Published:Updated:

தரக்குறைவாகப் பேசிய த.மு.மு.க நிர்வாகி! நடவடிக்கை எடுத்த கட்சியும்... வரவேற்ற பி.ஜே.பி-யும்!

எம்.திலீபன்

ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, முகமது ஷெரீப்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

முகமது ஷெரீப்
முகமது ஷெரீப்

"முத்தலாக் தடைச் சட்டத்தால் எங்கள் பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. இது, ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான சட்டம். இது, புரியாமல் பலர் இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்..." எனக் கூறி பகிரங்கமாக மோடி மற்றும் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுவதுபோல பேசியிருந்தார் த.மு.மு.க திருச்சி மாவட்ட மாணவரணிச் செயலர் முகமது ஷெரீப். அவர் பகிரங்கமாக இப்படிப் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

முத்தலாக் எதிர்ப்புப் போராட்டம்
முத்தலாக் எதிர்ப்புப் போராட்டம்

இந்த நிலையில், பகிரங்கமாகப் பேசிய ஷெரீப்பை காவல் துறையினர் கைதுசெய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. நடந்தது குறித்து விசாரித்தோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் சட்ட மசோதா மற்றும் காஷ்மீர் 370 பிரிவு நீக்கம் ஆகியவை குறித்த தெருமுனைக் கூட்டம், த.மு.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காட்டில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருச்சி மாவட்ட மாணவரணிச் செயலர் முகமது ஷெரீப், "மோடி அரசு மக்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. அத்தோடு கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களைப் பழிவாங்கும் நோக்கோடு இயற்றியுள்ள கறுப்புச் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்.

போராட்டம்
போராட்டம்

முத்தலாக் தடைச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கம் குறித்தும் தொடர்ந்து மாவட்டம்தோறும் குரல்கொடுத்து வருகிறோம். இந்த நிலையில், எல்லோரும் ஒன்று சொல்கிறார்கள், முஸ்லிம்களுக்கு பி.ஜே.பி எதிரான கட்சி என்று. ஆனால், நான் சொல்கிறேன், பா.ஜ.க மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸும் எங்களுக்கு எதிரானவர்கள்தாம். முத்தலாக் சட்ட மசோதாவால் எங்கள் பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. இது, ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான சட்டம். முஸ்லிம் பெண்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் ஏற்பட்டிருந்தால்..." எனக் கூறி பகிரங்கமாக மோடி மற்றும் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுவதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசிய இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோ பதிவைப் பார்த்த பலர், தங்கள் கண்டனங்களைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்தனர். மேலும் பலர், இவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை புகாரின்பேரில், மங்களமேடு டி.எஸ்.பி தேவராஜன் வழக்கு அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் (பிரிவு 188),

ஷெரீப்
ஷெரீப்

முன்னறிவிப்பின்றி கூட்டமாகக் கூடுதல் (பிரிவு 89), நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல் (124 ஏ), அவதூறாகப் பேசுதல் (504, 505), கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுதல் (506 (1)) ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, முகமது ஷெரீப்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவும் இவரின் கருத்தைக் கண்டித்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

இதுகுறித்து த.மு.மு.க முக்கியத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். "மாணவரணிச் செயலர் முகமது ஷெரீப் பேசியது தவறுதான். அதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்கு எதிராகவே இருக்கின்றன.

முத்தலாக் எதிர்ப்பு போராட்டம்
முத்தலாக் எதிர்ப்பு போராட்டம்

இதைத்தான் நாங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு சிலர், முஸ்லிம்கள் பி.ஜே.பி-க்கு எதிரானவர்கள் என்று பொய்ப் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அது தவறு. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறல்ல. இது எங்கள் ஜனநாயகக் கடமை!" என்று முடித்துக்கொண்டனர்.

இதுகுறித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம். ”எங்களுடைய கட்சி எப்போதும் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.

த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா
த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா

அவரது கருத்து அறநெறிகளுக்கு முரணாக அமைந்துள்ளது. அவருடைய கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்தோடு ஷெரீப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் வகித்துவந்த தலைமைக் கழகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அத்தோடு இதுபோன்ற அவதூறு கருத்துகளை யாரும் பேசக்கூடாது” என்று முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். "ஜனநாயக நாட்டில் யார் யாரை வேண்டுமானாலும் குறைசொல்லிப் பேசலாம். ஆனால், வரம்புமீறிப் பேசக்கூடாது. அவரது பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் நாங்கள் செய்வதைக் குறைசொல்லிப் பேசலாம்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

ஆனால், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சரியா? அவரைக் கட்சியிலிருந்து இருந்து நீக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதுபோன்று அநாகரிகமான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்குக் கட்சியினர் நடவடிக்கை எடுத்தாலே, தரம்தாழ்ந்த பேச்சுகள் குறையும்" என்றார்.

அநாகரிகமாகப் பேசுவது அழகா?