Election bannerElection banner
Published:Updated:

தேர்தல் பிரசாரமும் காற்றில் பறக்கும் கண்ணியமும்!

மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

கொதிக்கும் வெயிலுக்குப் போட்டியாக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு கெட்ட வார்த்தைகளில் சவால் விடுவதில் ஆரம்பித்து கொலை மிரட்டல் விடுப்பது வரையிலாக வேட்பாளர்களில் சிலர் வெறியேறித் திரிகிறார்கள். தமிழக தேர்தல் களத்தில் அனலடிக்கும் பிரசாரங்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை!

அரசியல் மேடை என்றாலே அனல் தெறிக்கும்... அதுவும் தேர்தல் நேர பிரசார மேடை என்றால், கண்ணியம் காற்றில் பறக்கும்! கொதிக்கும் வெயிலுக்குப் போட்டியாக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு கெட்ட வார்த்தைகளில் சவால் விடுவதில் ஆரம்பித்து கொலை மிரட்டல் விடுப்பது வரையிலாக வேட்பாளர்களில் சிலர் வெறியேறித் திரிகிறார்கள்.

எப்படியாவது வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில், ரோட்டோர கடையில் டீ குடித்து, பரோட்டா தட்டி, துணி துவைத்து, பாட்டிகளிடம் பாசம்காட்டி போஸ் கொடுப்பதெல்லாம் ப்ளாக் அண்ட் ஒயிட் பிரசாரங்கள்! விறுவிறு சுறுசுறுவென வார்த்தைகளில் வன்முறையைத் தடவி, எதிர்க்கட்சியினரை விளாசியெறிவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்!

ஆ.ராசா
ஆ.ராசா

அண்மையில், பெண்களின் கண்ணியத்தைக் குறைத்துப் பேசியதாகக்கூறி தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் வளர்ச்சி பற்றி உருவகமாகப் பேசியிருந்தார். அந்தப் பேச்சில், எடப்பாடி பழனிசாமியின் தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்தே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவில், 'தேர்தல் விதியின்படி ஓர் அரசியல் கட்சியோ, வேட்பாளரோ மற்றவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அவரது பொது நடவடிக்கையில் இல்லாத செயல்பாடுகள் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'எதிர்கால தேர்தல் பிரசாரங்களில் அநாகரிகமான, ஆபாசமான கருத்துகளை பேசுவதையும் பெண்களின் கண்ணியத்தை குறைத்து பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்' எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் இந்த அறிவுரையை நமது தலைவர்கள் எந்தளவு கடைப்பிடித்து வருகின்றனர் என்று ஒரு ரவுண்ட் வந்தோம்....

ராதாரவி - கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்
ராதாரவி - கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்

ஆ.ராசாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுப்பதாக பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர் நடிகர் ராதாரவி, தி.மு.க தலைவர்களை ஏக வசனத்தில் விமர்சிப்பதோடு 'கள்ள உறவு' என்ற தலைப்பில் நீண்ட விளக்கமும் கொடுத்து பகீர் கிளப்பிய பேச்சு வீடியோவாக இணையத்தை வலம் வருகிறது.

இதே ராதாரவி, சில நாட்களுக்கு முன்பு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு வாக்கு கேட்டு வலம் வந்தபோது, தன் பிரசாரம் முழுக்க கமல்ஹாசனை அவன், இவன் என ஏக வசனத்திலேயே தரை லோக்கலாக இறங்கி அடித்திருந்தார். 'பிக்பாஸ்ல ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் லிங்க் பண்ணிவிடுற வேலைதான் கமல்ஹாசனுக்கு. அமெரிக்காவுக்கு போயி யாராவது ஒரு இளிச்சவாய் பொம்பளையை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்துடுவான். ஒரு குடும்பத்தை உருப்படியா வாழவிட மாட்டான்' என்று தனிமனித தாக்குதலில் ஆரம்பித்து பிரசாரம் முழுக்க ஒருமையிலேயே திட்டித்தீர்த்து வாக்கு சேகரித்தார்(?!).

தேனி : `செந்தில் பாலாஜியைத் தொட்டுப் பாரு தம்பி..!’ - அண்ணாமலையை எச்சரித்த கனிமொழி!

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனும் வானதி சீனிவாசனை, 'துக்கடா அரசியல்வாதி' என்று தனது கட்சியின் அறிக்கையின் வழியே விமர்சிக்க... கொதித்தெழுந்த பா.ஜ.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். திரைப்படங்களில் கமல்ஹாசன் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளின் படங்களைத் தூக்கிப் பிடித்தவாறு, 'துப்பட்டா கமல்ஹாசன்' என கோஷமிட்டு ஆவேசத்தை தணித்துக்கொண்டனர்.

வானதி சீனிவாசனும் தனது பங்குக்கு பதிலடி கொடுக்க நினைத்து, ''என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லும் நடிகர் கமல்ஹாசன், இத்தனை நாள் 'லிப் சர்வீஸ்' மட்டுமேதானே செய்துகொண்டிருந்தார்'' என்றார் ஒரே போடாக. கூட்டம் விக்கித்து நிற்க... 'லிப் சர்வீஸ்' வார்த்தைக்கான அர்த்தத்தையும் விளக்க ஆரம்பித்த வானதி, ''லிப் சர்வீஸ் என்றால், இரண்டு அர்த்தம் உண்டு. ஒன்று உதட்டளவில் சேவை செய்வது, இன்னொன்று உதட்டுக்கு மட்டுமே சேவை செய்வது'' என்று டீட்டெயிலாக விவரித்து 'ஷாக்' கொடுத்தார்.

லியோனி - அன்புமணி ராமதாஸ்
லியோனி - அன்புமணி ராமதாஸ்

கோவை தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு வாக்கு கேட்டு வந்த தி.மு.க கொ.ப.செ திண்டுக்கல் லியோனி, நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்ற நினைப்பில், ''முன்பெல்லாம் 8 மாதிரி வளைவு நெளிவாக இருந்த பெண்கள் எல்லாம் இன்றைக்கு ஃபாரின் மாட்டுப் பால் குடித்து ட்ரம் - பலூன் மாதிரி வீங்கி விட்டார்கள்'' என் ஏடாகூடமாகப் பேசி நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார். இதுதான் கேப் என்று வீடியோவைக் கத்தரித்து இணையம் முழுக்கப் பரவவிட்டு பழி தீர்த்துக்கொண்டது எதிர்க்கட்சி ஐ.டி விங்!

பண்ருட்டி தொகுதியில், தங்கள் கூட்டணிக் கட்சிக்கு வாக்கு சேகரித்துவந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், எதிர்க்கட்சி வேட்பாளரான த.வா.க தலைவர் தி.வேல்முருகனை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். 'பொறுக்கி'யில் ஆர்ம்பித்த பிரசார உரையை, 'அவன், இவன், கேவலமானவன், டகுல் பையன், கொலைகாரன், கொள்ளைக்காரன்' என தமிழில் உள்ள அனைத்து 'ன்' விகுதிகளையும் பயன்படுத்தி நிறைவு செய்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு... கொதித்த சுஷ்மா, அருண் ஜெட்லி மகள்கள் - என்ன பிரச்னை?

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, ''செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா, பல்லு, கில்லெல்லாம் வெளியே வந்துடும். எனக்கு இன்னொரு முகம் இருக்கு... அது கர்நாடகா முகம். அதைக் காட்டவேண்டாம்னு நினைக்கிறேன்'' என்று 'மாணிக்' பாட்ஷா ரேஞ்சுக்கு பஞ்ச் வைத்தார். நிறைவாக ''இதை வீடியோவா எடுத்து தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துக்கோ... பயப்படுற ஆளு நான் இல்லை'' என்று கெத்து காட்டியதுதான் ஹைலைட்!

அண்ணாமலை - தயாநிதிமாறன்
அண்ணாமலை - தயாநிதிமாறன்

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதிமாறன், ''அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'எங்கள் அம்மா எங்களுக்கு மம்மி; மோடி எங்களுக்கு டாடி' என்று சொல்லியிருக்கிறார். என்ன உறவு முறை பாருங்க.... இதையே நாம் சொல்லியிருந்தால், குய்யோ முய்யோ என கத்துவார்கள்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக வில்லங்கத்தைப் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரம் முடிவதற்குள் இன்னும் என்னென்ன வார்த்தைச் சவடால்களையெல்லாம் பார்க்கப்போகிறோமோ!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு