கட்டுரைகள்
Published:Updated:

சர்ச்சைப் பேச்சுகள், நிர்வாகக் குளறுபடி... தடுமாறும் அண்ணாமலை!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டவுடனேயே, ‘‘தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும், அடுத்தது நாங்கள்தான்” என்று ஏகத்துக்கும் பேசினார்

தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள், சமீபகாலமாகப் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிவருகின்றன. பத்திரிகையாளர்களிடம் அவர் நடந்துகொள்ளும்விதத்தில் தொடங்கி கட்சி நிர்வாகிகளை அவர் ஒருமையில் திட்டுவது வரை அனைத்துமே சர்ச்சையாகிவருகின்றன. கட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் அண்ணாமலை தடுமாறுவதாகச் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள். அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு?

“அண்ணாமலையின் பலவீனமே, ஒரு சங்கடமான சூழலிலிருந்து தப்பிப்பதற்காக ஆங்காங்கே அவர் அவிழ்த்துவிடும் பொய்கள்தான். ஒரு கட்சியில் பலரையும் சந்தோஷப்படுத்திவிட முடியாது. மனமாச்சர்யங்கள், கோப தாபங்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு தலைவராக இவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்டு, அனுசரித்து, எச்சரித்து வழிநடத்த வேண்டியது அண்ணாமலையின் கடமை. ஆனால், இந்தப் பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்கும்விதமாக அண்ணாமலை நடப்பதுதான் அவர் தடுமாற்றத்துக்குக் காரணம்.

சர்ச்சைப் பேச்சுகள், நிர்வாகக் குளறுபடி... தடுமாறும் அண்ணாமலை!

மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டவுடனேயே, ‘‘தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும், அடுத்தது நாங்கள்தான்” என்று ஏகத்துக்கும் பேசினார். அப்போதே கூட்டணியிலிருந்த அ.தி.மு.க அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்தச் சூழலில், மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று வெளியானது. தொடர்ந்து, கே.டி.ராகவன் கட்சிப் பொறுப்பு களிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தை அண்ணாமலை கையாண்ட விதத்தை கட்சி சீனியர்கள் யாரும் ரசிக்கவில்லை. சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கபிலன் மீது, பா.ஜ.க-வைச் சேர்ந்த ரதி எனும் திருநங்கை பாலியல் புகார் தெரிவித் தார். இந்தப் புகாரையும் அவர் முழுவதுமாக விசாரிக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்படாததால், கட்சியைவிட்டு வெளியேறினார் ரதி.

சமீபத்தில் டெய்சி - சூர்யா சிவா ஆடியோ சர்ச்சை வெடித்தது. டெய்சிக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில், காயத்ரி ரகுராம் பற்றி அண்ணாமலை கூறிய சில கருத்துகள் சர்ச்சையாகின. இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி காயத்ரி ரகுராம் பல முறை கேட்டபோதும், அண்ணாமலை அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் கட்சியிலிருந்து வெளியேறுவதாக காயத்ரி அறிவித்தார். இப்படி, கட்சி நிர்வாக விஷயங்களில் அண்ணாமலை தொடர்ந்து சறுக்கித்தான் வருகிறார். பத்திரிகையாளர் களை, ‘குரங்கு மாதிரி ஏன் என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்’ என்று விமர்சித்ததில் தொடங்கி சமீபத்தில் சில செய்தியாளர் களிடம் வார்த்தைப்போர் நடத்தியது வரை அவர் நடவடிக்கைகள் எல்லாமே நிதானமில்லாமல்தான் இருக்கின்றன. இது கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல” என்றனர்.

பா.ஜ.க முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், “அண்ணாமலை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் அரசியலுக்கு வந்த பிறகும் அதே மனநிலையில்தான் இருக்கிறார். தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் ஆகியோர் மாநிலத் தலைவர்களாக இருந்தபோது, இவரைப்போல பொதுவெளியில் நடந்துகொண்டது கிடையாது. அண்ணாமலை இது போன்று நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது” என்றார்.

நாராயணன் திருப்பதி, காயத்ரி ரகுராம், டெய்சி, சூர்யா சிவா
நாராயணன் திருப்பதி, காயத்ரி ரகுராம், டெய்சி, சூர்யா சிவா

அண்ணாமலையின் சர்ச்சைப் பேச்சுகள், நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஓர் அரசியல் தலைவர் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை யாரும் சொல்லிக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவெளியில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்குத் தெரியும். பத்திரிகையாளர்களோ, அரசியல்வாதிகளோ கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கிடையாது. ஆவின், பொங்கல் தொகுப்பு, மின்துறை, டாஸ்மாக் ஆகிய துறைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அண்ணாமலை ஆதாரத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களைப் பார்த்து மிரண்டுபோய்த்தான் தி.மு.க தன்னுடைய பல நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அண்ணாமலை அரசியலில் புரட்சி செய்வதுபோல, இது போன்ற விவகாரங்களிலும் புரட்சி செய்துகொண்டிருக்கிறார். அண்ணாமலை நிதானம் இல்லாமல் பேசுகிறார் என்று கூறுவதே ஒரு விஷமப் பிரசாரம்” என்றார்.

ஆனால், “அண்ணாமலைக்கு நிதானம் வருவதற்குள், கட்சி கலகலத்துவிடும்போல!” என்று ‘உச்’ கொட்டுகிறார்கள் பல கமலாலய சீனியர்கள்!