Published:Updated:

மாற்றிய சீமான்... ஏமாற்றிய தினகரன்... ஏமாந்த கமல்!

சீமான்...  தினகரன்... கமல்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்... தினகரன்... கமல்

மண்ணுக்கான அரசியலைப் பேசினார் சீமான். அடுத்து, ‘பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து வாழுங்கள்; ஆனால், ஆள நினைக்காதீர்கள்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

மாற்றிய சீமான்... ஏமாற்றிய தினகரன்... ஏமாந்த கமல்!

மண்ணுக்கான அரசியலைப் பேசினார் சீமான். அடுத்து, ‘பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து வாழுங்கள்; ஆனால், ஆள நினைக்காதீர்கள்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

Published:Updated:
சீமான்...  தினகரன்... கமல்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்... தினகரன்... கமல்
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சொன்னதுபோலவே தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. அதேசமயம் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணி தவிர்த்து தனிக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அ.ம.மு.க., ம.நீ.ம மற்றும் தனியாகவே களம்கண்ட நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியை மூன்றாம் இடத்துக்குக் கொண்டுவந்து மாற்று சக்தியாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
மாற்றிய சீமான்... ஏமாற்றிய தினகரன்... ஏமாந்த கமல்!

“நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது எப்படி?” என்று விவரித்தார் தமிழகத்தின் மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவர். “தி.மு.க-வின் பர்ஃபார்மன்ஸில் பின்னடைவு ஏற்பட்டதற்கும், அ.தி.மு.க இரண்டாம் இடம் பிடித்ததற்கும் காரணம், நாம் தமிழர் கட்சிதான். தி.மு.க-வின் வாக்குவங்கியான சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் வாக்குகளை உடைத்து, தன் பக்கம் திருப்பியதால்தான் நாம் தமிழர் கட்சியால் மூன்றாமிடத்தைப் பிடிக்க முடிந்தது. தவிர, ‘மைக்ரோ கம்யூனிட்டீஸ்’ எனப்படும் அரசியல் அதிகாரங்களைச் சுவைத்திராத முடி திருத்துவோர், மண் பாண்டங்கள் செய்வோர் உள்ளிட்ட சமூகங்களை முன்னிறுத்தியதும் சீமானின் உத்திகளில் ஒன்று.

மூன்றாவது அணி என்றில்லாமல், மூன்றாவது ‘தனி’ என்கிற கான்செப்ட்டை அவர் முன்வைத்தார். அசுர சக்தியுடன் முதல் மற்றும் இரண்டாம் இடங்களிலிருக்கும் கட்சிகளை எதிர்த்து சீமான் தனித்துப் போட்டியிட்டதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ‘திராவிடத்துக்கும் ஆரியத்துக்குமான போர்’ என்று திராவிடக் கட்சிகள் சொல்லிவந்த நிலையில், சீமானோ ‘திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான போர்’ என்றார். கோட்பாட்டுரீதியாக ‘காங்கிரஸ் என் இனத்தின் எதிரி’ என்றும், ‘பா.ஜ.க மனிதகுலத்தின் எதிரி’ என்றும் சொன்ன சீமான், ‘ஒரு திராவிடக் கட்சிக்கு இன்னொரு திராவிடக் கட்சி எப்படி மாற்றாகும்?’ என்று திராவிடத்தை எதிர்த்தார். மேலும், எந்தக் கட்சியுமே பரீட்சார்த்த முறையில்கூட செய்திராத வகையில், 117 தொகுதிகளைப் பெண்களுக்குக் கொடுத்தார்.

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருக்க, ‘எல்லா உயிர்களுக்குமான அரசியல்’ என்று முழங்கினார். மண்ணுக்கான அரசியலைப் பேசினார் சீமான். அடுத்து, ‘பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து வாழுங்கள்; ஆனால், ஆள நினைக்காதீர்கள்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

எந்தப் பின்புலமும் இல்லாமல், சாதி, மதங்களைச் சாராமல் ‘கேஸ்ட் நியூட்ரல்’ தலைவராகவும் அவர் பார்க்கப்படுகிறார். அதனால்தான், பொதுத்தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியில், அந்தச் சமூகத்தைச் சாராதவர்களையும் நிறுத்தியது பெரிய ப்ளஸ்ஸாகப் பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு இயற்கை, விவசாயம் உள்ளிட்டவற்றின்மீது பொதுமக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதால், விவசாய சின்னம் வெகுஜன சின்னமாக பிரபலமாகிவிட்டதும் சீமானுக்கான ப்ளஸ். தி.மு.க., அ.தி.மு.க-போல வெளிப்படையாக இல்லாமல், நாம் தமிழர் கட்சிக்காக ஒரு வியூக அமைப்பாளர் வியூகம் அமைத்துக் கொடுத்ததும் இந்த அங்கீகாரத்துக்கு ஒரு காரணம். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளர்களுக்குக் காசு கொடுக்காமல், மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறார் சீமான்.

எல்லாம் சரி... வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே வாக்குவங்கியை அவர் தக்கவைத்துக்கொள்வாரா என்பதே பலரது கேள்வி!

மாற்றிய சீமான்... ஏமாற்றிய தினகரன்... ஏமாந்த கமல்!

‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதே லட்சியம்’ என்று சொல்லித்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். நாள்கள் செல்லச் செல்ல அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, அ.ம.மு.க-வைத் தனிப்பெரும் கட்சியாக்கும் வேலைகளில் இறங்கினார். சிறைவாசம் முடிந்து சசிகலா விடுதலையானதும், ‘அ.ம.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வேண்டும்’ என நிர்பந்தித்தார். ஆனால், ஜெ-வுடன் இருந்து, தான் வளர்த்த கட்சிக்கு எதிராகப் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அரசியலிலிருந்தே ஒதுங்கினார் சசிகலா. இந்தநிலையில்தான், தனது தலைமையில் கூட்டணியை அமைத்து களம்கண்டார் தினகரன்.

தினகரனின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியிலிருக்கும் அவரது முகாமைச் சேர்ந்தவர்கள் சிலர் நம்மிடம் மனம் திறந்து பேசினார்கள்... “தன் வளர்ச்சிக்காகப் பலரையும் தினகரன் ஏமாற்றியதுதான் அவரது தோல்விக்குக் காரணம். பன்னீர் தர்மயுத்தம் நடத்தியபோது துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான் சிறைக்குச் சென்றார் சசிகலா. ஆனால், அந்தப் பொறுப்பிலிருந்து கட்சியை வழிநடத்தாமல், முதல்வராக முயன்றபோதே தினகரனின் சரிவு தொடங்கிவிட்டது.

‘தனிக்கட்சி வேண்டாம்’ என்று சசிகலா சொன்னதைக் கேட்காமல் அ.ம.மு.க-வைத் தொடங்கினார் தினகரன். ‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றத்தான் அ.ம.மு.க தொடங்கப்பட்டது’ என்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நம்பவைத்தார். ‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்பதற்கு நாம் காரணமானதுபோல, இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் காரணமாவோம். இதன் மூலமே அ.தி.மு.க-வை மீட்க முடியும்’ என்று கட்சி நிர்வாகிகளிடம் உசுப்பேற்றினார். ‘தைரியமாக நில்லுங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி, தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்காமல் வேட்பாளர்களை ஏமாற்றினார். இவ்வாறு தொடர்ச்சியாக ஏமாற்றி, தனிப்பெரும் கட்சியாக அ.ம.மு.க-வை நிலைநிறுத்த முயன்றார்.

ஆனால் பணம் வராததாலும், எப்படியும் தோற்கப்போகிறோம் என்று தெரிந்ததாலும், வேட்பாளர்கள் பலரும் அ.தி.மு.க ‘வலை’யில் சிக்கி, தினகரனை மண்ணைக் கவ்வச் செய்துவிட்டனர். இன்னொரு பக்கம், சசிகலாவின் அரசியல் விலகலும் அ.ம.மு.க-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது” என்றார்கள் விரிவாக.

மாற்றிய சீமான்... ஏமாற்றிய தினகரன்... ஏமாந்த கமல்!

‘பத்து தொகுதியிலாவது வெற்றிபெறுவோம்’ என்று நம்பியிருந்த கமல், கடைசி நிமிடத்தில் தனது தொகுதியிலேயே தோல்வி யடைந்திருக்கிறார். இதற்கான காரணங்கள் தொடர்பாக கமல்ஹாசனை நெருக்கமாக கவனித்துவரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் நம்மிடம் பேசினார். “தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று தன்னை அறிவித்துக்கொண்டுதான் அரசியலில் இறங்கினார் கமல். ஆனால், தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுக்க வந்த பிரசாந்த் கிஷோர், வந்த வேகத்திலேயே யூ டர்ன் அடித்துக் கிளம்பினார். அதனால் தனியாக ஒரு வியூக நிறுவனத்தை உருவாக்கி, அதன் கன்ட்ரோலில் கட்சியை வழிநடத்தினார். ஆனால், வெகுஜன மக்களிடம் அந்த வியூகங்கள் சென்றடையவே இல்லை. இதுவே அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ரஜினி அரசியல் விலகல் முடிவை அறிவித்தபோது, தனக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்தினார் கமல். ஆனால், ரஜினி கண்டுகொள்ளவில்லை. கமலும், டாக்டர் மகேந்திரனும் தவிர்த்து கட்சிக்கு நிதி அளிக்கக்கூடிய சோர்ஸ் யாருமே இல்லாமல், தேர்தலைச் சந்தித்ததிலும் ஏமாற்றம். இதுமட்டுமன்றி, மேலும் சில விஷயங்களில் கோட்டைவிட்டார் கமல்.

தன்னை நேர்மையின் சிகரமாகக் காட்டிக்கொண்டு, திராவிடக் கட்சிகளை ஊழல்வாதிகள் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் அவரது கட்சியின் பொருளாளர் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கமல். ‘நானும் கூட்டணி அமைக்கிறேன்’ பேர்வழி என்று பாரிவேந்தரின் ஐ.ஜே.கே மற்றும் சரத்குமாரின் ச.ம.க ஆகிய கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை வாரி வழங்கினார். இதில் ச.ம.க., வேட்பாளர்களைத் தேட முடியாமல் திரும்பவும் சில தொகுதிகளை சரண்டர் செய்த காமெடியெல்லாம் நிகழ்ந்தது. இறுதியாக, ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற இமேஜிலிருந்து காணாமல்போய், கோவை தெற்கு வேட்பாளராக மட்டுமே சுருங்கினார். இவையெல்லாம் அவரது தோல்விக்கான காரணங்கள். ஆனாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை வகித்து, பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு கடும் சவாலாக இருந்தார். வெற்றியை மிக அருகில் நெருங்கியபோது, கடைசி நிமிடங்களில் நடந்த ஏதோ ஒன்று, அவரை விரக்தியடையச் செய்திருக்கிறது. அதனால்தான், எதுவுமே பேசாமல், வேண்டா வெறுப்புடன் கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பினார் கமல்” என்றார்கள்.

மொத்தத்தில் தலைவர்களுக்கு பாடம் கற்பித்திருக்கிறார்கள் வாக்காளர்கள். நிற்க அதற்குத் தக!