அலசல்
அரசியல்
Published:Updated:

டி.ஆர்.பி. ராஜா என்னைவிட திறமையானவர்... அவரிடமிருந்து நெருக்கடி வந்தால் சமாளிப்போம்!

பூண்டி கலைவாணன்
பிரீமியம் ஸ்டோரி
News
பூண்டி கலைவாணன்

- சொல்கிறார் பூண்டி கலைவாணன்

டெல்டாவிலிருந்து அமைச்சர் பதவியை எட்டிப் பிடிக்கும் போட்டியில், டி.ஆர்.பி.ராஜா வாகை சூடியிருப்பதைத் தொடர்ந்து, மாவட்ட தி.மு.க-வில் அனலடிக்கிறது. திருவாரூர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துவந்த நிலையில், பூண்டி கலைவாணனைச் சந்தித்தேன்...

‘‘கட்சியில் நீங்கள்தான் சீனியர். ஆனால், உங்களைத் தவிர்த்துவிட்டு, ஜூனியரான டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக்கப்பட்டிருக்கிறாரே?’’

‘‘இதில் சீனியர், ஜூனியரெல்லாம் பார்க்க முடியாது. டி.ஆர்.பி.ராஜா இளைஞர், என்னைவிட அதிகம் படித்தவர். அவருக்கென சில திறமைகள் இருக்கும். எனவே, அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். இதே மாவட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகியிருக்கிறார். அவருடைய செயல்பாட்டுக்கு இணையாக, கூடுதலாக உழைத்து என் வேலையைச் சிறப்பாகச் செய்வேன். ஒரு நிலையை அடைவது கஷ்டமில்லை. அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்வது சவாலான விஷயம். `ஜெயிக்கிற வரை குதிரை மாதிரி ஓட வேண்டும்; ஜெயித்த பிறகு குதிரையைவிட வேகமாக ஓட வேண்டும்’ என்று தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்... அதை நான் செய்கிறேன்.’’

‘‘அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?’’

‘‘2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் எனக்கு சீட் கொடுத்தால், டெபாசிட்கூட வாங்க முடியாது. குறிப்பிட்ட சில சமுதாய மக்கள் எனக்கு எதிராக இருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவேன் எனத் தலைவரிடம் நிறைய பேர் சொன்னதுடன் சீட் கிடைக்கவிடாமல் தடுக்கப் பார்த்தனர். அதையும் மீறி என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு தந்தார். அப்போது அவர் மட்டும் எனக்கு சீட் தரவில்லையென்றால், இப்போது இந்தக் கேள்விக்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும். சில சமயம் சில வாய்ப்புகள் கிடைக்கும்; கிடைக்காமலும் போகும். அதற்காக வருத்தப்படவில்லை.’’

‘‘ஆனால், உங்கள் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படையாகப் போட்டுடைத்துவிட்டார்களே?’’

‘‘என்மீது பிரியம்கொண்டவர்கள் சில வருத்தங்களை வெளிப்படுத்தினார்கள். இது யதார்த்தம்தான். எனக்கு வேண்டியவர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால், தலைவர் செய்தது நூறு சதவிகிதம் சரிதான்.’’

டி.ஆர்.பி. ராஜா என்னைவிட திறமையானவர்... அவரிடமிருந்து நெருக்கடி வந்தால் சமாளிப்போம்!

‘‘உதயநியின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆகியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நெருக்கமாக இருக்கும் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட முடியாது. நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதைத் தாண்டி திறமையானவர்கள் என்பதைப் பார்த்தே கொடுத்திருக்கின்றனர். தனித்தன்மையுடன் யோசிக்கும் உதயநிதி, வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டார். அப்படிப் பார்த்தால் நானும் வேண்டாதவன் கிடையாது. உதயநிதி எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர், பிடித்தவரும்கூட.’’

‘‘அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்த அதிருப்தியை உங்கள் மகன் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை உங்களைக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘என்னை தலைவருக்குத் (ஸ்டாலின்) தெரியும். எனக்குத் தலைவரைத் தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அமைச்சர் பதவி குறித்து தலைவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. இதுவரை யாரிடமும் நான் அமைச்சர் பதவி கேட்டதும் இல்லை!’’

‘‘டி.ஆர்.பி.ராஜாவை டெல்டா பகுதிக்கான அடையாளமாக கட்சித் தலைமை முன்னிறுத்துவதாகப் பேசப்படுகிறதே?’’

‘‘ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களுக்கும் அவரை முன்னிறுத்தினால், அது திருவாரூர் மாவட்டத்துக்குப் பெருமைதான்.’’

‘‘டி.ஆர்.பி.ராஜா உங்களிடம் பேசினாரா?’’

‘‘அமைச்சராகிறார் எனக் கேள்விப்பட்டதுமே நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதவியேற்பு விழாவுக்கு அழைத்தார். லோக்கலில் சில வேலைகள் இருந்ததால், வருவதற்கு வாய்ப்பில்லை என்றேன். அவரும் புரிந்துகொண்டார்.’’

‘‘உங்கள் கட்சிப் பணிகளில் இனி சோர்வு ஏற்படுமா?’’

‘‘எதிர்பார்ப்பு இருந்தால்தான் சோர்வு உண்டாகும். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. வைகோ, தி.மு.க-வைவிட்டுப் பிரிந்த சமயத்தில், இக்கட்டான சூழலில் கட்சி இருந்தது. அப்போது பேரூர் கழகச் செயலாளராக இருந்த என் அண்ணன் மறைந்த கலைச்செல்வன், சேலஞ்சாக எடுத்துக்கொண்டு அப்போதைய தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்திலேயே முதன்முதலாக கொரடாச்சேரியில் பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தினார். அது திருப்புமுனையாகவும் அமைந்தது.

கட்சிதான் எனக்கு வீடு, குடும்பம் எல்லாமே. எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் தலைவர் மாவட்டத்தில் கட்சிப் பணியைச் சிறப்பாக செய்வேன். தற்போது திருவாரூரில் நடக்கவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டைச் செய்துவருகிறேன். ஓர் அரசியல் விழாவாக இல்லாமல், உணர்வுபூர்வமான நிகழ்வாக அது இருக்கும்.’’

‘‘கட்சிரீதியாக டி.ஆர்.பி.ராஜா உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார் எனப் பேசப்படுகிறதே?’’

‘‘நான் ஒரு விவசாயி. பயிர் விதைக்கும்போதும், அறுவடையின்போதும் மழை வரக் கூடாது. மழைக்கு பயந்து விதைக்காமலும் இருக்க முடியாது. மழையிலிருந்து பயிரைக் காப்பாற்ற எனக்குத் தெரியும். அதுபோல் (டி.ஆர்.பி.ராஜாவிடமிருந்து நெருக்கடி) வராது; வரவும் கூடாது. வந்தால் சமாளிப்போம்!’’