Published:Updated:

எந்த முகத்தை வைத்துக்கொண்டு சட்டசபையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர்?

கே.பி.ராமலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.ராமலிங்கம்

- கிடுக்கிப்பிடி போடும் கே.பி.ராமலிங்கம்...

எந்த முகத்தை வைத்துக்கொண்டு சட்டசபையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர்?

- கிடுக்கிப்பிடி போடும் கே.பி.ராமலிங்கம்...

Published:Updated:
கே.பி.ராமலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.ராமலிங்கம்

ஆளும் தி.மு.க அரசுமீது தொடர் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துவருகிறது தமிழக பா.ஜ.க. சமீபத்தில்கூட பா.ஜ.க குழுவினர் தமிழக ஆளுநரைச் சந்தித்து மின்சாரத்துறை தொடர்பான புகார் ஒன்றை அளித்தது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியது. இந்த நிலையில், அந்தக் குழுவில் இருந்தவரும், தமிழக பா.ஜ.க துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை இவர் தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!

``தமிழக பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி ஆளுநர் மாளிகையை நோக்கிப் படையெடுப்பதற்கான காரணம் என்ன?’’

``தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் அடிக்கடி தவறுகளைச் செய்கிறார்கள். அதைக் கேட்க வேண்டிய இடமாக ஆளுநர் மாளிகை இருப்பதால், நாங்கள் அடிக்கடி போகிறோம். இதுவும் தி.மு.க காட்டிய வழிதான். 1991-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆளுநர் மாளிகைக்கு முன்பாக தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளுநரைப் பார்த்து மனு கொடுத்தார்கள். நூறு கோடி ஊழலுக்கே, இன்றைய முதல்வரின் தந்தை பெரும் போராட்டங்களை நடத்தினார். இப்போது பல்லாயிரம் கோடிகளில் ஊழல் நடக்கிறது... எதிர்க்கட்சியாக நாங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?”

``தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளதே?”

``செந்தில் பாலாஜி எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் தவறானவர் என்று ஸ்டாலினே பலமுறை சொல்லியிருக்கிறார். இப்போது அவர் நல்லவராகிவிட்டாரா? செந்தில் பாலாஜி தன் குடும்பத்துக்கு அதிக அளவு கமிஷன் கொடுப்பதால்தான் முதல்வர் அவரை வைத்திருக்கிறார். செந்தில் பாலாஜியின் ஊழல்கள் குறித்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆளுநரிடம் அதைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். மற்ற அமைச்சர்களின் ஊழல் பற்றியும் ஆதாரம் கிடைத்தால், அவர்களைப் பற்றியும் ஆளுநரிடம் புகார் கொடுப்போம். நாங்கள் ஆளுநரிடம் செந்தில் பாலாஜி மீது மட்டும் புகார் கொடுக்கவில்லை... எழிலகத்தில் லட்சக்கணக்கில் பணம் கையகப்படுத்தப்பட்டது பற்றியும் பேசியிருக்கிறோம்!’’

``அரவக்குறிச்சியில் தோல்வியைத் தழுவியதால்தான், செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறாரா அண்ணாமலை?’’

``அப்படியெல்லாம் சொல்ல முடியாது... செந்தில் பாலாஜிக்குத் துணிவிருந்தால் அவர் அரவக்குறிச்சியில் அண்ணாமலையை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில்தானே போட்டியிட்டார் செந்தில் பாலாஜி... பிறகு ஏன் தொகுதி மாறினார்? எங்களைப் பொறுத்தவரை தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜி தொடர்ச்சியாகத் தவறுகளைச் செய்வதால், அவரைப் பற்றியே புகார் அளிக்க வேண்டியிருக்கிறது.’’

``ஆனால், ஆளுநரை தற்போது பா.ஜ.க-வினர் சந்திப்பதுபோல கடந்தகாலங்களில் யாரும் சந்தித்தது இல்லையே?’’

`` `ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்று சொன்ன கட்சி தி.மு.க. அந்தக் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் எத்தனை முறை ஆளுநரைப் பார்த்து மனு கொடுத்திருக்கிறார் என்பது நாட்டுக்குத் தெரியும். நாங்கள் மூன்று முறைதானே ஆளுநரைச் சென்று பார்த்தோம். பலர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார்கள். நாங்கள் ஆளுநரைச் சந்திப்பது ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இல்லை... ஊழல்வாதிகளை எச்சரிப்பதற்காக!’’

``நீங்கள் இந்த அரசு எதுவுமே செய்யவில்லை என்கிறீர்கள்... ஆனால், கடந்த 10 மாதங்களில் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 208 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் 171 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன என்கிறாரே முதல்வர்?’’

``வெளியிடப்பட்ட 117 அரசாணைகளில், 112 இதற்கு முந்தைய அரசாங்கத்தில் உள்ள திட்டங்கள். அதற்கு அரசாணைகள் வெளியிடப்படாமல் இருந்தது... அதை இவர்கள் செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான். இவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இவர்கள் கொடுத்த பொங்கல் பரிசு குளறுபடிகளைப் பார்த்து நாடே சிரித்தது. மகளிருக்குத் தருவதாகச் சொன்ன ஆயிரம் ரூபாயைக்கூட கொடுக்கவில்லை. கேட்டால், ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்றுவோம் என்கிறார் உதயநிதி. ஒரு சொட்டு மதுகூட இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம் என்றார்கள். ஆனால், இப்போது நடப்பது எல்லாமே தலைகீழ். முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சட்டசபையில் அமர்ந்திருக்கிறார் என்றே தெரியவில்லை!’’

எந்த முகத்தை வைத்துக்கொண்டு சட்டசபையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர்?

``சரி... மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இது தொலைநோக்குப் பார்வை இல்லாத பட்ஜெட் என்று அண்ணாமலை சொன்னது விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறதே?’’

``மத்திய அரசின் திட்டங்களைப் பெயர்களை மாற்றிக் கொண்டுவந்திருப்பதையும் சொல்லியிருக்கிறோம். அதேவேளை, மாநில அரசுக்கென தனியாகத் திட்டங்கள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். அதில் என்ன தவறு?’’

``அப்படி தமிழக அரசு, மத்திய அரசிடமிருந்து காப்பியடித்த திட்டங்களைச் சொல்ல முடியுமா?’’

``பெண்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்று மகளிர் தினத்தில் பிரதமர் அறிவித்ததைப் பார்த்துத்தான் முதல்வரும் அப்படி அறிவிக்கிறார். வேளாண் பட்ஜெட்டில் சிறு தானியத்துக்கென அறிவிக்கப்பட்ட திட்டம் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. நீர்நிலைகளை வலுப்படுத்துவது பற்றி அமைச்சர் துரைமுருகன் அறிவித்தவையெல்லாமே, மத்திய அரசின் நிதியை வைத்தே செயல்படுத்தப்படுகின்றன. இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்... கலைஞர் கொண்டுவந்த உழவர் சந்தை, இலவச மின்சாரம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த சேலம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி மையம்போல, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து எந்தவொரு சிறப்பான திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பதே உண்மை’’

``தமிழக அரசை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்கள்... ஆனால், சமையல் காஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவருவது பற்றி வாயே திறப்பதில்லையே?’’

``தேர்தலின்போது இவர்கள்தானே சிலிண்டர் விலையைக் குறைக்கிறோம் என்றார்கள்... குறைக்க வேண்டியதுதானே! மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே ஓ.என்.ஜி.சி-க்கு ஆயில் மார்க்கெட் விலைக்கேற்ப விலையை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டார்கள். அதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.’’