Published:Updated:

வேலூர் தொகுதியைக் குறிவைக்கும் த.மா.கா! - வெற்றி வாய்ப்பை கணிக்கும் அ.தி.மு.க

முதல்வருடன் எஸ்.ஆர்.கே.அப்பு
முதல்வருடன் எஸ்.ஆர்.கே.அப்பு

``எதிரில் நிற்பது துரைமுருகன் என்கிற ஆலமரம். காட்பாடி தொகுதியில் துரைமுருகனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல’’ என்று கணித்திருந்தார் ஜெயலலிதா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், `காஸ்ட்லி’ பிரமுகர்கள் பலர் வேலூர் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள். பட்ஜெட் பட்டியலையும் தயார்செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி சீட்டுக்குத் துண்டு விரித்திருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தமட்டில், வேட்பாளருக்குப் பஞ்சமில்லை. இருந்தபோதும், அ.தி.மு.க நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ரேஸில் முந்திச் செல்கிறார். தொகுதியில், செல்வாக்கு மிகுந்த நபராகவும் அப்பு வலம்வருகிறார். முதலியார் சமுதாய மக்களே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் அப்பு அதே சமூகம் என்பதும் கூடுதல் பலம். எளிமையான அணுகுமுறையும், தன்மையான பேச்சும் அவரை வேட்பாளராக முன்னிறுத்துகிறது.

துரைமுருகன்
துரைமுருகன்

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில், தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகனை காட்பாடி தொகுதியில் திக்குமுக்காடச் செய்தவர் அப்பு. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்புவின் தோல்வியை வெற்றிக்கான மையப்புள்ளியாகவே கருதினார். ஏனெனில், `எதிரில் நிற்பது துரைமுருகன் என்கிற ஆலமரம். காட்பாடி தொகுதியில் துரைமுருகனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல’ என்று கணித்திருந்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட துரைமுருகனுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியவர் அப்பு. இந்த முறை வெற்றி வாய்ப்பை கணித்து வேலூர் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார். இதற்காக, இப்போதிலிருந்தே மக்களைச் சந்திப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என அமர்க்களப்படுத்திவருகிறார் அப்பு.

வேலூர்: `மக்களை எம்.எல்.ஏ சந்தித்து 4 ஆண்டுகளாகின்றன!’ - சர்வே எடுத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

அ.தி.மு.க கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸும் வேலூர் தொகுதியைக் கேட்கிறது. மத்திய மாவட்டத் தலைவராக இருக்கக்கூடிய பி.எஸ்.பழனியை முன்னிறுத்துகிறது அக்கட்சி. அ.தி.மு.க-வின் அப்புவுக்கும், த.மா.கா-வின் பழனிக்கும் பொருத்தம் ஏறக்குறைய ஒத்துப்போகிறது. இருவருமே ஒரே சமூகம். கொரோனா பொதுமுடக்கத்தில், இரண்டு பேரும் போட்டிப் போட்டுக்கொண்டு மக்களைச் சந்தித்து உதவிகளைச் செய்தனர். பி.எஸ்.பழனியைப் பொறுத்தவரை தங்களுக்கான ராசியான தொகுதியாக வேலூரைப் பார்க்கிறார். வேலூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஞானசேகரன்.

பி.எஸ்.பழனி
பி.எஸ்.பழனி

1991-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானசேகரன், அடுத்து நடைபெற்ற 1996, 2001 சட்டமன்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்டார். பின்னர், 2006-ல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிபெற்றார். இரண்டு முறை தமிழ் மாநில காங்கிரஸில் போட்டியிட்ட ஞானசேகரனுக்கு சைக்கிள் சின்னம்தான் கைகொடுத்தது. எனவே, சைக்கிள் சின்னமும் வேலூர் மக்களுக்குப் புதிதல்ல. காங்கிரஸ், த.மா.கா-வின் கோட்டையாகவும் வேலூர் இருந்திருப்பதால், இந்த முறையும் த.மா.கா போட்டியிட விரும்புகிறது. அதேநேரம், ``கூட்டணியில் தலைமை வகிக்கும் அ.தி.மு.க எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு தேர்தல் பணிகளைச் செய்வோம்’’ என்றும் த.மா.கா நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு