Published:Updated:

“தேர்தல் வேலையைப் பார்க்காமல் வேல் யாத்திரை எதற்கு?”

எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எல்.முருகன்

- கமலாலயத்தில் எழும் கலகக்குரல்கள்...

தமிழகத்தில் பா.ஜ.க நடத்திய வெற்றிவேல் யாத்திரை கட்சியை புத்துயிர் பெறவைக்கும் என்று பார்த்தால், கட்சிக்குள் கலகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவடையவிருக்கும் நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் பலரும் யாத்திரையில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தவிர பலரும் வரவில்லை. இந்தநிலையில்தான், “வேல் யாத்திரை, தமிழகத்தில் பா.ஜ.க-வின் இமேஜை உயர்த்துவதற்கு பதிலாக அந்தக் கட்சிக்குள் உட்பூசலைப் பற்றவைத்திருக்கிறது” என்கிற கலகக்குரல்கள் கமலாலயத்திலிருந்து கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், “கடந்த நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் யாத்திரை தொடங்கியபோது, குறைந்தது 25,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், யாத்திரையில் கலந்துகொண்டு கைதானவர்கள் சுமார் 1,500 பேர் மட்டுமே. அங்கு மட்டுமல்ல... அதன் பிறகு யாத்திரை சென்ற அனைத்து இடங்களிலும் நிலைமை இதுதான்.

திருத்தணியில் நடந்த தொடக்க விழாவில் கலந்துகொள்ள மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி வந்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வந்தவர், குறைவான அளவிலே கூட்டம் கூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து, தான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் வாசலிலேயே வேலை தூக்கிப்பிடித்து போஸ் கொடுத்தவர், கடும் கோபத்துடன் கிளம்பிவிட்டார். இந்தத் தகவல் டெல்லிக்கும் செல்லவே... யாத்திரையில் கலந்துகொள்வதாக இருந்த ஜே.பி.நட்டா உட்பட மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் பலரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யாத்திரைக்கு வராமல் கைவிரித்துவிட்டார்கள். கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் மட்டுமே கோவைக்கு வந்திருந்தார். நிறைவுவிழாவில் கலந்துகொள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வருவார் என்கிறார்கள். அதுவும் எந்த அளவுக்கு நிச்சயம் என்று தெரியவில்லை.

மாநிலத் தலைவர் எல்.முருகன் கட்சியின் சீனியர்கள் யாருடனும் ஆலோசிக்காததால்தான் யாத்திரை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. முருகனுக்கு வேண்டப்பட்ட சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு யாத்திரையை நடத்தினார். தேர்தல் நேரத்தில், சுமார் 60,000 பூத்களுக்கு ஏஜென்ட்களை நியமிப்பது தொடர்பான விவரத்தை தேர்தல் கமிஷனிடம் முன்கூட்டியே தர வேண்டும். தி.மு.க-வில் இந்த விவரங்களை முழுவதுமாகக் கொடுத்துவிட்டனர். ஆனால், எங்கள் கட்சி சார்பில் 35,000 பூத்களுக்கு மட்டுமே விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட தேர்தல் வேலைகள் நிலுவையில் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு, யாத்திரையில் தீவிரம்காட்டி பொதுமக்களின் அதிருப்தியைச் சம்பாதித்ததுதான் மிச்சம்” என்றவர்கள் இது குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ரியாக்‌ஷனையும் பகிர்ந்துகொண்டார்கள்.

“தேர்தல் வேலையைப் பார்க்காமல் வேல் யாத்திரை எதற்கு?”

“கடந்த மாதம் அமித் ஷா சென்னை வந்தபோது கட்சியின் முக்கிய வி.ஐ.பி-கள் சிலர் அவரிடம், ‘மாநிலத் தலைமை தரப்பிலிருந்து, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை ஒருங்கிணைக்கவும் இல்லை. யாத்திரையில், நம் கட்சியின் குறிக்கோள்களை மக்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே முருகன் இந்த யாத்திரையைப் பயன்படுத்திக்கொண்டார்’ என்று புகார் வாசித்திருக்கிறார்கள்.

டென்ஷனான அமித் ஷா, யாத்திரையை வெளிப்படையாக விமர்சிக்காவிட்டாலும் ‘சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி, தொண்டர்களின் சக்தியை வீணடிக்கக் கூடாது. பூத் கமிட்டி வேலைகளை முடிக்கவில்லை, கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவில்லை. அதையெல்லாம் செய்யாமல், வேல் யாத்திரையால் என்ன பலன்?’ என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிர, திருத்தணியில் பயன்படுத்தப்பட்ட பிரசார வேனுக்கு முறையான ஆவணங்கள் இல்லையென்று போலீஸார் எச்சரித்திருக்கிறார்கள். அதன் பிறகும் அதே வேன் கிருஷ்ணகிரியிலும் தென்படவே, போலீஸார் மீண்டும் கடுமையாக எச்சரித்தனர். அதன் பிறகே வேன் மாற்றப்பட்டது. இதையும் கட்சியின் சீனியர்கள் ரசிக்கவில்லை” என்று சொல்லி முடித்தார்கள்.

இது குறித்துப் பேசுவதற்கு முருகனைத் தொடர்புகொண்டபோது அவர் உதவியாளர்தான் பேசினார். மீண்டும் லைனில் வருவதாகச் சொன்னவர், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும்வரை வரவில்லை. தொடர்ந்து, தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். “கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான எண்ணங்கள் தமிழக மக்களிடம் உருவாகியிருக்கின்றன. இதை ஒன்றுபடுத்த வேண்டிய கட்டாயம் எங்கள் கட்சிக்கு இருக்கிறது. அதனால்தான், வேல் யாத்திரை நடத்தினோம். இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிவர் புயல் நேரத்தில் கட்சியினர் பலரையும் நிவாரண உதவிகளைச் செய்ய அனுப்பிவிட்டோம். அதனால், கூட்டம் குறைந்ததுபோலத் தோன்றலாம். சென்னையில் ஆரம்பித்து திருத்தணி வரை நூறு இடங்களில் கட்சியினர் கூடி வரவேற்பு கொடுத்தார்கள். அதனால்தான், திருத்தணியில் கூட்டம் சேராமல் போய்விட்டது. மேலும், எங்கள் சீனியர் தலைவர்கள் பலருக்கும் வயது அறுபதைத் தாண்டிவிட்டது. கொரோனா அச்சம் கருதி, அவர்கள் முக்கிய இடங்களுக்கு மட்டும் வந்து சென்றார்கள். சீனியர்கள் அனைவரையும் கலந்தாலோசித்துதான் இந்த யாத்திரையை நடத்தினோம். வேல் யாத்திரைக்காக அமித் ஷா பாராட்டிவிட்டுத்தான் சென்றார்” என்றார்.

கொரோனா தொற்றின் ஆரம்ப காலகட்டத்தில் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதம் கிழிந்து, ரத்தம் வழிய... தேசம் முழுக்க பல நூறு மைல்கள் கட்டாய யாத்திரைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களைப் பற்றியும் சிந்தித்திருக்கலாம், பா.ஜ.க!