Published:Updated:

`கமிஷனுக்காகக் கட்டடத்தை இடித்தாரா?' - ஓமலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது பாயும் அதிகாரிகள்

வீ கே.ரமேஷ்
க .தனசேகரன்

வேளாண்மைத் துறை கட்டடங்களையும் இடித்தால் அதிக நிதி கிடைப்பதோடு அதிக கமிஷனும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இடித்து விட்டார் எம்.எல்.ஏ.

இடிக்கப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்கள்
இடிக்கப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்கள் ( க. தனசேகரன் )

''சேலம் காடையாம்பட்டி வேளாண்மைத் துறை கட்டடங்கள் பலமாக இருந்தன. இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் வலுவாக இருக்கக் கூடியவை. ஆனால், ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒன்றைக் கட்டுவதாக இருந்தார். வட்டார வளர்ச்சி அலுவலகம் மட்டும் கட்டினால் நிதி குறைவாகக் கிடைப்பதோடு கமிஷனும் குறைவாக கிடைக்கும் என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களையும் இடித்தால் அதிக நிதி கிடைப்பதோடு அதிக கமிஷனும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இடித்து விட்டார்'' எனக் குமுறுகிறார்கள் சேலம் மாவட்ட காடையாம்பட்டி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள்.

காடையாம்பட்டி வேளாண் கட்டடம்
காடையாம்பட்டி வேளாண் கட்டடம்
க. தனசேகரன்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திற்குள் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இங்கு புதிதாக வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட இருக்கிறது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்துக்குள் செயல்பட்டுவந்த வேளாண்மைத் துறை கட்டடங்களையும் துறைரீதியாக அனுமதியைப் பெறாமல் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டனர்.

காடையாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தராஜனிடம் பேசினோம். ``விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் வருகை தரும் வட்டார வளர்ச்சி வளாகத்தில் வேளாண்மைத் துறை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும். அதன்படி தமிழகத்தில் 384 வட்டார வளர்ச்சி வளாகத்தில் வேளாண்மைத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி வளாகத்தில் இருந்த வேளாண் விரிவாக்க மையத்தை மட்டும் தற்போது இடித்து விட்டார்கள்'' என ஆதங்கப்பட்டவர்,

''காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையமானது 3 கட்டடங்களில் சுமார் 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாகச் சொத்து வரியும் மின் கட்டணமும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதாகச் சொல்லி அவர்களுடைய கட்டடங்களை இடித்தார்கள். எங்களுடைய கட்டடத்தையும் இடிப்பதாகத் தெரிவித்தார்கள்.

கோவிந்தராஜன்
கோவிந்தராஜன்
க. தனசேகரன்

இதையடுத்து ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேலிடம் முறையிட்டோம். அவரும், வேளாண்மை கட்டடத்தை இடிக்க இருப்பதாகத் சொன்னார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் தடை ஆணையும் பெற்றோம். எங்கள் இயக்குநரும் வேளாண்மைத் துறைக் கட்டடங்களை இடிக்கக் கூடாது என்று வட்டார வளர்ச்சி ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் அதையெல்லாம் துளியும் மதிக்காமல் எங்களிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் அராஜகமாகக் கடந்த வாரம் இரவோடு இரவாக எங்களுடைய 3 கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள்.

`அ.தி.மு.க நேரடிக் கூட்டு; தி.மு.க மறைமுகக் கூட்டு!' - பா.ஜ.க உறவைச் சுட்டிக்காட்டும் சீமான்

அந்தக் கட்டடத்தில் பல கோடி மதிப்புடைய ஆவணங்கள், பணப்பட்டியல், தணிக்கைக்கான பில்கள், தளவாட பொருள்கள், விதைகள் ஆகியவற்றை வைத்திருந்தோம். 30 ஆண்டுகள் பழைமையான தேக்கு மரங்கள், புங்கை மரங்கள் இருந்தன. அனைத்தையும் அராஜகமாக அப்புறப்படுத்திவிட்டார்கள். காவல்துறையிடம் புகார் கொடுத்தால், கட்டடத்தை இடிப்பவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இதற்குப் பின்னால் ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் இருப்பதாகக் கருதுகிறேன். வேளாண்மைத் துறைக் கட்டடத்தை இடித்ததால் அரசுக்குப் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்றார் கொதிப்புடன்.

கருணாநிதி
கருணாநிதி
க. தனசேகரன்

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் வேளாண்மைத் துறை ஊழியர்கள் சிலர், ``வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைக் கட்டடங்களையும் இடித்தால் அதிக நிதி கிடைப்பதோடு அதிக கமிஷனும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இடித்து விட்டார்'' என்கின்றனர் வேதனையுடன்.

இதுகுறித்து காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதியிடம் கேட்டபோது, ``நான் உடல்நிலை சரியில்லாமல் மூன்று நாள்கள் விடுமுறையில் இருந்தேன். அதனால் வேளாண்மைத் துறை அலுவலகத்தை யார் இடித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மைத் துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் அதன் அடி நிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குச் சொந்தமானது.

வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வெறும் அரை ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கின்றது. ஆனால், வேளாண்மைத் துறை அலுவலகத்துக்கு 100 ஏக்கர் நிலம் டேனிஷ்பேட்டையில் இருக்கிறது. அங்கு புதிதாகக் கட்டடம் கட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பே சென்று விட்டார்கள். இங்கிருக்கும் வேளாண்மை அலுவலகம் செயல்படாமல் பூட்டுப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்கு அரசு 2.75 கோடி நிதியை ஒதுக்கி டெண்டர் விட்டு பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களைக் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேண்டுமென்றே இடையூறு செய்து வருகிறார்கள்'' என்றார் அமைதியாக.

வெற்றிவேல்
வெற்றிவேல்
க. தனசேகரன்

`கட்டட இடிப்பு' சர்ச்சை குறித்து ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலிடம் கேட்டோம். ``நான் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஒருவாரத்துக்கு முன்பே வந்துவிட்டேன். அதனால் வேளாண்மைத் துறை அலுவலகத்தை யார் இடித்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வேளாண்மைத் துறை அலுவலகத்தை காலி செய்துவிட்டு டேனிஷ்பேட்டைக்குச் சென்றுவிட்டார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்" என்றார் இயல்பாக.