Election bannerElection banner
Published:Updated:

`பயிர்க் கடன் தள்ளுபடி டு ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்!’- சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் #Highlights

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் - கலைவாணர் அரங்கம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் - கலைவாணர் அரங்கம்

நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, காலை 11 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. கொரோனா பேரிடர் காரணமாக, கடந்த கூட்டத்தொடர்போலவே இந்த முறையும் சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால், இந்த கூட்டத்தொடரின் புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தி.மு.க-வினர் வெளிநடப்பு
தி.மு.க-வினர் வெளிநடப்பு

ஆளுநர் உரையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று கூறி எதிர்க்கட்சியான தி.மு.க இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கப்போவதாக வெளிநடப்பு செய்தது. காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை மொத்தமாகப் புறக்கணிப்பதாக முதல்நாளிலேயே அறிவித்துவிட்டன. பின்பு ஆளுநர் உரை முடிந்து முதல் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பிப்ரவரி 5-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் சமீபத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது நாள் கூட்டத்தொடர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின்றி நடந்தது.

ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்றம்:

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம்,1888 சென்னை நகரக் காவல் சட்டம் மற்றும் 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தில் திருத்தம் செய்து 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் ( திருத்தச்) சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஆன்லைனில் பணம்வைத்து சூதாடுபவர்களைக் கைதுசெய்ய முடியும். மேலும், அதற்காகப் பயன்படுத்தப்படும் கணினிகள் மற்றும் உபகரணங்களைப் பறிமுதல் செய்ய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விளையாடுபவர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி; உழுவார் உலகத்தாருக்கு!' -வள்ளுவரை மேற்கோள் காட்டிய முதல்வர்

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் 110 விதியின் கீழ் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதையடுத்து, இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

விழுப்புரத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படவிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்படவிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவது மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை மாற்றுவது (திருத்தச் சட்டம்) ஆகிய சட்ட மசோதாக்களும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கூடுதல் தண்டனை

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். இதன்படி, 304B வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு ஏழு வருடங்களிலிருந்து சிறைத் தண்டனை, பத்து வருடங்களாக உயர்த்தப்படுகிறது.

பாலியல் புகார்
பாலியல் புகார்

சட்டப்பிரிவு 354B-ன் படி, குற்ற நோக்கத்தோடு பெண்களின் ஆடைகளைக் களைதல் குற்றத்துக்கு, குறைந்தபட்சம் மூன்று வருடங்களாக இருந்த தண்டனை, ஏழு முதல் பத்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 354D-ன்படி தவறான குற்ற நோக்கத்தோடு பெண்களைப் பின்தொடர்வது தொடர்ந்தால், தற்போதுள்ள ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் குறைவான சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை பத்து ஆண்டுகளாக இருக்கிறது. இது தற்போது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க இந்தப் புதிய சட்ட மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் ரத்து

தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். இதில் சக்கரை ஆலை சட்டத்தின் கீழ் கரும்பின் மீது கூடுதல் வரி வசூல் செய்யும் முறை இருக்கிறது. இதை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்...’; உற்சாகத்தில் எடப்பாடி - விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி

ஜல்லிக்கட்டு வழக்குகள் ரத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டைத் தடை செய்ததை எதிர்த்தும், தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்த சிறப்புச் சட்டம் கொண்டு வரக் கோரியும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 179 பேர் மீது எட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்தன.

தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளில், காவலர்களைத் தாக்கிய வழக்குகள் மற்றும் வாகனங்களை எரித்த வழக்குகளைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். பின்னர், சபாநாயகர் தனபால் சட்டப்பேரவைக் கூட்டத்தைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு