Published:Updated:

“தமிழக நிதியமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்!”

கே.டி.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
கே.டி.ராகவன்

- எச்சரிக்கிறார் கே.டி.ராகவன்

“தமிழக நிதியமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்!”

- எச்சரிக்கிறார் கே.டி.ராகவன்

Published:Updated:
கே.டி.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
கே.டி.ராகவன்

தமிழக அரசு பதவியேற்ற பிறகு நடந்த முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திலேயே அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை!’ என்று எச்சரித்தது நாடு முழுக்க கவன அலைகளை ஈர்த்தது. இதையடுத்து, தி.மு.க - பா.ஜ.க தலைவர்கள் பலரும் காரசார விவாதங்களில் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமரைச் சந்திக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற அதே நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன். அவரிடம் உரையாடியதிலிருந்து...

“தமிழக நிதியமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்!”

“மாநில அரசின் உரிமைகளுக்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அழுத்தமான கருத்துகளை எடுத்துவைத்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் பேசுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்... அப்படித்தான் பேசவும் வேண்டும். ஏனெனில், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சரும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருக்கிறார்கள்; அங்கேதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்கிறபோது, நமது கோரிக்கைகளை நிச்சயம் அங்கே பேசித்தான் ஆக வேண்டும். அதேசமயம், அங்கு எதை மட்டும் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசியிருக்க வேண்டும். நம்முடைய மாநில நிதியமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது நன்றாகப் பொருளாதாரம் பேசுகிறார். ஆனால், பேச வேண்டிய இடத்தில் சரியாகப் பேசினாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.’’

“ஜி.எஸ்.டி கவுன்சிலில், ‘மாநில மக்கள்தொகை மற்றும் அந்தந்த மாநிலம் மத்திய அரசுக்கு அளிக்கும் வரி வருவாய் அடிப்படையிலேயே வாக்கு விகிதம் தரப்பட வேண்டும்’ என்று அமைச்சர் பேசியது குறித்து..?’’

“ஜி.எஸ்.டி கவுன்சிலில் முடிவெடுக்கும் அதிகாரத்துக்கான வாக்குரிமை ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒன்று மட்டுமே தரப்படும். அதில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. அப்படிப் பார்த்தால், உத்தரப்பிரதேசம் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலம் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளைக் கொடுக்க முடியுமா? மத்திய அரசின் நிதி அமைச்சருக்கே ஒரு ஓட்டுதான் தரப்படுகிறது. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் சென்னைதான் மக்கள் எண்ணிக்கையிலும், வரி வருவாயிலும் பெரிய மாவட்டம். அதற்காகத் திட்டங்களை செயல்படுத்தும்போது ‘சென்னைக்குத்தான் முதலிடம் கொடுப்போம்; புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க மாட்டோம்’ என்று தமிழக அரசு சொல்லிவிட முடியுமா? ஒரு மாநிலத்துக்கு எல்லா மாவட்டங்களும் முக்கியம்தானே... அதைத்தான் மத்திய அரசும் செய்கிறது. அதனால்தான் வரி வருவாயை எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். எனவே, இது போன்ற விஷயங்களைப் பேச வேண்டிய இடம் ஜி.எஸ்.டி கவுன்சில் அல்ல...’’

“ஆனால், ‘கொரோனா சிகிச்சைப் பொருள்களுக்கு வரிவிலக்கு, ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை’ ஆகிய கோரிக்கைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்தானே அமைச்சர் பேச முடியும்?’’

“ஒரு கட்சிக்காரராக அல்லது சட்டமன்ற உறுப்பினராக அவர் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக அமைச்சர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கும்போது நிதானத்துடனும், பொறுப்பை உணர்ந்தும் பேச வேண்டும். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின் வழியே அனைவரது ஒருமித்த கருத்துடன்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதேபோல், நாமும் ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்தே தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்டுப் பெற வேண்டும்!’’

“தமிழக நிதியமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்!”

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்களுக்கு, கட்சித் தலைமை 13 கோடி ரூபாய் வழங்கியதாக பா.ஜ.க ஆதரவாளரான எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறாரே?’’

“நானும் அந்த ஆடியோவைக் கேட்டேன்... ‘நான் கேள்விப்பட்டவரையில்...’ என்றுதான் எஸ்.வி.சேகர் சொல்லியிருக்கிறார். அப்படியொரு விஷயத்தை அவர் யாரிடமிருந்து கேள்விப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக, பா.ஜ.க இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அந்தச் செய்தியில் கொஞ்சம்கூட உண்மையில்லை. எனவே, இந்தத் தகவலை அவர் யாரிடமிருந்து கேள்விப்பட்டார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.’’

“தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அனுமதி கேட்பவர்களை நோக்கி, ‘அது என்ன கடலை மிட்டாய் தயாரிப்பா?’ என்று கிண்டல் செய்கிறீர்களே... நியாயம்தானா?’’

“கிண்டல் செய்யவில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிக்கென்று பிரத்யேகமான ஆய்வக வசதிகள் வேண்டும். மற்ற தடுப்பூசி மையங்களில் இதைத் தயார் செய்துவிட முடியாது. வெளிநாடுகளில் இது போன்ற நவீன வசதிகொண்ட ஆய்வகங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், இந்தியாவிலோ இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் ஆய்வகங்கள் இருக்கின்றன. இன்று தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி கேட்கும் இதே தி.மு.க ஆட்சி செய்த காலகட்டத்தில்தான் கிங் இன்ஸ்டிட்யூட், குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. இன்றைக்கு இவர்களெல்லாம் தடுப்பூசி தயாரிப்புக்காக அனுமதி கேட்பதற்கு முன்பே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கே வந்து ஆய்வு செய்துவிட்டுப் போயிருக்கிறார். இப்போதும்கூட தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தும்விதமாக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism