Published:Updated:

`அவர் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க வளர்கிறது!’ - தமிழிசை குறித்து வானதி சீனிவாசன்

அரபு நாடுகளில் இருப்பவர்களும் பாகிஸ்தானில் உள்ளவர்களும் போலி கணக்கில் `Go back modi"யை டிரெண்டு செய்கிறார்கள்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் பதவி காலியானது. அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு நாகராஜன் ஆகியோருக்கான வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறி ஜெயக்குமார் கமலாலயம் வந்தார்.

தமிழிசை
தமிழிசை

அப்போது, தமிழக தலைவர் இல்லாத காரணத்தால், பொன்னாரை சந்தித்துப்பேசி ஆதரவு கேட்டார். `அ.தி.மு.க-வுக்கு ஆதரவு’ என பொன்னார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், `தமிழிசை இருந்தபோதிலும், இல்லாதபோதிலும் பா.ஜ.க வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது’ என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், `மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கபட்டுள்ளது’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

``நேரடியாக அரசாங்கம் எந்த வழக்கையும் தொடரவில்லை. மத்திய அரசுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. பீகாரில் இருக்கக்கூடிய ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தேச ஒற்றுமைக்கு எதிராக அந்த வழக்கு இல்லை என்றால் மணிரத்னம் உள்ளிட்டோர் அதனை சட்டரீதியாக எதிர் கொள்ளட்டும்” என்றார். `பிரதமர் தமிழகம் வரும்போது எல்லாம் Go back modi டிரெண்டாகி வருகிறது’ என்ற கேள்விக்கு, ``அதைத் தமிழர்கள் யாரும் டிரெண்டு செய்வதில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அரபு நாடுகளில் இருப்பவர்களும் பாகிஸ்தானில் உள்ளவர்களும் போலி கணக்கில் டிரெண்டு செய்கிறார்கள். இதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றார். பேனர் குறித்து கேட்டபோது, ``சர்வதேச நிகழ்ச்சியின்போது விளம்பரத்துக்காக மட்டுமே தான் பேனர் வைக்கிறார்கள்” என்றவர், ``பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழிசை இருந்தபோதும், இல்லாதபோதும் சரி தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தனிநபரையோ, குடும்பத்தையோ சார்ந்து பா.ஜ.க இல்லை’ என்று தெரிவித்தார்.