Election bannerElection banner
Published:Updated:

மஹுவா மொய்த்ரா : மோடி அரசுக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் சீறிய திரிணாமுல் எம்.பி!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா ( LSTV )

`இந்தியா இன்று எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் காரணம் அரசு அதைக் கைவிட்டதால் மட்டும் அல்ல... ஜனநாயகத் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்தான் அதைக் கைவிட்டுவிட்டன.’

நாடாளுமன்றத்தின் நேற்றைய கூட்டத்தொடரில் சீறியிருக்கிறார் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா (Mahua Moitra).

நாடாளுமன்றத்தில் எப்போதும் உறுதியான பேச்சுகளை எடுத்துரைக்கக்கூடியவர் மஹுவா. மோடி அரசாங்கத்தை, அதன் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்துவருகிறார். இந்தச் சூழலில் நேற்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார் மஹுவா. அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம்...

`அரசு மட்டுமல்ல...’

`` `இந்தியா இன்று எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் காரணம் அரசு அதைக் கைவிட்டதால் மட்டும் அல்ல... ஜனநாயகத் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்தான் அதைக் கைவிட்டுவிட்டன. புனிதப் பசுவாகக் கருதப்படும் நீதித்துறை இனி எப்போதும் புனிதமாக இருக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எப்போது இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக அமர்ந்தாரோ, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்துக்கொண்டாரோ, அதில் குற்றமற்றவராகத் தன்னை அறிவித்துக்கொண்டாரோ, பணி ஓய்வுபெற்ற மூன்றே மாதங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டாரோ அப்போதே அதன் புனிதம் சிதைந்துவிட்டது.

மஹுவா மொய்த்ரா : மோடி அரசுக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் சீறிய திரிணாமுல் எம்.பி!

இந்திய அரசமைப்பின் கொள்கைகளைக் காக்கும் வாய்ப்பை வீணடித்தபோதே இந்த நீதித்துறை தனது புனிதத்தை இழந்துவிட்டது’’ என்றார்.

மேலும் அவர், ``அரசாங்கத்தைக் கேள்வி கேட்டதற்காக, அரசு விவகாரங்களில் கருத்து தெரிவித்ததற்காக காவல்துறையின் துன்புறுத்தலை மக்கள் எதிர்கொள்கிறார்கள். கோழைகள் குறித்தும், தீரர்கள் குறித்தும் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நான் பேசுகிறேன். கோழைகள், அதிகாரத்தின் பொய்யான துணிச்சலுக்குப் பின்னால், வெறுப்பின் பின்னால், மதவெறியின் பின்னால் மறைந்துகொள்கிறார்கள். இதை அவர்கள் தைரியம் என்கிறார்கள். இதற்குப் பிறகு, அரசாங்கம் பிரசாரம் மற்றும் தவறான தகவல்களை ஒரு குடிசைத் தொழிலாக மாற்றியிருக்கிறது. இதன் மிகப்பெரிய வெற்றி கோழைத்தனத்தைத் தைரியமாகக் காட்டுவது.

இது போலீஸ் அரசு..!

இந்த அரசு போலீஸ் அரசாக மாறிவிட்டது. சந்தேகத்துக்குரிய ஒரு புகாரின் கீழ் இந்த நாடாளுமன்றத்தின் முன்னோடிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டைச் சுமத்த முடிகிறது.

இந்த அரசாங்கம், அறநெறிகளைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது. வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ சேனல்களை, 18 வயதான சூழலியல் செயற்பாட்டாளருக்கும், அமெரிக்க பாப் பாடகிக்கும் பதிலளிக்கப் பயன்படுத்த இருக்கும் துணிச்சல், டெல்லி எல்லையில் முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ ஏன் இல்லை?

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 90 நாள்களாக விவசாயிகள் டெல்லியின் எல்லையில் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய அரசு யாரையும் நியமிக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்களை இந்த அரசின் கூட்டணிகள்கூட எதிர்த்திருக்கிறார்கள். ஆனால், அரசு அதை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இந்த அரசு அறநெறிகளைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது என்பதை இது உணர்த்துகிறது” என்றார்.

மொய்த்ராவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மற்றும் பா.ஜ.க எம்.பி நிஷிகண்ட் துபே எதிர்ப்பு தெரிவித்தார்கள். `முன்னாள் தலைமை நீதிபதி குறித்துப் பேசக் கூடாது’ என்றார்கள். தலைமை நீதிபதி குறித்த விஷயங்களைப் பேசாமல், பிற விஷயங்களைப் பேச மொய்த்ரா அனுமதிக்கப்பட்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு