Published:Updated:

“2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு அன்பு, மரியாதை எல்லாமே இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றை எங்களால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை.

“2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு அன்பு, மரியாதை எல்லாமே இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றை எங்களால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை.

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

பூங்கொத்து, சால்வை, மலர்மாலை என வரிசையாக வந்து குவியும் வாழ்த்துகளுக்கு மத்தியில் பூரிப்பில் மிதக்கிறார் தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவர் அண்ணாமலை. காக்கி யூனிஃபார்மில் கர்நாடகச் சிங்கமாக கர்ஜித்துக்கொண்டிருந்தவரை, பளீர் வெள்ளை வேட்டி, சட்டையில் தொண்டர்களை அன்பால் அரவணைக்க வைத்திருக்கிறது கமலாலயம். அவருடன் பேசினேன்.

 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

``தமிழக பா.ஜ.க தலைவராக உங்கள் முன் இருக்கும் சவால் என்ன?’’

‘‘எனக்கு முன்பு இருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கட்சியை வளர்த்திருக்கிறார்கள். தமிழிசை அக்கா, எல்.முருகன் ஜி தலைவர்களாக இருந்தபோது, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தலைச் சந்திக்கவேண்டிய பிரஷர் இருந்தது. எனக்கு இப்போது அப்படி அல்ல.

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு அன்பு, மரியாதை எல்லாமே இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றை எங்களால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை. பிரதமரது திட்டங்களின் பயனாளிகளாக இருப்பவர்களுக்கும்கூட 60 ஆண்டுகளாக வாக்களித்துவந்த சின்னத்தைத் தாண்டி, திடீரென தாமரைச் சின்னத்துக்கு வாக்களிப்பதில் சின்னதொரு தடுமாற்றம் இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க கிராமங்கள் வரை எங்கள் கட்சியை மிக வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

மத்திய பா.ஜ.க அரசு மக்கள் நலனுக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும்கூட இங்கே மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது தவறான கருத்து இருக்கிறது. உதாரணமாக இப்போதுகூட ‘தமிழ் நடிகர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க' என்ற கருத்து பரப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் சூர்யாவுக்கோ கார்த்திக்கோ விரோதிகள் கிடையாது. ‘ஒளிப்பதிவு திருத்தச் சட்டம்' என்பது இப்போதுவரை மசோதாவாகத்தான் இருக்கிறது. நியாயமான கோரிக்கைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லலாம். தமிழக பா.ஜ.க-வும்கூட உங்கள் குரலுக்குத் துணை நிற்கும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல! ‘பா.ஜ.க-வினர் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள்' என்றும் மக்களுக்குத் தவறாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மக்கள் மனதிலிருந்து களைந்து, நாங்கள் யார் என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதுதான் எனக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்!''

 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை
 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

``விரைவில் தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செல்வீர்களா?’’

‘‘உலகம் முழுக்கக் காற்று இருந்தாலும், சைக்கிள் ட்யூபில் காற்று இருந்தால்தான் சைக்கிளை ஓட்டிச்செல்ல முடியும். முதலில் கட்சியின் உள் கட்டமைப்பைப் பலப்படுத்தினால்தான் ஒவ்வொரு குக்கிராமத்திலும்கூட கொடிக் கம்பம் நட்டு மக்களோடு இன்னும் நாங்கள் நெருங்கிச் செல்ல முடியும்.''

``தொடர்ச்சியாக இங்கே வெறுப்பு அரசியல்தான் முன்னிலை வகித்துவருகிறது. நீங்களாவது இதை மாற்றியமைத்து வளர்ச்சி அரசியலை நோக்கி நகர்த்துவீர்களா?’’

‘‘நல்ல கேள்வி... நானும்கூட சில நேரங்களில் இதுபற்றி யோசித்திருக்கிறேன். யாராவது நம்மை அட்டாக் செய்தால், பதிலுக்கு நாமும் ரியாக்ட் செய்து அதே வெறுப்பரசியலுக்குள் போகத்தானே முயற்சி செய்கிறோம் என்று. நான் தலைவரான பின்பு முதல் வேலையாக, ‘ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே கட்சியின் சமூக ஊடகப் பிரிவு செய்யும்' எனக் கூட்டம் போட்டு முடிவெடுத்திருக் கிறோம். கட்சிக்கு வெளியிலிருந்து இயங்கும் ஆதரவாளர்களையும்கூட இதுபோன்று நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

‘சில குறிப்பிட்ட சேனல் விவாதங்களில், பா.ஜ.க-வினர் பேசுவதற்குக் குறைவான நேரமே ஒதுக்குகிறார்கள். இன்னும் சில சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளரே ஒருதரப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்' என்றெல்லாம் தொடர்ந்து கமென்ட்ஸ் வந்தது. எனவே எங்கள் செய்தித் தொடர்பாளர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று கட்சித் தலைமை முடிவெடுத்திருந்தது. ஆனால், இனி பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க உள்ளோம். ஏனெனில், ஊடகம் இல்லாமல் ஒரு கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது கடினம். ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் பலப்படுத்தக்கூடிய நான்காவது தூணாக முக்கிய இடத்தில் ஊடகம்தான் இருக்கிறது!''

 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை
 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

``அதனால்தான், ‘ஊடகத்தைக் கையகப்படுத்துவோம்' என வெளிப்படையாகவே பேசியிருக்கிறீர்களா?’’

‘‘ நியூ மீடியா' எனச் சொல்லப்படும் ஊடகத்தின் புதிய பரிணாமங்கள் ஜனநாயகத்தின் கட்டுக்குள் வரவேண்டும் என்ற அர்த்தத்தில்தான் நான் பேசினேன். இன்றைக்கு ஒரு தனிநபர் நடத்திவருகின்ற யூடியூப், ட்விட்டர் அக்கவுன்ட்களையும்கூட ‘ஊடகம்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதிகாரபூர்வமான செய்தி நிறுவனங்களில், பல்வேறு கட்டக் கண்காணிப்புகளுக்குப் பிறகுதான் ஒரு செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால், இப்படியான எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், இன்றைய ‘நியூ மீடியா' உலகில் தனிநபர்களே தங்களுக்கு விருப்பப்பட்ட பொய்ச் செய்திகளைப் பரப்பிவிட முடிகிறது. எனவேதான் அண்மையில் மத்திய அரசும் ஊடகக் கட்டுப்பாடு குறித்த புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. நிச்சயமாக இன்னும் ஆறு மாதங்களில் பொய்ச் செய்திகள் பரப்புவதைக் கட்டுப்படுத்திவிட முடியும். ஜனநாயகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு பொது மனிதனாகத்தான் இதைச் சொன்னேன்.''

 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

`` ‘தமிழக அரசியலில் இனி பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையேதான் போட்டி' என்கிறீர்களே... அப்படியென்றால் அ.தி.மு.க என்னவாகும்?’’

‘‘எல்லா அரசியல் கட்சிகளுக்குமே ஓர் லட்சியக் கனவு இருக்கும். அதைப்போல எங்களுக்கும் 2026-ல் 150 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பது லட்சியம். இப்படியெல்லாம் சொல்வதாலேயே அ.தி.மு.க-வை அவமதிக்கிறோம் என்று சொல்லக் கூடாது. அ.தி.மு.க பலம்வாய்ந்த கட்சி. எங்களோடு நல்ல நட்புணர்வோடு இருந்துவருகிற கட்சி. எங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் நிறைய விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதால், சேர்ந்து பயணம் செய்துவருகிறோம். இது ஒருவகையான அரசியல்!

ஆனால், தமிழ்நாட்டில் இன்னொரு வகையான அரசியலும் நடக்கிறது. அதாவது, சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பா.ஜ.க மற்றும் மத்திய அரசைக் குற்றம் சொல்வதை மட்டுமே தி.மு.க தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. தி.மு.க-வின் இந்த அரசியலுக்கு இனி பா.ஜ.க சித்தாந்த ரீதியாக பதிலடி கொடுக் கும் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.''

 “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

`` ‘2026 தேர்தலில், தமிழக பா.ஜ.க 150 இடங்களைப் பிடிக்கும்' என்கிறீர்களே... அப்படியென்றால், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதானே?’’

(சிரிக்கிறார்) ‘‘இப்படி யெல்லாம் எடக்கு மடக்காகக் கேட்டு, இப்போதே என்னை சேரை விட்டு எழுப்பிவிட நினைக்காதீர்கள். எங்கள் கட்சியில் ‘முதல்வர் வேட்பாளர்' என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியைப் பலப்படுத்தி, 150 இடங்கள் வாங்குகிற அளவுக்கு மாற்றிவிட்டுத்தான் அதுபற்றியே நாங்கள் பேசுவோம்!''

`` `சசிகலாவைக் கொண்டு அ.தி.மு.க-வை பலவீனமாக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளது' என்றும் செய்திகள் வெளிவருகின்றனவே?’’

‘‘ஜனநாயக நாட்டில், ஒரு கட்சி இன்னொரு கட்சியைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதே நடக்காத விஷயம். அடுத்து, அ.தி.மு.க-வோடு எங்களுக்கு இருக்கிற தொடர்பு என்பது, அந்தக் கட்சியின் பொதுக்குழுவில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' என்று அதிகாரபூர்வமாக யாரைத் தேர்ந்தெடுத்தார்களோ, அவர்களோடு மட்டுமே இருந்துவருகிறது. எனவே, சசிகலாவை நாங்கள் ஒரு தனி மனிதராக மட்டுமே பார்க்கிறோம். அ.தி.மு.க குறித்து அவர் சொல்லிவருகிற கருத்தையெல்லாம் அந்தக் கட்சியோடு பொருத்திப் பார்க்க எங்களுக்கு உரிமையில்லை. அது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்னை. இதன் பின்னணியில் பா.ஜ.க நிச்சயமாக இல்லை!''

``பல்வேறு சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் என படேலுக்குச் சிலை வைத்த பா.ஜ.க-வே, ‘இது ஒன்றிய அரசு அல்ல...' என்று சொல்லலாமா?’’

‘‘தமிழாக்கம் என்பதாக, ‘ஒன்றிய அரசு' என்று சொல்லப்படுமேயானால் அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 70 நாள்களுக்குள்ளாகவே தி.மு.க-வினர் சொல்லிவருகிற விஷயங்களை எல்லாம் கோத்துப் பார்த்துதான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

அதாவது, ‘ஒன்றிய அரசு' என்று பேசிய அமைச்சர், அடுத்த நாளே ‘ஜி.எஸ்.டி கவுன்சிலை மாற்றவேண்டும். பெரிய மாநிலங்களுக்குப் பெரிய ஓட்டு, சின்ன மாநிலங்களுக்குச் சிறிய ஓட்டு' என்றெல்லாம் பேசுகிறார். அதேபோல், ‘திராவிட நாடு கோரிக்கையைத்தான் நாங்கள் வேண்டாம் எனச் சொன்னோம். ஆனால், அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன’ என தி.மு.க ஐ.டி விங் செய்தி வெளியிடுகிறது.

‘மத்திய அரசின் பிடியிலிருந்து தமிழகம் தப்பிவிட்டது' என்கிறார்கள். ‘ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்கிறார்கள். இதையெல்லாம் கலவையாக வைத்துப் பார்த்தால், இவர்கள் ‘ஒன்றிய அரசு' என உள்ளர்த்தத்தோடு சொல்லிவருகிறார்கள் என்பது புரிகிறது. இதைத்தான் நாங்கள் மக்களிடம் முறையிடுகிறோம்!''

``பெட்ரோல் விலையைக் குறைக்க ஆர்வம் காட்டாத மத்திய பா.ஜ.க அரசு, ‘மாநில அரசு விலையைக் குறைக்கலாமே' என ஆலோசனை சொல்வதும்கூட அரசியல்தானே?’’

‘‘ `பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயைக் குறைப்போம் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு விலைக்குறைப்பு செய்யவில்லை. ஏற்கெனவே இருந்ததைவிடவும் கூடுதலாக ஒரு ரூபாய் 20 காசை ஃபார்முலா விதிப்படி வசூலிக்கத்தான் வழி செய்திருக்கிறது. இந்த ஏமாற்று வேலைகளைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.''

``ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்கள் முடிவதற்குள்ளாகவே தி.மு.க-வை விமர்சிப்பது ‘வெத்து அரசியல்' என்று பா.ஜ.க ஆதரவாளரான எஸ்.வி.சேகர் சொல்கிறாரே?’’

‘‘எஸ்.வி.சேகர், சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களின் தனிப்பட்ட கருத்தையெல்லாம் விட்டுவிடுங்கள். நாங்களும்கூட, ‘ஆறு மாதங்களுக்குப் பிறகே அரசின் ஆளுமை குறித்து விமர்சிக்கவேண்டும்' என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே, ‘நீட் தேர்வு விலக்கு' பிரச்னையைக் கொண்டு வருகிறார்கள். அதேசமயம், தேர்தலின்போது கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மட்டும் பின்வாங்குகிறார்கள். இந்த அரசியலைத்தான் விமர்சிக்கிறோம்!''

‘‘தமிழக பா.ஜ.க தலைவர் பதவி வகித்தவர்கள் ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகிவிட்டனர். உங்களுடைய இலக்கு?''

‘‘நான் விரும்பித் தேர்ந்தெடுத்த விவசாயத் துறைக்கே திரும்பவும் போய்விடும் சூழல் வந்தால், ரொம்பவும் சந்தோஷப்படுவேன். அரசியலுக்குள் நான் திட்டமிட்டு வரவில்லை. எனக்குப் பிடித்த சில தலைவர்கள், ‘அரசியலுக்கு நீ வரவேண்டும்' என நிர்பந்தம் கொடுத்ததால்தான் வந்தேன். இது எனக்குப் பெரிய சுமைதான். என் மனைவி பெங்களூரில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள். நான் சென்னையில் இருக்கிறேன். இங்கே எனக்கு ஒரு வீடுகூடக் கிடையாது. நண்பர்களின் அறை, ஹோட்டல் ரூம் எனத் தங்கிக்கொண்டு அரசியல் பணி செய்கிறேன். என் பெற்றோரில் ஆரம்பித்து நான் வளர்த்துவரும் ஆடுமாடுகள்வரை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்கிறோம். ஆனாலும் கட்சியை வளர்ப்பதற்கு, பாரதப் பிரதமரை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற வகையில், இந்தப் பணி எனக்கு ஆனந்தம்தான்!''