Published:Updated:

பிரதமர் வருகை குறித்து ட்வீட்; சைபர் க்ரைமில் விசாரணைக்கு ஆஜரான பாஜக ஐடி விங் தலைவர்!- என்ன நடந்தது?

விசாரணைக்கு ஆஜரான நிர்மல் குமார் -பாஜக

தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பியதாகத் தமிழ்நாடு பாஜக மாநில ஐ.டி பிரிவு தலைவர், சென்னை சைபர் க்ரைம் போலீஸில் விசாரணைக்கு ஆஜரானார்.

பிரதமர் வருகை குறித்து ட்வீட்; சைபர் க்ரைமில் விசாரணைக்கு ஆஜரான பாஜக ஐடி விங் தலைவர்!- என்ன நடந்தது?

தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பியதாகத் தமிழ்நாடு பாஜக மாநில ஐ.டி பிரிவு தலைவர், சென்னை சைபர் க்ரைம் போலீஸில் விசாரணைக்கு ஆஜரானார்.

Published:Updated:
விசாரணைக்கு ஆஜரான நிர்மல் குமார் -பாஜக

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இருப்பவர் சி.டி.ஆர் நிர்மல் குமார். இவர் கடந்த அக்டோபர் 13-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனது" என்று பதிவிட்டிருந்தார். இது குறித்து மொகிந்தர் அமர்நாத் என்பவர், கடந்த அக்டோபர் 14-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

மூடப்பட்ட சென்னை காவல் ஆணையரகத்தின் கதவுகள்
மூடப்பட்ட சென்னை காவல் ஆணையரகத்தின் கதவுகள்

இந்த புகாரையடுத்து, நிர்மல் குமார் மீது, வதந்தியைப் பரப்புதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நிர்மல் குமாரிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சமன் அனுப்பியது காவல்துறை. இதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார் அவர்.

அரசியல் உள்நோக்கம்:

விசாரணைக்கு வரும்போது, நிர்மல் குமாருடன் அவர் ஆதரவாளர்கள் பலரும் வந்திருந்ததால், சென்னை காவல் ஆணையரகத்தின் கதவுகளை மூடி, 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். ஆணையரகத்துக்குள் நிர்மல் குமாரையும், அவர் வழக்கறிஞரையும் மட்டுமே அனுமதித்து அவர் ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தினர். அவரிடம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு ஆஜரான நிர்மல் குமார் - பாஜக
விசாரணைக்கு ஆஜரான நிர்மல் குமார் - பாஜக

விசாரணை நிறைவடைந்த நிலையில், நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தமிழகத்தில் பிரதமரின் வருகை குறித்துப் பல வதந்திகள் பரப்பப்பட்டன. அது தொடர்பாக, டெல்லி தலைமை அலுவலகத்தில் விசாரித்து, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவு பிரதமர் வருகை குறித்து இங்கிருந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதற்காக, என்மீது ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையில் காவலர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறேன். நான் இப்போதும் சொல்கிறேன், நான் பதிவிட்டது உண்மையான தகவல், அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் கட்சியினர்மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. இந்த வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்றார்.