Published:Updated:

பெகாசஸ்: `ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கலாமா?!' - டி.எம்.கிருஷ்ணா ஆவேசம்

பெகாசஸ்
பெகாசஸ்

``பெகாசஸ் என்ற ஸ்பைவேரைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணிப்பதற்கு அரசுக்கு உரிமையே கிடையாது’’ என்று கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கோபத்துடன் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உட்பட மத்திய பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்துவருபவர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. சமீபத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எம்.கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில், விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், பெகாசஸ் விவகாரம் தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், ``நாட்டின் குடிமக்கள் என்ன பேசுகிறார்கள், யாருடனெல்லாம் பேசுகிறார்கள், எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு அரசுக்கு உரிமையே கிடையாது. `பெகாசஸ்’ எனப்படும் ஸ்பைவேரை மக்கள் பணத்திலிருந்து வேறொரு நாட்டிலிருந்து வாங்கி, மக்களையே கண்காணித்திருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கலமா? இது மிகவும் ஆபத்தான விஷயம். மக்களுக்கு மட்டுல்ல, அரசுக்கும்கூட இது நல்லதல்ல” என்றார்.

 டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

கேரளாவின் உயரிய ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்வுசெய்யப்பட்டபோது, அதற்கு நடிகை பார்வதி, பாடகி சின்மயி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு டி.எம்.கிருஷ்ணா ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

ONV விருது: `அந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்தானா வைரமுத்து?' - சர்ச்சையும் விவாதங்களும்!

``வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி உட்பட 16 பேர் `மீடூ’ புகாரை எழுப்பியிருக்கிறார்கள். அந்தப் புகார்கள் தொடர்பாக வைரமுத்துவை தமிழ்த் திரையுலகம் ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி விசாரணை நடத்த வேண்டும்.

ஆனால், இந்த விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால், புகாரை எழுப்பிய சின்மயிக்கு இன்னும் டப்பிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பதில் சொல்வார்கள்?” என்றார் டி.எம்.கிருஷ்ணா.

வைரமுத்து
வைரமுத்து

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த டி.எம்.கிருஷ்ணா, ``ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து திரையுலகுக்கு நிறைய கலைஞர்கள் வருகிறார்கள். தமிழ் சினிமாவில் நடைபெற்றுவரும் இந்த மாற்றம், கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் வருகை தமிழ் சினிமாவின் புதிய அலை” என்றார்.

இந்த நேர்காணலில் பெகாசஸ் விவகாரம், பிடித்த இசையமைப்பாளர், கானா பாடல்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும் ஆவேசமாகவும் பதில்களை அளித்திருக்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

நேர்காணலைக் காண்பதற்கான இணைப்பு:

அடுத்த கட்டுரைக்கு