ஜீப்பை விட்டு கொஞ்ச தூரம் நடந்து வந்தப்பதான் அந்தக் கஷ்டத்தைப் புரிஞ்சிக்க முடிஞ்சது. கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி இது. அவர் இதைக் கவனிச்சிருக்க வேண்டாமா?

எம்.பி சுப்பராயன்
எம்.பி சுப்பராயன்

அவர் அடிக்கடி இங்க வந்துட்டு போயிருந்தா, சாலைகள் போடப்படாமல் இருந்திருக்குமா.. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் இருக்கும் இந்த மக்களைப் பார்க்க வேதனையாகவும், பெருந்துயரமாகவும் இருக்கிறது’ என அருகிலிருந்தவர்களிடம் எம்.பி சுப்பராயன் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து, ``விளாங்கோம்பை கிராமத்திலுள்ள மக்களின் நிலையை நேரில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எட்டிப்பார்த்திருந்தால் 70 ஆண்டுகளாக அந்தக் கிராமம் எவ்வித வசதிகளும் இல்லாமல் அப்படியே இருந்திருக்குமா. இப்பிரச்னை குறித்து முதலமைச்சருக்கும், ஈரோடு கலெக்டருக்கும் விரிவாக கடிதம் எழுதவிருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து விளாங்கோம்பை கிராமத்தில் தொழிலாளர் நல சிறப்புப் பள்ளியை நடத்திவரும் சுடர் நடராஜ் கூறுகையில், ``விளங்கோம்பையில் தொடக்கப்பள்ளி ஏற்படுத்த வேண்டும், இந்த வனச் சாலையை செப்பனிட்டு தார் சாலை அமைக்க வேண்டும், வன விலங்குகளின் அச்சம் காரணமாக பத்தாண்டு காலமாக வேளாண்மை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. ஆகவே, இக்கிராமத்தைச் சுற்றி அகழி வெட்டி மின்வேலி அமைத்திட வேண்டும்.

சுடர் நடராஜ்
சுடர் நடராஜ்

அனைவரும் குடிசைகளில் வசிப்பதால் அனைவருக்கும் தொகுப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும், நடமாடும் ரேஷன் கடை, மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கிராம மக்கள் எம்.பி-யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு