Published:Updated:

க்ளைமாக்ஸ்! - அனல் பறக்கும் 37 தொகுதிகள்!

தினகரன் - கமல் - சீமான்
News
தினகரன் - கமல் - சீமான்

‘காங்கிரஸ் கட்சியின் கோட்டை’ என்று வர்ணிக்கப்படும் காரைக்குடி தொகுதியைத் தகர்க்கும் வேலையை அ.ம.மு.க-வின் வேட்பாளர் தேர்போகி பாண்டி பார்ப்பதால், கதறுகிறது கதர்க் கட்சி.

தமிழகத் தேர்தலில் க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 234 தொகுதிகளிலும் பிரசார சூறாவளி வீசியடித்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கூட்டணிகளும் நேருக்கு நேர் ஆக்ரோஷமாக மோதுகின்றன. அ.ம.மு.க-வும் மக்கள் நீதி மய்யமும் தங்களுக்கென தனி அணி அமைத்துக்கொண்டு களத்தில் நுழைய, நாம் தமிழர் கட்சி தனித்து நின்று எல்லோரோடும் மோதுகிறது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே அதிக தொகுதிகளைப் பிடிக்க வேண்டும் என்று திட்டமிடுகின்றன. எனவே, 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு கட்சிகளும் தங்களின் சொந்தச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இவற்றில் கணிசமான தொகுதிகளில் அ.ம.மு.க., ம.நீ.ம., நா.த.க., செல்வாக்கான சுயேச்சைகள் என ஏதோ ஒரு சக்தி பிரிக்கும் வாக்குகள், தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்கள், குறிப்பிட்ட தொகுதியின் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகள், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, பத்தாண்டு ஆட்சியின் மீதான விமர்சனம் என வாக்குகள் சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக 37 தொகுதிகளில் இம்முறை தேர்தல் மோதல், அக்னிப் பரீட்சையாக இருக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். எல்லா வியூகங்களைக் கடந்தும் களத்தில் கடும் போட்டியைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதிகளில், ஐந்து அமைச்சர்களின் தொகுதிகளும் சிக்கியிருக்கின்றன என்பதுதான் தீப்பொறி பறக்கும் விஷயம்.

க்ளைமாக்ஸ்! - அனல் பறக்கும் 37 தொகுதிகள்!

கோட்டையைத் தகர்க்குமா அ.ம.மு.க.?

‘காங்கிரஸ் கட்சியின் கோட்டை’ என்று வர்ணிக்கப்படும் காரைக்குடி தொகுதியைத் தகர்க்கும் வேலையை அ.ம.மு.க-வின் வேட்பாளர் தேர்போகி பாண்டி பார்ப்பதால், கதறுகிறது கதர்க் கட்சி. காங்கிரஸ் கட்சியில் தேவகோட்டை வேலுசாமி, சங்கராபுரம் மாங்குடி இருவருமே சீட் எதிர்பார்த்தனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கார்த்தி சிதம்பரத்துக்குப் போட்டியாக வேலுசாமி சிவகங்கைத் தொகுதியில் சீட் கேட்டிருந்தார். அதனால் அவருக்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதில் ப.சிதம்பரம் தரப்பு வம்படியாக நின்றதாம். முடிவில், மாங்குடிக்கு தொகுதி ‘க்ளிக்’ ஆகிவிட்டது. தேவகோட்டை நகர சேர்மனாக வேலுசாமி இருந்தபோதே தனக்கென ஒரு வாக்குவங்கியை அந்தப் பகுதியில் உருவாக்கி வைத்திருக்கிறார். இப்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்களெல்லாம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு தேர்தல் வேலை பார்க்காமல் ஒதுங்கிவிட்டனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு ஒன்றியங்களில் சேர்மன் பதவியை வென்றது அ.ம.மு.க. ஒன்று, கயத்தார். அந்தக் கயத்தாரை உள்ளடக்கிய கோவில்பட்டி தொகுதியில்தான் டி.டி.வி.தினகரன் நிற்கிறார். அ.ம.மு.க பெற்ற இன்னோர் ஒன்றியம், கண்ணங்குடி. இதை அ.ம.மு.க-வுக்குப் பெற்றுத் தந்த தேர்போகி பாண்டிதான் காரைக்குடி வேட்பாளர். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி, கணிசமான வாக்குகளை காரைக்குடியில் அள்ளினார். இதுபோக, காரைக்குடி நகருக்குள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளுக்காகக் களப்பணியாற்றிய தமிழக மக்கள் மன்றத்தின் ராஜ்குமார், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுகிறார். இந்தக் களேபரத்தில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜாவின் ‘ஜிகர்தண்டா’ விற்பனையாகவில்லை. களத்தில் போட்டி காங்கிரஸ் Vs அ.ம.மு.க என்று மாறியிருப்பதால், காரைக்குடி தகிக்கிறது.

க்ளைமாக்ஸ்! - அனல் பறக்கும் 37 தொகுதிகள்!
க்ளைமாக்ஸ்! - அனல் பறக்கும் 37 தொகுதிகள்!

அமைச்சருக்கு வெடிவைக்கும் கள நிலவரம்

டி.டி.வி.தினகரன் நிற்கும் கோவில்பட்டியிலும் மோதல், அ.ம.மு.க. Vs அ.தி.மு.க இடையே என்று மாறியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் கயத்தார் ஒன்றியத்தைக் கைப்பற்றியதால் தெம்பாக இருக்கிறது அ.ம.மு.க. முக்குலத்தோர் வாக்குகள் வலுவாக இவர்களுக்குக் கிடைக்கும். தெலுங்கு பேசும் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தே.மு.தி.க-வும் கூட்டணியில் இருப்பதால், நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தினகரனின் ஆதரவாளர்கள். சி.பி.எம் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனுக்கு தேர்தல் வேலை செய்வதில் தி.மு.க-வினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்தத் தொகுதியில் தினகரனை எதிர்த்துப் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.ம.மு.க தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜாவின் பூத் கமிட்டி வேலைகளால் சற்று மிரண்டுதான் போயிருக் கிறார். சமீபத்தில் பிரசாரத்துக்குச் சென்ற கடம்பூர் ராஜூவின் கார் அருகே அ.ம.மு.க தொண்டர் ஒருவர், சரவெடியைக் கொளுத்திப் போடவும், பட்டாசு வெடித்ததில் ‘ஜெர்க்’ ஆகிவிட்டார் கடம்பூர் ராஜூ. தேர்தல் முடிவு அவருக்கு மேலும் ‘ஜெர்க்’ ஊட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சாத்தூர் தொகுதியை எதிர்பார்த்திருந்த அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு ‘அல்வா’வைப் பரிசாக கொடுத்தனுப்பியது அ.தி.மு.க. வெகுண்டெழுந்த ராஜவர்மன் தடாலடியாக அ.ம.மு.க-வில் இணைந்து, அந்தக் கட்சியின் சாத்தூர் வேட்பாளராகவும் களம் புகுந்துவிட்டார். பிரசாரத்துக்குச் செல்லுமிட மெல்லாம், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க-வையே அழிச்சுட்டார். அவரால விருதுநகர் அ.தி.மு.க-வே நாசாமாப் போயிடுச்சு” என்று ராஜவர்மன் பேசுவது, ராஜேந்திர பாலாஜி மீது வருத்தத்திலிருக்கும் அ.தி.மு.க தொண்டர்களை அ.ம.மு.க பக்கம் ஈர்த்துள்ளது. இந்தப் பிரசாரத்தை எதிர்கொள்ள முடியாமல் அ.தி.மு.க வேட்பாளர் ரவிச்சந்திரன் திண்டாடுகிறார். இவர்களுக்கு இடையில் புகுந்து ம.தி.மு.க வேட்பாளர் ரகுமான் ஸ்கோர் செய்வது தனிக்கதை. ராஜவர்மனின் கம்பு சுற்றலால், களத்தில் புயல் கிளம்பியிருப்பது என்னவோ நிஜம்.

 கடம்பூர் ராஜு - தேர்போகி பாண்டி - எல்.முருகன் - பழனியப்பன்
கடம்பூர் ராஜு - தேர்போகி பாண்டி - எல்.முருகன் - பழனியப்பன்

சிக்கலில் உதயகுமார்; கைகொடுக்குமா மாத்திரை?

தமிழ்நாட்டிலேயே பெரிய நெருக்கடியைச் சந்தித்திருக்கும் அமைச்சர் யாரென்றால், அது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான். திருமங்கலத்தில் உதயகுமாருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த மருதுசேனை இயக்கத்தின் தலைவர் கரு.ஆதிநாராயணனை வேட்பாளராக்கியிருக்கிறது அ.ம.மு.க. தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் அகமுடையார் வாக்குகளை ஆதிநாராயணன் பிரிப்பார் என்கிற சூழலில், மறுபக்கம், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனை உதயகுமாருக்கு எதிராகக் களமிறக்கியிருக்கிறது அறிவாலயம். மத்தளத்துக்கு இருபக்கமும் இடி என்பதுபோல, அ.ம.மு.க., தி.மு.க தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறார் உதயகுமார். பிரம்மாஸ்திரமாக ‘சத்து’ மாத்திரைகளை மட்டுமே அவர் நம்பியிருக்கிறார். ஆனாலும், களத்தில் அனல்பொறி பறப்பதால் உதயகுமாரின் மாத்திரைகள் பஸ்பமாகும் வாய்ப்புகள் அதிகம்.

தி.மு.க வர்த்தக அணி துணைத் தலைவராக இருந்த அய்யாதுரை பாண்டியன் கடையநல்லூர் தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், தொகுதியைக் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால் கடுப்பான அய்யாதுரை பாண்டியன், அ.ம.மு.க-வில் இணைந்து அந்தக் கட்சியின் கடையநல்லூர் வேட்பாளராகவும் ஆகிவிட்டார். அய்யாதுரையின் பணபலமும், அ.ம.மு.க-வின் முக்குலத்தோர் வாக்குவங்கியும் ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் அபுபக்கருக்கும், அ.தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணமுரளிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. கணிக்க முடியாத கட்டத்தில் கடையநல்லூர் சிக்கியிருக்கிறது.

அனல் தெறிக்கும் ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தனித்துக் களமிறங்கியிருப்பதால், கள நிலவரமே கனலைக் கக்குகிறது. ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்ததால், தனக்கென 50,000-க்கும் குறைவில்லாத வாக்குவங்கியைத் திரட்டி வைத்திருக்கிறார் கிருஷ்ணசாமி. அ.தி.மு.க-வில் மோகன், தி.மு.க-வில் சண்முகைய்யா, தே.மு.தி.க-வில் ஆறுமுக நயினார் ஆகியோர் களத்திலிருப்பதால், நான்குமுனைப் போட்டியில் நாலாபக்கமும் கட்சிகளைச் சிதறவிடுகிறது ஓட்டப்பிடாரம்.

உசிலம்பட்டி அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் அந்த வட்டாரத்தில் சொந்தச் செல்வாக்கு உள்ளவர். அந்தத் தொகுதியில் பல்வேறு ஊர்களில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடைபெற்றிருப்பது ஆளும்தரப்பை அதிரச் செய்திருக்கிறது.

ஆண்டிப்பட்டியில் தி.மு.க சார்பில் களமிறங்கும் மகாராஜனும், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள். இதையே ஓர் எதிர்ப் பிரசாரமாக முன்னெடுக்கிறார் அ.ம.மு.க வேட்பாளர் ஜெயக்குமார். டி.டி.வி.தினகரனுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்காக வாக்குவங்கி இங்கு உண்டு. தே.மு.தி.க-வுக்கும் கணிசமாக இங்கு வாக்குகள் உண்டு என்பதால், இதர வேட்பாளர்கள் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள்.

மிகவும் கலர்ஃபுல்லான தொகுதியாக மாறியிருக்கிறது கோவை தெற்கு. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் பா.ஜ.க வேட்பாளராக வானதி சீனிவாசனும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். காலையில் வாக்கிங், அவ்வப்போது தெருவில் இறங்கி நடப்பது, ஆட்டோவில் செல்வது என்று தொகுதியையே பரபரப்பின் உச்சத்தில் வைத்திருக்கிறார் கமல். வானதிக்காக மொத்த அ.தி.மு.க நிர்வாகப் படை யையும் களத்தில் இறக்கியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி. தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்கள், தி.மு.க-வின் வாக்குவங்கியை பலமாகக் கருதுகிறார் மயூரா ஜெயக்குமார். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கமல் எடுத்துவைத்திருக்கும் பிரசாரம் பேசுபொருளாகியிருக்கிறது. முக்கோண முட்டல் மோதலில் தீப்பிழம்பாகியிருக்கிறது கோவை தெற்கு.

உடுமலைப்பேட்டையில் கொங்கு வேளாளர் சமூகத்தவர்கள் கணிசமாக இருப்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தென்னரசுவை காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க கூட்டணி. இந்தத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தவர் என்பதால், இந்த சமூகக் கணக்கை முறியடிக்க முடியாமல் திணறுகிறார். பொள்ளாச் சியிலும் இதே பிரச்னைதான். அங்கும் கொங்கு வேளாளர் சமூகத்தினர் கணிசமாக இருப்பதால், அவர்களின் வாக்குகளைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட முடியாமல் தவிக்கிறார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன். போதாக்குறைக்கு, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஜெயராமனுக்கு எதிரான பிரசார ஆயுதமாக மாற்றியிருக்கிறது தி.மு.க. இந்த அனல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் ஜெயராமன்.

ராஜவர்மன் - ஆர்.பி.உதயகுமார் - வானதி சீனிவாசன்
ராஜவர்மன் - ஆர்.பி.உதயகுமார் - வானதி சீனிவாசன்

வெல்வாரா சீமான்... தாக்குப்பிடிப்பாரா முருகன்?

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, திருவொற்றியூர் தொகுதியில் 15,000 வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. கட்சியின் கட்டமைப்பும் வலுவாக இருப்பதால், தெம்பாக இருக்கிறார் அந்தக் கட்சியின் வேட்பாளரும், தலைவருமான சீமான். தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் இரண்டுமே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியிருப்பதால், இதர சமூகங்களின் வாக்குகளை அணிதிரட்டுகிறார் சீமான்.

தாராபுரம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். இது, பட்டியலின வெளியேற்றத்தை முன்வைக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஸ்கோர் செய்ய முயல்வதால், அதிரிபுதிரி ஆகியிருக்கிறது தாராபுரம் தொகுதி.

பெருந்துறை தொகுதியின் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வாக இருந்த தோப்பு வெங்கடாசலம், தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், பத்து ஆண்டுகள் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். இவர் அ.தி.மு.க-வுக்கு விழும் வாக்குகளை கணிசமாகப் பிரிக்கும் சூழல் நிலவுகிறது.

இதே போன்ற ஒரு சூழல் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திலும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ சந்திரசேகரனுக்கு சீட் தராததால், அவர் சுயேச்சையாக நிற்கிறார். அ.தி.மு.க வேட்பாளர் சந்திரனுக்கு இது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமி இதைவைத்து ஸ்கோர் செய்யப் பார்க்கிறார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அ.ம.மு.க வேட்பாளராகக் களமிறங்குகிறார் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன். தனக்கென தனிப்பட்ட செல்வாக்கைத் தொகுதிக்குள் வளர்த்து வைத்திருப்பதும், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க-வில் இணைந்திருப்பதும் தொகுதிக்குள் கள நிலவரத்தை வெகுவாக மாற்றியிருக்கின்றன.

இதே களநிலவர மாற்றத்தை திருவாடானை தொகுதியில் ஏற்படுத்தியிருக்கிறார் அ.ம.மு.க வேட்பாளர் ஆனந்த். 2019 நாடா ளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டபோதே, 1.41 லட்சம் வாக்குகளை ஆனந்த் பெற்றார். இந்தக் கணக்கால் திராவிடக் கட்சிகள் இரண்டும் கலங்கித்தான் போயிருக்கின்றன.

சைதாப்பேட்டை தொகுதியில் களமிறங்கியிருக்கும் மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி, செந்தமிழன் மூவருமே பலமுள்ள வேட்பாளர்கள். தொகுதியில் வன்னியர்கள் கணிசமாக இருப்பதால், அந்தச் சமூக வாக்குகளை அ.ம.மு.க செந்தமிழன் குறிவைத்திருக்கிறார். பா.ம.க உடனிருப்பதால் வன்னியர் வாக்குகளுடன் அ.தி.மு.க வாக்குகளும் தனக்குக் கிடைக்குமென சைதை துரை சாமி நம்புகிறார். கட்டமைப்புரீதியாக பலமாக இருப்பதால், தொகுதியை தி.மு.க-வின் கோட்டையாக்க மா.சுப்பிரமணியன் முயல்கிறார். இந்த முக்கோண மோதலில் அனலைத் தெறிக்கவிடுகிறது சைதை தொகுதி.

விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க-வும் காங்கிரஸும் மோதுகின்றன. இந்தச் சூழலில் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜய காந்த் போட்டியிடுவதால், தொகுதியில் உஷ்ணம் அதிகரித்திருக்கிறது. விஜயகாந்த் முதன்முறையாக ஜெயித்த தொகுதி என்ற சென்டிமென்ட் பிரேமலதாவுக்கு கைகொடுக்கிறது.

திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க சார்பில் பழனி யாண்டியும், அ.தி.மு.க-வில் கு.ப.கிருஷ்ணனும் போட்டியிட, மூன்றாவது ஃபோர்ஸாக இறங்கியிருக் கிறார் அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சாருபாலா, திருச்சி வட்டாரத்தில் நன்கு அறிமுகமான முகம். முன்னாள் கொறடா மனோகரனின் தேர்தல் பணி, அவருக்குக் கூடுதல் பலம்.

மா.சுப்பிரமணியன் - சைதை துரைசாமி - பிரேமலதா -  மகேந்திரன்
மா.சுப்பிரமணியன் - சைதை துரைசாமி - பிரேமலதா - மகேந்திரன்

பாபநாசம், திருப்பரங்குன்றம், மானாமதுரை, திண்டுக்கல், ஒரத்தநாடு, திருவையாறு, திருப்பத்தூர், குடியாத்தம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கந்தர்வக்கோட்டை, விருதுநகர் ஆகிய தொகுதிகள் அ.ம.மு.க-வின் வலுவான வேட்பாளர்களால் முக்கோண சிக்கலைச் சந்தித்திருக்கின்றன. ஒரத்தநாட்டில் அ.ம.மு.க வேட்பாளர் சேகருக்கு ஆதரவாக 40,000 முக்குலத்தோர் வாக்குகள் இருப்பதால், அரண்டுபோயிருக்கிறார் அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம். விராலிமலையில் முத்தரையர் சமூகத்தினர் வாக்குகளைப் பிரிப்பதற்காக அ.ம.மு.க-வில் கார்த்தி பிரபாகரன், சுயேச்சையாக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலெட்சுமி ஆகியோர் களமிறங்கியிருக்கின்றனர். இதனால், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திக்கித் திணறுகிறார். பிரசாரத்துக்குச் செல்லுமிடமெல்லாம் மனதை உருகவைக்கும் பேச்சை அவர் அவிழ்த்துவிட்டாலும், கள நிலவரம் கடுமை யானதாகவே இருக் கிறது. திருமயத்திலும் சுயேச்சையாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் போட்டியிடுவது, தி.மு.க., அ.தி.மு.க வேட்பாளர்களின் வாக்குகளைப் பதம் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் ஐ.ஜே.கே கட்சியின் சார்பில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா களமிறங்கியிருப்பதால், பா.ம.க வேட்பாளர் பாலுவுக்கும், தி.மு.க வேட்பாளர் கண்ணனுக்கும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம துணைத் தலைவர் மகேந்திரன் களமிறங்கியிருப்பது, தி.மு.க., அ.தி.மு.க-வின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கோவையில் ஒன்றரை லட்சம் வாக்குகளை அவர் பெற்றிருப்பதுதான் அச்சத்துக்கான காரணம்.

இந்த 37 தொகுதிகளும்தான் ஆட்சியைத் தீர்மானிக்கப் போகின்றன என்று அர்த்தமல்ல. ஆனால், இந்தத் தொகுதிகள் ஏற்படுத்தும் தாக்கம், மற்ற தொகுதிகளிலும் பிரதிபலிக்கலாம். அதனால், தேர்தல் முடிவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.