கட்டுரைகள்
Published:Updated:

எப்படியிருக்கு புதிய சட்டசபை?

புதிய சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய சட்டசபை

அரங்கத்திற்கு எதிர்ச் சாலையில் இருக்கும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களைக்கூட பார்க் செய்ய முடியாத வண்ணம் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

நீண்ட தேக்கத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது நாடு. அனைத்துப் பணிகளும் பழையபடி தொடங்கியிருக்கின்றன, பல மாற்றங்களுடன். கொரோனா ஊரடங்குக்குப் பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. வழக்கமாகக் கூட்டத்தொடர் நடக்கும் தலைமைச் செயலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதால் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தப்பட்டது. புதிய மாற்றங்கள் கொண்டு வந்த சில சட்டமன்ற சுவாரஸ்யங்கள் இங்கே...

 சட்டமன்ற உறுப்பினர்கள், உடன்வரும் தொண்டர்கள், அரசு அதிகாரிகள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் எனத் திருவிழாக் கூட்டம்போல இருக்கும் பழைய சட்டமன்றம். ஆனால் புதிய இடத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு உதவியாளர், டிரைவர் இவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதுவும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் இருதினங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது.

 கலைவாணர் அரங்கம் இருக்கும் வாலாஜா சாலையைக் குத்தகைக்கு எடுத்ததைப்போல காவல்துறையினர் கூட்டம். எந்த வாகனத்தையும் இந்தச் சாலையில் நிறுத்த அனுமதிக்கவில்லை. அரங்கத்திற்கு எதிர்ச் சாலையில் இருக்கும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களைக்கூட பார்க் செய்ய முடியாத வண்ணம் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

எப்படியிருக்கு புதிய சட்டசபை?

 வாலாஜா சாலையிலிருந்த டாஸ்மாக்குகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன, அந்தக் கடைகளுக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்கள் மட்டும், தேடி வந்து மூடிய கதவுகளைப் பார்த்துப் புலம்பிக்கொண்டே திரும்பிச் சென்றனர்.

 அரசியல் தலைவர்கள் செல்லும் சாலை அல்லவா, சுத்தமாக இருக்க வேண்டுமே?! கையில் ஒரு பிளாஸ்டிக் பையோடு நான்கு தூய்மைப் பணியாளர்கள், அந்த வாலாஜா சாலையின் அரை கிலோமீட்டர் தூரத்தைச் சுத்தம் செய்துகொண்டே நடந்தனர். ஒருமுறை இரண்டுமுறை அல்ல, அன்றைய நாள் முழுவதும் அவர்களது பணி அது. சிறு காகிதம்கூட சாலையில் இல்லாமல், குப்பைகளை அள்ளிக் கொண்டே மேலும் கீழும் அந்தச் சாலையில் நடந்தனர்.

எப்படியிருக்கு புதிய சட்டசபை?

 வெளியில் நிற்கும் காவலர்களுக்குத் தண்ணீர் பாட்டில், மதிய உணவு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சட்டமன்றம் நடக்கும் அவைக்குள் வழக்கமாக, வெள்ளை உடையணிந்த அவைக்காவலர்கள் பலர் இருப்பார்கள். எம்.எல்.ஏ-க்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போவார்களே அவர்கள்தான். வழக்கமாக 100 பேருக்கு மேல் இருப்பவர்கள் இம்முறை மிகக்குறைந்த அளவிலேயே இருந்தார்கள். அவர்களும் அவ்வப்போது டீ குடிக்க வெளியே வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

அவைக்குள்ளே இருந்த மாற்றங்கள் குறித்து, சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டோம்...

 கலைவாணர் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில் கூட்டத்தொடர் நடக்கும் அறை அமைக்கப்பட்டிருந்தது.

 பழைய சட்டமன்றத்தில் சபாநாயகர் வருவதை அறிவிக்க அவையின் மத்தியில் இருக்கும் சரவிளக்கு எரியவிடப்படும். இம்முறை சரவிளக்கு இல்லை.

 பழைய அவையில், சபாநாயகரின் பார்வை படும் இடத்திலேயே அனைவரும் அமர்ந்திருப்போம். ஆனால், புதிய அவையில் நாம் எழுந்துநின்றால்கூட அவருக்குத் தெரியாத அளவுக்கு இடைவெளி இருந்தது.

 பழைய அவையில் கூட்டம் அலைமோதும், அவைக்குள் சென்று வெளியே வருவதற்குள் அவ்வளவு நெருக்கடி இருக்கும், ஆனால் இங்கு அப்படி இல்லாமல் இருந்தது பெரும் விடுதலையாக இருந்தது.

எப்படியிருக்கு புதிய சட்டசபை?

 பிரமாண்டமான அந்த அரங்கத்தினுள், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டும் உள்ளே நுழைந்து வெளி வருவது, அந்த இடைவெளி இவையெல்லாம் தனி கம்பீரத்தை வழங்கின.

 புதிய இடத்தில் கழிப்பறை வசதிகள் சிறப்பாகவே இருந்தன.

 அரங்கத்தின் முகப்பு, காத்திருக்கும் இடம் இவையெல்லாம் விசாலமாக இருந்தன. ஆனால், உணவு அருந்துவதற்குத்தான் இடமில்லை. காரில் சென்று அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வர வேண்டியதாக இருந்தது.

 பலர் பிபீ, சுகர் என உடல் உபாதைகள் உள்ளவர்கள். உணவு இடைவேளை இல்லாமல் கூட்டம் நடந்ததால் சிறிது நேரம் வெளியேறி உணவருந்திவிட்டுத் திரும்பினர்.

 அரசு சார்பாகச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் கிரீன் டீ, சிறிய வறுத்த முந்திரிபாக்கெட் வழங்கப்பட்டன. குறைந்தது பிரட், பிஸ்கட் என வழங்கியிருந்தால்கூட மாத்திரை போடுபவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். சிலர் கொஞ்சம் கூடுதலாக முந்திரி கேட்டால்கூடக் கிடைக்காத நிலையில்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.