Published:Updated:

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வுடன் முரண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க-வையே முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்து தனது அரசியல் சாணக்கியத்தனத்தைக் காட்டினார் எடப்பாடி.

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

அ.தி.மு.க-வுடன் முரண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க-வையே முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்து தனது அரசியல் சாணக்கியத்தனத்தைக் காட்டினார் எடப்பாடி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
‘எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று’ என்று வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்கின்றன, ‘இரு கழகங்களின்’ கூட்டணிக் கட்சிகளும். தனிப்பெரும்பான்மையை மனதில்கொண்டு சூதாடும் கழகத் தலைமைகள், ‘நாங்க என்ன இளக்காரமா’ என ஈகோ காட்டும் கூட்டணித் தலைமைகள், செலவுப் பிரச்னைகளால் குஸ்திபோடும் கீழ்மட்ட நிர்வாகிகள் என இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிக்குள்ளும் கடும் பூசல்கள். “கூட்டணி அமைப்பதே, தேர்தலில் ஒன்றிணைந்து வேலை செய்து வெற்றிபெறத்தான். ஆனால், ஒன்றாகச் சென்று ஓட்டுக் கேட்பதிலேயே ஆயிரம் பிரச்னைகள். கூட்டணியில் வைத்துக்கொண்டே தோற்கடிக்க நினைக்கும் இவர்கள் பகையாளிகளா... பங்காளிகளா?” எனக் கிறுகிறுத்துக் கிடக்கிறது கூட்டணிகளின் கூடாரம்!
பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

அ.தி.மு.க-வுக்குள் அதகளம்!

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோமோ அதே கூட்டணி இந்தத் தேர்தலிலும் தொடரும்’’ என்று எந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை... தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து கழன்று சென்றுவிட்டன. அ.தி.மு.க-வுடன் முரண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க-வையே முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்து தனது அரசியல் சாணக்கியத்தனத்தைக் காட்டினார் எடப்பாடி. அந்தத் திறமையைத் தேர்தல்வரை செயல்படுத்துவதில் எடப்பாடி தரப்பு கோட்டைவிட்டுள்ளது என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

இது குறித்துப் பேசிய அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், ‘‘பா.ம.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்ததே வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதால்தான். அவர்களுக்காகப் பல சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 10.5 சதவிகித வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு கொண்டுவந்தது. ஆனால், இப்போது தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர்கள் எங்களுக்குப் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. சில நாள்களுக்கு முன்பாக, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய முடிவானது. இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும் சொல்லியிருந்தோம். ஒரு இடத்திலாவது இருவரும் சேர்ந்து பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ராமதாஸ் ஓகே சொன்னால் பிரசார முறையை மாற்றவும் தயாராக இருந்தோம். ஆனால், ‘என்னால் வெளியே வர முடியாது’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் ராமதாஸ். ‘பிரசாரத்துக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை. தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்திக்கலாம்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டது. அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. அதோடு, அந்தக் கட்சியின் பிரசார முகமாக இருக்கும் அன்புமணியை அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்குப் பிரசாரத்துக்கு அழைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஓட்டுக் கேட்க போறதுக்கே இவ்வளவு பிரச்னைன்னா... ஜெயிச்சுட்டா என்னவாகுமோ” என நொந்துகொள்கிறார்கள்.

‘‘அ.தி.மு.க-வினர் இம்முறை ஜெயிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்...’’ என்று பா.ம.க-வினர் ஓப்பனாகவே சொல்வதாகப் புலம்புகிறார்கள் அ.தி.மு.க ஸ்டார் வேட்பாளர்கள் பலர். வட மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள், பா.ம.க-வினரைப் பிரசாரத்துக்கு மல்லுக்கட்டியே வரவழைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம், தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் ஏற்பட்ட சிக்கல்களே. செஞ்சி, மயிலம் உள்ளிட்ட தொகுதிகளை பா.ம.க-வுக்குக் கொடுத்ததை அ.தி.மு.க-வினர் விரும்பவில்லை. அதேபோல், ‘‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளை வேண்டுமென்றே எங்கள் தலையில் கட்டிவிட்டார்கள்’’ என்று பா.ம.க-வினர் புலம்புகிறார்கள்.

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

பாயும் பா.ம.க!

பா.ம.க தரப்பில் பேசினோம். ‘‘எங்களுக்குக் கேட்டதைக் கொடுத்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது. தேர்தல் செலவுகளை அ.தி.மு.க-வினர் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் செலவுக்குப் பணம் வாங்குவதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. பல ஆண்டுகளாக வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அதைக் கடைசி நேரத்தில் கொடுத்த அ.தி.மு.க., ‘உள் ஒதுக்கீட்டை நாங்கள்தான் கொடுத்தோம்’ என்று பிரசாரத்தில் சொல்லிவருகிறார்கள். ராமதாஸ் பெயரை மறந்தும்கூட அவர்கள் உச்சரிப்பதில்லை. இது எங்கள் தலைமைக்குக் கடும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எங்களை வைத்து அ.தி.மு.க தரப்பு பலன் அடைந்துகொள்ளப் பார்க்கிறது. அதில் எங்களுக்குக் கடுங்கோபம் இருப்பது உண்மைதான். ஆனாலும் ராமதாஸ் பிரசாரத்துக்கு வராததற்குக் காரணம், கொரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்திருப்பது மட்டுமே. எங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்வது போன்றே, அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளிலும் அன்புமணி பிரசாரம் செய்துதான் வருகிறார். அதற்காக அவர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஒரு தலைவர் செல்ல முடியுமா?

அ.தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகள் எங்களுக்குப் போதிய ஒத்துழைப்பைத் தருவதில்லை. நான்கு பகுதிச் செயலாளர்கள், 20 வட்டச் செயலாளர்கள் எனப் பெரும் படையே அ.தி.மு.க-விடம் இருந்தும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் கஸ்ஸாலியை அப்பகுதியின் அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. கஸ்ஸாலி எங்கள் தலைமையிடம் புலம்பியதற்குப் பிறகு, அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் பஷீர் தொகுதிக்கு வந்தார். ஆனால், அவரும் பணத்தைப் பட்டவர்த்தனமாகக் கொடுத்து சிக்கலைச் சந்தித்துள்ளார்’’ என்று பா.ம.க தரப்பில் புலம்புகிறார்கள்.

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

பா.ஜ.க பஞ்சாயத்து!

பா.ம.க-வுக்காவது வட மாவட்டங்களில் வலுவான கட்டமைப்பு இருக்கிறது. ஆனால், பா.ஜ.க களம்காணும் 20 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க-வின் தயவு கண்டிப்பாகத் தேவை. பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் பல தொகுதிகள் திணிக்கப்பட்டவை என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது. “நாங்கள் கேட்காத திருவையாறு, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்கி, எங்கள் கணக்கை ஆரம்பத்திலேயே காலிசெய்துவிட்டார்கள்” என்கிறது பா.ஜ.க தரப்பு.

பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘எங்களைக் கூட்டணிக் கட்சி என்ற கணக்குக்குள்ளேயே அ.தி.மு.க கொண்டுவரவில்லை. மாற்றுக் கூட்டணியை அணுகுவதுபோலவே அணுகுகிறார்கள். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து முறையாக நிர்வாகிகளைக்கூட ஒதுக்கிக் கொடுக்கவில்லை. தான் எதிர்பார்த்த காரைக்குடி தொகுதியை ஹெச்.ராஜா வாங்கிக் கொண்டதால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கடுப்பிலிருக்கும் அ.தி.மு.க-வினர், கடமைக்கென்று மட்டுமே ராஜாவுடன் களத்துக்கு வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில், தளவாய் சுந்தரம் ‘தான் மட்டும் ஜெயித்தால் போதும்’ என்ற நினைப்பில் தனி ஆவர்த்தனம் செய்கிறார். அந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் கட்சியினர், தனியாகவே பிரசாரத்துக்குச் செல்கிறார்கள். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்றுவிடுவார் என்று தலைமையே நம்பிக்கையோடு இருக்கிறது. ஆனால், அங்குள்ள அ.தி.மு.க-வினரோ நயினார் மீதான பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக உள்ளடி வேலைகளைப் பார்க்கிறார்கள்’’ என்று ஆவேசப்பட்டார்கள்.

இப்படி பா.ஜ.க கதறும் நேரத்தில், அ.தி.மு.க-வினரோ வேறு மாதிரியாகச் சொல்கிறார்கள். ‘‘உண்மையில் பா.ஜ.க-வுடன் நாங்கள் அணிசேராமல் இருந்திருந்தால்கூட கூடுதலாக வாக்குகள் கிடைக்கும்போலிருக்கிறது. பா.ஜ.க-வுடன் இணைந்து வாக்கு கேட்கச் செல்வதைக் கீழ்மட்டத்திலுள்ள கட்சியினர்கூட விரும்புவதில்லை. அ.தி.மு.க-வின் பல வேட்பாளர்கள் மோடி படத்தைக்கூட போஸ்டரில் போட விரும்பவில்லை. மத்தியில் அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், செலவுக்கு எங்களை எதிர்பார்க்கிறார்கள். என்னத்தைச் சொல்வது... எங்களை விடுங்கள்... எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜான் பாண்டியன் பா.ஜ.க-வுடன் இணக்கமாகத்தான் இருக்கிறார். ஆனால், அவரே ‘பா.ஜ.க-வினர் யாரும் என் தொகுதியில் வேலை செய்ய வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாரே.... அவரே இப்படியென்றால், அ.தி.மு.க தொண்டர்களைக் குறை சொல்லிப் பயனில்லை’’ என்கிறார்கள்.

இப்படிக் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பாதையில் பயணிப்பதால், அ.தி.மு.க வண்டி தேர்தல் களத்தில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது!

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

தி.மு.க-விலும் திகுதிகு!

இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் தி.மு.க-விலும் பிரச்னைகள் வரிசைகட்டுகின்றன. நீண்டகாலத் தோழமை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க நிர்வாகிகளுக்கும் இடையே தொகுதிகளில் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதில் ஏழு தொகுதிகள் காங்கிரஸின் சிட்டிங் தொகுதிகள். ‘காங்கிரஸ் கட்சிக்கே தொடர்ந்து அதே தொகுதிகளை ஒதுக்கினால், நாங்கள் எப்படிக் கட்சியை வளர்க்க முடியும்?’ என்ற கோபம் அந்தத் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.

அதேசமயம், காரைக்குடி தொகுதி ஐந்து முறைக்கும் மேல் காங்கிரஸ் வசமே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, குளச்சல் தொகுதிகள் தொடர்ந்து காங்கிரஸ் வசமே இருக்கின்றன. ‘‘இப்படி காங்கிரஸ் கோட்டையாக உள்ள தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு, தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லை. இம்முறை காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தால், அடுத்தமுறை தொகுதி நம் கைக்கு வந்துவிடும்’ என்று கணக்கு போட்டு தி.மு.க-வினர் காங்கிரஸ் கட்சியைக் காலிசெய்ய நினைக்கிறார்கள்’’ என்று கதறுகிறார்கள் கதர்ச் சட்டையினர்.

தி.மு.க தரப்பிலோ, ‘‘அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் போராட்டம் நடத்தியும்கூட, தலைமையிடம் கேட்டு அந்தத் தொகுதியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். தொகுதியைச் சாமர்த்தியமாக வாங்கிய நீங்கள்தானே செலவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மட்டும் எங்களை எதிர்பார்ப்பது நியாயமா? எங்கள் தலைவர் பிரசாரத்துக்கு வந்தபோது அந்த வேட்பாளரே வரவில்லை. இதற்காகத்தான் தொகுதியைக் கேட்டு வாங்கினார்களா?’’ என்று கொந்தளிக்கிறார்கள்.

காங்கிரஸ் வலுவாக உள்ள சில பகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை, காங்கிரஸ் தரப்பிலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ‘பணம் கொடுத்தால் வேலை செய்கிறோம்’ என்ற மனநிலையில் காங்கிரஸ் தொண்டர்களும் இருக்கிறார்கள். இப்படிக் கதர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி வருகிறது தி.மு.க.

பகையாளியா... பங்காளியா? கதறும் கூட்டணிக் கட்சிகள்

சிறுத்தைகளின் சீற்றம்!

‘‘தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்ற ஆறு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்’’ என்று திருமாவளவன் அறிவித்ததையே தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. அதேநேரம், தாங்கள் எதிர்பார்த்த தொகுதிகளைத் தராமல் வேறு சில தொகுதிகளை தி.மு.க தலைமை கொடுத்ததை சிறுத்தைகள் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தப் பிணக்கம் இப்போதும் தொடர்கிறது.

வானூர் தொகுதியில் போட்டியிடும் வன்னியரசு, நாகையில் ஆளுர் ஷாநவாஸ் உள்ளிட்டவர்கள் தி.மு.க-வின் தயவை நம்பியே களத்தில் நிற்கிறார்கள். வானூரில் பொன்முடி கண்டுகொள்ளாமல்விடவே, ஆரம்பத்திலேயே வன்னியரசுக்கு சிக்கல் வந்தது. ஜெகத்ரட்சகன் களத்தில் இறங்கிய பிறகே உற்சாகமானார் வன்னியரசு. ஆனாலும் களத்தில் கீழ்மட்ட தி.மு.க நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு சிறுத்தைகளிடம் இருக்கிறது. இதேநிலைதான் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் உள்ளது. ’’தொகுதிக்குள் செய்யப்படும் விளம்பரங்களில், ஏன்... பிட் நோட்டீஸ்களில்கூட திருமாவளவனை தி.மு.க-வினர் தவிர்க்கிறார்கள்’ எனப் புலம்புகிறார்கள் வி.சி.க-வினர். திருப்போரூர் தொகுதியை 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க கைப்பற்றியது. இம்முறை அத்தொகுதியை வி.சி.க-வுக்குக் கொடுத்ததில் தி.மு.க-வினர் கடுப்பில் இருக்கிறார்கள். இதனால் வி.சி.க வேட்பாளர் பாலாஜி திணறிவருகிறார்.

கம்யூனிஸ்ட்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் தி.மு.க-வினர் குறிப்பிடும்படி ஒத்துழைப்பு தருவதில்லை என்கிறார்கள். தென் மாவட்டத்தில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவரிடம் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் இருவர், ‘‘பணம் கொடுத்தால்தான் தேர்தல் பணிக்கு வருவோம்’’ என்று ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்கள். ‘‘நாங்களே வசூல் செய்துதான் தேர்தல் செலவைப் பார்க்கிறோம்’’ என்று வேட்பாளர் சோகமாகச் சொல்ல, ‘‘அப்படியென்றால் எங்கள் தலைமையிலிருந்து பணம் வரட்டும். வந்த பிறகு, நாம் ஒன்றாகப் பிரசாரத்துக்குப் போகலாம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

“இந்த உள்குத்துகளால், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதும், பூத் கமிட்டி பணிகளும் ரொம்பவே மந்தமாக நடக்கின்றன. ‘ஆட்சிக்கு வந்துவிடுவோம்’ என்ற அதீத மிதப்பில் தி.மு.க-வினர் இருப்பதே கூட்டணிக் கட்சியினரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம்” என்கிறார்கள் பாதிக்கப்படும் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள்.

“கூட்டணி என்பதே ஒரு கட்சியின் ஓட்டுகளை சக கூட்டணிக் கட்சியின் வேட்பாளருக்குப் பகிர்ந்துகொள்வதற்குத்தான். சிறிய கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்காமல் அலட்சியம் செய்து, கடந்த முறை ஆட்சி வாய்ப்பை இழந்தது தி.மு.க. இப்போது, வெற்றி மிதப்பு, பணப் பிரச்னை என இரண்டு கழகங்களும் இப்படித் தங்கள் கூட்டணிக்குள் அடித்துக்கொள்வது, அவர்களின் வெற்றிவாய்ப்பைக் கடுமையாக பாதிக்கும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிறது புறநானூறு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism