ஆதாரம் கொடுக்க நான் தயார்... திருச்சி சூர்யா தயாரா? - சவால்விடும் அலிஷா அப்துல்லா!

தொந்தரவு என்றால், என்னை பாடி ஷேமிங் செய்தது, தொடர்ந்து கால் செய்ததுதான். மற்றபடி அசிங்கமாகப் பேசவில்லை, தொடவில்லை.
பா.ஜ.க-வில் சேர்ந்ததுமே, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா. ‘அவர் என்னை ஹனி டிராப் செய்து வீடியோ எடுத்துவிட்டார்’ என்று திருச்சி சூர்யா சிவா விமர்சிக்க... ‘பெண்களைக் கொச்சையாகப் பேசுவதே சூர்யாவுக்கு பொழுதுபோக்காகிவிட்டது’ என்று அலிஷா பதிலடி கொடுக்க... ‘இது கட்சியா வேறு எதுவுமா...’ என்று நெட்டிசன்கள் கலாய்த்துவருகிறார்கள். இந்த நிலையில் அலிஷாவை நேரில் சந்தித்துப் பேசினேன்... அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்க, “அந்த வீடியோவில் ஒண்ணும் பெரிய விஷயம் இல்லைங்க...” என்றபடியே அசால்ட்டாகப் பேசத் தொடங்கினார் அலிஷா.
“அந்த வீடியோவில் ஒன்றுமில்லை என்றால் நீங்களே அதை வெளியிட்டு, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே..?”
“எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பற்றியும், சில பெண் நிர்வாகிகள் பற்றியும் தவறாகப் பேசியிருக்கிறார் திருச்சி சூர்யா. எனவே அதை வெளியிட்டால் எங்கள் கட்சிக்குத்தான் கெட்ட பெயர். ஆனால், அதில் தவறு யார்மீது இருக்கிறது என்பது அண்ணாமலைக்குத் தெரியும்.”

“ஆனால், உங்களுக்கு வழிகாட்டவே தன்னை அண்ணாமலை அனுப்பிவைத்ததாகச் சொல்கிறாரே சூர்யா..?”
“நானும் அப்படி நம்பித்தான் இதே அறையில், சூர்யாவுடன் அஃபிஷியல் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன். முதலில், `அக்கா’ என்று பேச ஆரம்பித்தவர், பிறகு `தங்கம்’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார். அவர் என்னிடம் மோசமாக நடந்துகொண்டதால், எங்கள் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத்திடம் புகார் செய்ததோடு, இங்கிருக்கும் கேமராவில் பதிவாகியிருந்த எங்கள் உரையாடல் வீடியோவையும் அவருக்கு அனுப்பினேன்.”
“கட்சித் தலைவரின் பெயரைச் சொல்லி சந்தித்தவர் தவறாக நடந்துகொள்கிறார் என்றால், அதை முதலில் நீங்கள் தலைவரிடம்தானே சொல்லியிருக்க வேண்டும்?”
“நான் கட்சியில் சேர்ந்த பத்து, பதினைந்தாவது நாளிலேயே இந்தச் சம்பவம் நடந்துவிட்டது. கட்சியில் சேர்ந்த புதிது என்பதால், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை. திடீரென எனக்கு போன் செய்த சூர்யா, ‘தலைவர்தான் நம்பர் கொடுத்தார். கட்சியில் சேர்வதற்கு யாருக்கும் காசு கொடுத்தீங்களா?’ என்று கேட்டார். ‘அப்படி எல்லாம் எதுவுமில்லை’ என்று நான் சொன்னேன்.”
“ஆனால், பா.ஜ.க-வில் சேர்வதற்கு அமர் பிரசாத் பணம் கேட்டதாக நீங்கள் புகார் சொன்னதாகவும், பணம் அனுப்பியதற்கான ஸ்டேட்மென்ட்டையெல்லாம் காட்டியதாகவும் சொல்கிறாரே சூர்யா..?”
“அதெல்லாம் சுத்தப் பொய்... என்னிடம் ஏழு வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. அவற்றின் ஸ்டேட்மென்ட்டுகளை என்னால் கொடுக்க முடியும். நான் தயார். குற்றச்சாட்டு சொல்லும் அவர் அதற்கு ஆதாரம் கொடுக்கத் தயாரா... ஆனால், வாட்ஸ்அப், நார்மல் கால், மெசேஜ் என அவர் என்னை டார்ச்சர் செய்ததற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.”
“எதற்காக அவர் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும்?”
“தொந்தரவு என்றால், என்னை பாடி ஷேமிங் செய்தது, தொடர்ந்து கால் செய்ததுதான். மற்றபடி அசிங்கமாகப் பேசவில்லை, தொடவில்லை. அப்படிச் செய்த தொந்தரவுக்கு அவரை அண்ணாமலை அழைத்து எச்சரித்தார் என்று அமர் பிரசாத் சொன்னார். அதன் பிறகு என் நம்பரை பிளாக் செய்துவிட்டார் சூர்யா. விளம்பரப் பிரியர் என்பதால்தான், என்னைப் பற்றி மோசமாகப் பேட்டி கொடுத்திருக்கிறார்.”
“ ‘வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறீர்கள்...’, ‘ஹனி டிராப் செய்தீர்கள்’ என்று விமர்சனம் வந்தபோதெல்லாம் அமைதியாக இருந்த நீங்கள், விளம்பரத்துக்காகத்தான் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறீர்கள் என்கிறார்களே?”
“இப்படியெல்லாம் விளம்பரம் தேடவேண்டிய அவசியம் எனக்கில்லை. ‘ஹனி டிராப்’ குற்றச்சாட்டு வந்தபோது, விளக்கம் சொல்லி ஒரு செல்ஃபி வீடியோ போட்டேன். அதைச் சமீபத்தில்தான் டெலிட் செய்தேன்.”
“அதை ஏன் டெலிட் செய்தீர்கள்?”
“கட்சியில் இருப்பவர்கள், தங்கள் பிரச்னைகளை கட்சியிடம் முறையிட வேண்டுமே தவிர, சோஷியல் மீடியாவில் பேசக் கூடாது என்பதற்கு காயத்ரி ரகுராம் பிரச்னை ஓர் உதாரணம். எனவே, எனது வீடியோவை டெலிட் செய்தேன். இப்போதெல்லாம், தி.மு.க குறித்து விமர்சிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன்.”
“சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு வாக்கு சேகரித்ததால்தான் தி.மு.க-மீது விமர்சனங்கள் வைக்கவில்லையா?”
“அப்படியெல்லாம் ஏதும் இல்லை. எனக்கு இப்போதும் தி.மு.க-வில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அரசியல் வேறு, தனிப்பட்ட விஷயங்கள் வேறு.”
“பா.ஜ.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக தி.மு.க-விலிருந்து வந்த ஸ்லீப்பர் செல்கள்தான் அலிஷாவும், திருச்சி சூர்யாவும் என்கிறார்களே..?”
“வாய் இருக்கிறது என்று பேசுகிறார்கள்... பா.ஜ.க-வில் பல ஆண்டுகளாக இருக்கும் நிறைய பெண்களின் பெயர்கூட யாருக்கும் தெரியாது. ஆனால், கட்சிக்கு வந்தவுடனே நான் வளர்ந்திருப்பதால், நிறைய எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறேன். அந்தப் பொறாமையில் இப்படிப் பேசுகிறார்கள்.”