மதிமுக-வை திமுக-வுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அந்தக் கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு அதிருப்திகரமான விமர்சனங்ளை முன்வைத்திருக்கிறார். குறிப்பாக, `மதிமுக-வை, திமுக-வுடன் இணைத்துவிடுங்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், `` மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில், தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிபூர்வமான பேச்சைக் கேட்டே, லட்சக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால், தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக, தங்களை ஆதரித்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தைவிட்டு படிப்படியாக வெளியேறி திமுக-வுக்கே சென்றுவிட்டனர்.

தங்களின் அண்மைக்கால நடவடிக்கைகளால் மதிமுக-வுக்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்குத் தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதையும் மக்கள் அறிந்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் பழைய உறுப்பினர்கள்கூட, தங்களைப் புதுப்பித்துக்கொள்ள முன்வரவில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு, ஆர்வம் குறைந்திருக்கிறது.
`கிளை உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும்’ என்ற விதியை, தாங்கள் `10 உறுப்பினர்கள் இருந்தால் போதும்’ என மாற்றியிருப்பது, கட்சியின் வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா... மதிமுக-வின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை, தங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
தாங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக, `கொங்கு மண்டலம் மதிமுக-வின் ஜிப்ரால்டர் கோட்டை’ என்று பேசிவருகிறீர்கள். ஆனால், கொங்கு மண்டலத்திலுள்ள மூன்று மாநகராட்சிகளிலும், கழகத்தின் மாநகர மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டீர்கள் என்று சொல்லப்படுகிறது.

கழகத்தின் சட்டவிதி 13, பிரிவு 4-ல் ஒவ்வொரு வட்ட கிளையும் 100 பேருக்குக் குறையாத உறுப்பினர்களைக்கொண்டதாக அமையும் என்று இருக்கிறது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும் போலியான பெயர்களில் உறுப்பினர்களாகப் பதிவுசெய்துகொண்டு, தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறீர்கள். கொங்கு மண்டலத்திலேயே மதிமுக-வின் நிலை இதுவென்றால் வேறு மாவட்டங்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உங்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்குமானால், ஒவ்வொரு வார்டிலும் உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொண்டவர்களையும், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும், ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுக-வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியிருக்கிறது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமை மதிமுக-வுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டக் கழகம், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, பத்திரிகைக்குச் செய்தி வெளியிடுவதும், அவருக்கே திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழகத் தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைச் செய்தி வெளியிடுவதும், மீண்டும் அவருக்கே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டக் கழகம் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவதும்தான் அரசியல் நேர்மையா?

அன்று திமுக-வில் தங்களுக்கு ஓர் இடர்ப்பாடு வந்தபோது, எந்தக் குடும்ப அரசியலுக்கு எதிராகத் தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்குத் தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயலும்போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும், மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலையும், பொதுவெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதைத் தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வே.
தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து எந்த அரசியல் கட்சியும், இப்படிப் பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்குத்தான் என்பதை, தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பதன் விளக்கமா என்பதைத் தங்களின் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கழகத்தை தாய்க் கழகமான திமுக-வுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, பல முறை தான் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கு நீங்கள் பதில் கூறவில்லை என்றும் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.