Published:Updated:

`எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறேன்!' - ஆணவக் கொலை புள்ளிவிவரத்தால் ஆதங்கப்பட்ட ஆளுநர்

"நான் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவன். உங்களைவிட எனக்கு அட்டவணைப் பிரிவு மக்களைப் பற்றித் தெரியும். அவர்களின் நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறேன். இப்போதுதான் அந்த மக்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள்."

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர் ஆதி திராவிடர் நலக் குழு உறுப்பினர்கள். "அம்பேத்கரை அருகில் இருந்து பார்த்தவன் நான். அவர் நமது சட்டத்தை வடிவமைத்த காலத்தில் நான் மாணவனாக இருந்தேன். அட்டவணைப் பிரிவு மக்களின் வேதனைகளும் எனக்குத் தெரியும்" என உருக்கமாகப் பேசியிருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர் பன்வாரிலால்
ஆளுநர் பன்வாரிலால்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலைச் சந்தித்துப் பேசியுள்ளனர் தமிழ்நாடு அரசின் ஆதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார், கண்காணிப்புக் குழு உறுப்பினர் இஸ்ரேல், முன்னாள் ராணுவவீரர் நலச் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவக் கொலைகள் குறித்தும் அருந்ததியர் மக்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. "இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என நம்மிடம் விவரித்த செல்வகுமார், "தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகள் அதிகரித்துவருகின்றன. உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், ஒசூர், தூத்துக்குடி எனப் பரவலாக இந்தப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன.

தமிழக அரசு எவ்வளவோ நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தாலும், சிறிய குழந்தைகள் மத்தியிலும் சாதிவெறி அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி ஆளுநரிடம் விவரித்துவிட்டு, `ஆணவக் கொலைகளுக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும். மாநில அரசால் சட்டம் ஒழுங்கையும் உதவிகளை மட்டுமே செயல்படுத்த முடியும். நேற்றுகூட ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட ஒருவரது குடும்பத்துக்கு வேலை கொடுத்தார்கள். ஆணவக் கொலைகளைத் தடுக்காவிட்டால், பழைய நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய சூழல் வரும்' என வேதனையோடு விவரித்தோம். இதற்குப் பதில் அளித்த ஆளுநர், `டி.ஜி.பி-யிடம் இதுதொடர்பாகப் பேசுகிறேன். சட்டம் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறேன்' என உறுதியளித்தார்.

ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார்
ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார்

தொடர்ந்து பேசும்போது, `அரசாணை 92-ன்படி அட்டவணைப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நிதியுதவியை அளிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், நிதியைத் தருவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது. இதனால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்' என்றோம். `இதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன்' என்றவரிடம், அருந்தியர் மக்களின் தற்போதைய நிலையை விவரித்தோம்.

ஜம்போ யானையும் வீழ்ந்த சர்க்கஸ் கம்பெனியும்... ஒரு துயர வரலாறு!

`தேவேந்திரகுல வேளாள சமூக மக்கள் பிற்பட்ட வகுப்பை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால், எங்களின் நிலை முற்றிலும் மாறுபட்டது. இன்று வரையில் துப்புரவு தொழிலை மட்டும்தான் இந்த மக்கள் செய்துவருகின்றனர். அருந்ததியர்க்கென்று தனி கேட்டரிகியை உருவாக்கித் தர வேண்டும். வேலைவாய்ப்புக்கான முன்னுரிமையிலும் எங்களைத் தவிர்த்துவிட்டு இதர தலித் சமூக மக்களுக்கு வேலையைக் கொடுத்துவிடுகின்றனர்' எனப் பதிவு செய்தோம். இதையடுத்து எங்களிடம் பேசியவர், `நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தச் சமூகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. அவர்களை முன்னேற்றுவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறேன். உங்களுக்குத் தேவையானதைச் செய்து தருவதற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்' என உருக்கமாக கூறியவர்,

நமது சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்த காலகட்டத்தில் நான் மாணவனாக இருந்தேன். அவரை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நாக்பூருக்காக அவர் செய்த பணிகளும் எனக்குத் தெரியும்.
ஆளுநர் பன்வாரிலால்

தொடர்ந்து பேசும்போது, 'நான் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவன். உங்களைவிட எனக்கு அட்டவணைப் பிரிவு மக்களைப் பற்றித் தெரியும். அவர்களின் நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறேன். இப்போதுதான் அந்த மக்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். நமது சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்த காலகட்டத்தில் நான் மாணவனாக இருந்தேன். அவரை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நாக்பூருக்காக அவர் செய்த பணிகளும் எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு பெரிய போராளி என்பதையும் பார்த்திருக்கிறேன். அந்தப் போர்க்குணம் உங்களிடம் இருப்பதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். அட்டவணை சமூக மக்களின் வளர்ச்சிக்காக என்னிடம் வந்து பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது' என்றவர், நேர்முக உதவியாளரை அழைத்து, `இவர்கள் தெரிவித்த தகவல்களையெல்லாம் குறிப்பாக எழுதிக் கொடுங்கள்' என உத்தரவிட்டார். ஆளுநரிடம் கோரிக்கை மனுவைக் கொடுப்பதற்காகத்தான் சென்றோம். இப்படியொரு சிறப்பான சந்திப்பாக மாறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார் உற்சாகத்துடன்.