Published:Updated:

எதிர்முனையில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்... எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்...

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

ஆடியோ விவகாரத்தை விளக்கும் அண்ணாமலை!

எதிர்முனையில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்... எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்...

ஆடியோ விவகாரத்தை விளக்கும் அண்ணாமலை!

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

கோயில் பூட்டு உடைப்பு, அமைச்சர் கார்மீது காலணி வீசியது, கோயில் உச்சியில் தேசியக்கொடி ஏற்றியது... என பா.ஜ.க நிர்வாகிகளும், படகுப் பயணத்தில் தான் மட்டும் லைஃப் ஜாக்கெட் அணிந்து, ‘இதை எப்படி அரசியல் பண்ணலாம்னு யோசிக்கிறேன்’ என்கிற ஆடியோ சர்ச்சை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து சர்ச்சைக் கடலிலேயே படகு ஓட்டிவருகிறார்கள். தனது அலுவலகத்தில் சுவாரஸ்யமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்... அவ்வப்போது டி.வி-யில் கண்களை ஓட்டிக்கொண்டே பதிலளித்தார்!

“அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியது உட்பட கட்சியை வளர்ப்பதற்காகத் தொடர்ந்து வன்முறையை ஓர் உத்தியாகப் பயன்படுத்துகிறதா பா.ஜக?”

“அமைச்சரின் காரில் செருப்பு வீசியதை ஒரு தலைவராக நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், தி.மு.க-வினர் 2017-ம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு காரில் வந்தபோது செருப்பு, கற்கள் உள்ளிட்டவற்றை எடுத்து அடித்து ஆறு பேர் கைதானார்கள். ‘தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுட்டாங்க’ என்று தி.மு.க தரப்பிலிருந்து பதில் வந்தது. ஆனால், நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. தொண்டர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டியது எங்கள் கடமை. அதைச் செய்வோம்.’’

“பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்தது சரியா?”

“அரசுச் சொத்தாக இருந்தாலும், அதை நிர்வகிப்பது தனியார்தான். அவர்கள் அனுமதி கொடுத்ததால்தான் அங்கு சென்றார்கள். ஆனால், அதிகாரிகள் யாரும் சரியான நேரத்துக்கு வரவில்லை. வெகுநேரக் காத்திருப்புக்குப் பிறகுதான் அந்தச் சம்பவம் நடைபெற்றது.”

எதிர்முனையில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்... எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்...

“தாமதமாகிறது என்பதற்காக, கோயில் பூட்டை உடைக்கலாமா?”

“ஒரு சாதாரண நாளில், அனுமதி வாங்காமல் பூட்டை உடைத்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால், சுதந்திர தினத்தையொட்டி நடந்த சம்பவம் இது. இந்த விஷயத்தில் அண்ணன் கே.பி.ராமலிங்கம் செய்தது தவறு கிடையாது.”

“தவறு இல்லையென்றால் அவரைக் கைதுசெய்ததற்குச் சிறு ஆர்ப்பாட்டம்கூடச் செய்யவில்லையே... ஏன்?”

“அவர் எங்கேயும் பயந்து ஓடவில்லை. முன்ஜாமீன்கூட வாங்காமல் வீட்டில்தான் கைதானார். சுதந்திர தின விழா நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதில் எங்கள் கவனமிருந்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.’’

“ `சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம்’ என்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியில் சேருபவர்கள் பெரும்பாலும் சமூக விரோதிகளாகவே இருக்கிறார்களே?’’

“அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைதுசெய்ய மாட்டார்கள் என்று வருபவர்களுக்கும் இது புகலிடம் அல்ல. சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன. அந்த மாவட்டத் தலைவர்களை நானே கண்டித்திருக்கிறேன். தொடர்ந்து இது பேசுபொருளாக இருப்பதால், இரண்டு தலைவர்களை நியமித்து, புதிதாக வருபவர்களின் பின்னணியைத் தெரிந்துகொண்டு இணைத்துவருகிறோம். ஆனால், இது குறித்து தி.மு.க எங்களை விமர்சிப்பது, கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்துகொண்டு கல்லெறிவதுபோல் இருக்கிறது.”

“காங்கிரஸுக்கு 18 எம்.எல்.ஏ-க்கள். பா.ஜ.க-வுக்கு வெறும் நான்குதான். நீங்கள் காங்கிஸை, ‘தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனில்தான் உயிர்வாழ்கிறது’ என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?”

“உள்ளாட்சித் தேர்தல் ஓர் உதாரணம். அதில் பா.ஜ.க., காங்கிரஸைப் பல இடங்களில் மிஞ்சியிருக்கிறது. இதுவரை வெற்றி பெறாத இடங்களில் வென்றிருக்கிறோம். இன்றைய தேதியில், காங்கிரஸ் ஒரு கூட்டம் போட்டால் 1,000 பேருக்கு மேல் கூட்டம் சேருமா?’’

“ஆனால், பா.ஜ.க காசு கொடுத்துத்தான் கூட்டம் கூட்டுகிறது என்கிறார்களே?”

“தமிழ்நாட்டில் பணம் கொடுக்க பா.ஜ.க ஆளும் கட்சியாக இருக்கிறதா என்ன... அல்லது டாஸ்மாக் கடைகளாவது வைத்திருக்கிறோமா... தொடர்ந்து ஆட்சியிலிருந்த கட்சிகளே திணறும்போது ஆட்சியிலேயே இல்லாத பா.ஜ.க-வால் எப்படிக் கொடுக்க முடியும்... மத்தியில் ஆட்சியில் இருக்கிறீர்களே என்பார்கள். மத்தியிலிருந்து ஊக்கம் வேண்டுமானால் கொடுப்பார்கள், பணம் கொடுப்பார்களா?”

“கொங்கு மண்டலத்தில் உங்கள் எதிர்காலத்துக்குப் பெரிய சவாலாக இருப்பதால்தான், செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள் என்கிறார்களே?”

“எனக்கு எல்லோரும் சமம்தான். ஆனால், 40 சதவிகித பட்ஜெட்டை கன்ட்ரோல் செய்வது செந்தில் பாலாஜியின் துறைதான். அதேபோல, எல்லாக் குற்றச்சாட்டுகளும் அவரைச் சுற்றித்தான் இருக்கின்றன. இந்த அரசின் அமைச்சரவையில் ஊழல் செய்து பணம் சம்பாதித்துக் கொடுப்பதில் நம்பர் ஒன் செந்தில் பாலாஜிதான். மற்ற அமைச்சர்களெல்லாம் டம்மிதான். இன்னும் சொல்லப்போனால் நிறைய தி.மு.க தலைவர்களே ஏர்போர்ட்டில் பார்க்கும்போது, ‘இன்னும் நீங்க வலுவா செந்தில் பாலாஜியை எதிர்க்கணும்’ என்று என்னிடமே சொல்கிறார்கள்.’’

“அவர்மீது இத்தனை குற்றச்சாட்டுகளைச் சொல்லும் நீங்கள் ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டியதுதானே... வெறும் மிரட்டல் அரசியல் எதற்கு?”

“எந்த ஆதாரம் கொடுத்தாலும், ‘இன்னமும் கொடு’ என்று விதண்டாவாதம்தான் செய்வார்கள். பி.ஜி.ஆர் எனர்ஜி மீதான புகார் குறித்து இன்றைக்கு வரைக்கும் முதல்வர் மறுத்துப் பேசவில்லையே... அதற்கான ஆதாரம் எல்லோரிடமும் இருக்கிறது. ‘பி.ஜி.ஆருக்குக் கொடுக்கக் கூடாது’ ஏன்று டேன்ஜெட்கோ சொன்ன பிறகும், சி.எம் மீட்டிங்கில் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி மீது விஜிலன்ஸில் நாங்கள் அளித்த புகாருக்கு இருமுறை சம்மன் கொடுத்து அவர் ஆஜராகியிருக்கிறார். ஆளுநரிடம் கொடுத்த புகாரும் பரிசீலனையில் இருக்கிறது. அவர் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது.”

“நீங்கள் பேசியதாகச் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறதே?”

தி.மு.க மீதான எங்கள் விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களுக்கே உரிய குறுக்குவழியை அந்த ஆடியோ விவகாரத்தில் கையாண்டுள்ளனர். அதைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் இது புரியும். நானும் சுசீந்திரனும் போனில் பேசவே இல்லை. அப்போது ஒரே காரில் போய்க்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், டாக்டர் சரவணனிடமிருந்து எனக்கு போன் வந்தது. நிதியமைச்சர் நடந்துகொண்ட விஷயம் குறித்துச் சொன்னார். அதை, அருகிலிருக்கும் சுசீந்திரனிடம் நான் ஆலோசித்தேன். எதிர்முனையில் இருந்தவர்கள் அதை ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். ஆடியோவில் குறிப்பிட்டிருக்கும் ‘அரசியல் செய்ய வேண்டும், மாஸ்’ போன்ற வார்த்தைகள் வேறொரு பொருளில் பேசியவை. அவற்றைத் தவறாகச் சித்திரித்து, எடிட் செய்து கோர்வையாக வெளியிட்டிருக்கிறார்கள்!”