Published:Updated:

`ஸ்டாலினுக்குக் குறைவில்லாதவர் எடப்பாடி!' - அமித் ஷா ஆபரேஷனை விவரிக்கும் தமிழக பா.ஜ.க

பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்ட தகவலில், `கட்சித் தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்களே தவிர, மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அமித் ஷா
அமித் ஷா

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. `தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தின் மீது பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு அரசியல் செய்யவே தலைமை விரும்புகிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம்

தி.மு.க தலைமைக்குப் பெரும் சவாலாக அமைந்தது வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம். நாடாளுமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததால் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் தி.மு.க மீதான அதிருப்தி அதிகரித்தது. இதை ஈடுகட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உட்பட சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளிடமும், `உங்களுக்கு எப்போதுமே தி.மு.க அரணாக இருக்கும்' எனவும் உறுதியளித்தார்.

அதேநேரம், 2019 மக்களவைத் தேர்தலின்போது வீசிய தி.மு.க அலை, இப்போது வீசுகிறதா என்ற கேள்வியும் உடன்பிறப்புகள் மத்தியில் நிலவியது. `எப்படியாவது கதிர் ஆனந்தை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளைத் தேர்தல் பணிக்கென நியமித்தார் ஸ்டாலின். அ.தி.மு.க தரப்பிலும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பெரும்படையே களமிறங்கியது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து நேற்று நடந்த தேர்தலில் 72 சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளன. `இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும்?' என்ற விவாதமும் நடந்து வருகிறது.

ஸ்டாலின், கதிர் ஆனந்த்
ஸ்டாலின், கதிர் ஆனந்த்

வேலூர் தேர்தலில் 2 கேள்விகள் பிரதானமாக எழுந்தன. `அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்காக பா.ம.க தலைவர் ராமதாஸும் பா.ஜ.க தலைவர் தமிழிசையும் ஏன் பிரசாரம் செய்ய வரவில்லை?' என்பதுதான். ``2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்த நிலை, தற்போது இல்லை. இதையொட்டியே அரசியல் கட்சிகளின் கணக்குகளும் தொடங்கியிருக்கின்றன. `அ.தி.மு.க அரசை வீழ்த்தினால் மட்டுமே தமிழகத்தில் பா.ஜ.க வளர முடியும், ஊழலுக்கு எதிரானவர்கள் நாம் என்பதும் மக்கள் மத்தியில் நிலைபெறும்' என நம்புகிறது தமிழக பா.ஜ.க தலைமை. அடுத்து வரக்கூடிய நாள்களில் அ.தி.மு.க அரசு மீது மத்திய அரசு சில அதிரடியான விஷயங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

எனவேதான், தமிழக பா.ஜ.க-வினரைப் பிரசாரக் களத்தில் காண முடியவில்லை. அதேநேரம், ஏ.சி.சண்முகத்துக்காக வாணியம்பாடி, ஆம்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தொண்டர்கள் களவேலை பார்த்தனர். வன்னியர்கள் நிறைந்திருக்கக்கூடிய அணைக்கட்டு தொகுதியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். `சிறுபான்மையினர் வாக்குகள் வராமல் போய்விடும் என்பதற்காக பா.ஜ.க தலைவர்கள் வரவில்லை' எனவும் சிலர் காரணம் சொல்கின்றனர். இது உண்மை அல்ல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சின்னமான தாமரையில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகளை வாங்கினார் ஏ.சி.எஸ். இந்தமுறை அ.தி.மு.க மீதான அதிருப்தி காரணமாகவே, தமிழக பா.ஜ.க தலைவர்கள் பிரசாரக் களத்துக்கு வரவில்லை" என விவரித்த பா.ஜ.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

இரண்டாண்டுகளாக அ.தி.மு.க-வோடு நெருங்கியதன் காரணமாக, பா.ஜ.க தலைமை கண்டுகொண்ட ஒரே விஷயம், `இவர்கள் எந்தவகையிலும் தி.மு.க-வுக்குக் குறைவில்லாத ஊழல்வாதிகள்' என்பதுதான்.
எஸ்.ஆர்.சேகர்

"அதேநேரம், தி.மு.க-வில் துரைமுருகன் ஒரு சக்தியாக இருந்தால் நமக்குத்தான் நன்மை எனக் கணக்குப்போடுகிறது பா.ம.க தலைமை. `ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் நமக்கு எந்தப் பயனும் இல்லை' எனவும் நினைக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, துரைமுருகனின் முயற்சியில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய நிலையில் இருந்தார் ராமதாஸ். அதைத் தி.மு.க தலைமை முறியடித்துவிட்டது. `நாளை ஒருவேளை தி.மு.க கூட்டணி வேண்டும் என்றாலும் தி.மு.க-வுக்குள் ஏதாவது நிகழ்த்த வேண்டும் என்றாலும் துரைமுருகனின் தயவு அவசியம்' எனவும் பா.ம.க நினைக்கிறது. அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டைக் கொடுத்தாலும், `எடப்பாடி முதல்வர்' எனச் சொல்வதற்குப் பா.ம.க தயாராக இல்லை. ராஜ்யசபா சீட்டை வாங்கியதும் எடப்பாடியோடு கூட்டணி தொடர்கிறதா, மோடியுடன் உறவு நீடிக்கிறதா என்பது குறித்தும் பா.ம.க தெளிவுபடுத்தவில்லை. மோடியைச் சந்தித்து அரைமணி நேரம் பேசியிருக்கிறார் அன்புமணி. இதன் பின்னணியிலும் சில கணக்குகளைப் போடுகிறது பா.ம.க தலைமை. அதற்கு பா.ஜ.க அகில இந்தியத் தலைமை உடன்படுமா என்பதும் மிகப் பெரிய கேள்வி" என விவரித்தவர்கள்,

``தி.மு.க தரப்பில் இருந்து அமித் ஷாவைத் தொடர்பு கொள்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. தி.மு.க தரப்பில் இருந்து தூது முயற்சிகள் வந்தாலும், தமிழகத்தில் மீண்டும் ஒருவரைத் தலையில் சுமந்துகொள்ள அகில இந்தியத் தலைமை தயாராக இல்லை. பல மாநிலங்களில் சிறிய அணியாகக் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜ.க, இப்போது தனியாக நிற்கத் தொடங்கிவிட்டது. மகாராஷ்ட்ராவில் கூட்டணியில் நின்றதற்குக் காரணம், ஒரு சதவிகிதம்கூட ரிஸ்க் எடுக்கக் கூடாது எனத் தலைமை நினைத்ததுதான். அதனால்தான் அங்கு கூட்டணி உருவானது. தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதால் அ.தி.மு.க-வோடு இணைந்து போட்டியிட்டோம்.

பியூஷ் கோயலுடன் எஸ்.ஆர்.சேகர்
பியூஷ் கோயலுடன் எஸ்.ஆர்.சேகர்

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நடந்த பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. அதில், `கட்சித் தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்களே தவிர, மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். எந்த இடத்துக்குப் போனாலும் பா.ஜ.க-வில் சேர மாட்டோம் என மக்கள் சொல்லவில்லை. கீழ்மட்ட அளவில் நமக்கு ஆதரவு இருக்கிறது. எனவே, 2021 தேர்தலில் நாம் தனியாக நின்று வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே மத்திய அரசின் திட்டங்களை 100 சதவிகிதம் செயல்படுத்த முடியும் என்பதைப் பிரசாரமாகக் கொண்டு செல்வோம். இங்கு கூட்டணியைத் தேடிப் போக வேண்டிய அவசியமுமில்லை' எனக் கூறி சர்வே நிலவரங்களைத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அ.தி.மு.க அரசு மீது பா.ஜ.க தலைமையில் உள்ளவர்களுக்கு எந்தவித அபிப்ராயங்களும் இல்லை. அதேபோல், தி.மு.க மீதும் எந்த அபிப்ராயங்களும் கிடையாது" என்கின்றனர் உறுதியாக.

தி.மு.க, அ.தி.மு.க மீதான பார்வை குறித்து, பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். ``ஊழலை ஒழிப்பதுதான் பா.ஜ.க-வின் அடிப்படையான நோக்கம். தமிழகத்தில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் ஊழல் செய்வதற்குப் போட்டி போடுகிறார்களே, இவர்களில் விதிவிலக்குகள் இல்லை. ஊழலில் யார் முதலிடம் என்பதற்கான பட்டத்தைப் பெறுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு வளர வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது.

`காஷ்மீர்' ரகசியம் காத்த மூவரும்... மூன்றை இரண்டாக்கிய இறுதி முடிவும்!

2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்த எண்ணம் அதிகப்படியாக ஏற்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளாக அ.தி.மு.க-வோடு நெருங்கியதன் காரணமாக, பா.ஜ.க தலைமை கண்டுகொண்ட ஒரே விஷயம், `இவர்கள் எந்தவகையிலும் தி.மு.க-வுக்குக் குறைவில்லாத ஊழல்வாதிகள்' என்பதுதான். இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்றால் இவர்கள் இருவரையும் புறக்கணிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்" என்றார் இயல்பாக.