அரசியல்
அலசல்
Published:Updated:

‘நாட் ரீச்சபிள்’ அண்ணாமலை... கடுகடுக்கும் கமலாலயம்!

கமலாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
கமலாலயம்

தாமரைச்செல்வன் - ஓவியம்: சுதிர்

எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவலாகவும், சமூக வலைதளங்களில் ‘கன்டென்ட்’டாகவும் மாறிவிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, இப்போது சொந்தக் கட்சியினரின் அதிருப்தி வளையத்துக்குள்ளும் விழுந்திருக்கிறார். “ஒன்பது ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் பெருமைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க, அடுத்த ஒரு மாதத்துக்கு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டிருக்கிறது டெல்லி தலைமை. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைவருடன் பேச முடிவதில்லை. கமலாலயத்துக்கு வருவதைக்கூடக் குறைத்துக்கொண்டார் அண்ணாமலை” என்கிறார்கள் பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும். என்னதான் நடக்கிறது கமலாலயத்தில்... விசாரணையில் இறங்கினோம்.

கமலாலயம்
கமலாலயம்

நம்மிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர்கள் சிலர், “மாநிலத் தலைவர்களாக தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் இருந்தபோது, மாதத்தில் பதினைந்து நாள்களுக்கு மேல் கமலாலயத்தில்தான் இருப்பார்கள். நிர்வாகிகளைச் சந்திப்பார்கள். கட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுவார்கள். பிசிறு இல்லாமல் ஒருங்கிணைப்பு நடந்தது. ஆனால், இப்போது அந்த மாதிரியான ஒருங்கிணைப்பே இல்லாமல் போய்விட்டது.

கட்சி அலுவலகத்தில் ஏதாவது நிகழ்ச்சி வைத்தால்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறார் அண்ணாமலை. கடந்த சில வாரங்களாக நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. கர்நாடகா மாநிலத்துக்குக் கட்சியின் இணை தேர்தல் பொறுப்பாளராகச் சென்ற அண்ணாமலை, தேர்தல் முடிந்த பிறகு ஓரிரு முறைதான் அலுவலகத்துக்கு வந்தார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், நீக்கம், விசாரணை எனத் தொடர்ந்து பணிகள் நடைபெறுகின்றன. இதில், மாநிலத் தலைவராகத் தன் ஆலோசனையை அண்ணாமலை வழங்குவதில்லை. அவசர முக்கியத்துவம் வாய்ந்த கட்சிப் பிரச்னைகளுக்கு, சீனியர்களால்கூட அவரை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒன்பதாண்டு பா.ஜ.க அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, சில திட்டங்களை டெல்லி போட்டுக் கொடுத்திருக்கிறது. கிராமம்தோறும் மத்திய அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்க்கச் சொல்லியிருக்கிறது. இது தொடர்பாக, மாவட்டத் தலைவர்களுடன் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் விவாதிக்கிறார்கள். ஆனால், அண்ணாமலை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை.

‘நாட் ரீச்சபிள்’ அண்ணாமலை...
‘நாட் ரீச்சபிள்’ அண்ணாமலை...

சென்னையில் இருந்தால்கூட அலுவலகம் வருவதை அவர் தவிர்ப்பதால், கட்சி சீனியர்கள் அவரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றார்கள். ‘எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினெல்லாம் தினமுமா அலுவலகம் செல்கிறார்கள்... அவர்கள் கட்சி நடத்தவில்லையா?’ என சீனியர்களின் வாயை அடைத்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நேரத்தில், தன்னைத் தொடர்பு எல்லைக்கு வெளியே அண்ணாமலை வைத்துக்கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதல்ல. ‘வாரத்துக்கு ஒரு பிரச்னையைப் பற்றி பேசி, லைம்லைட்டில் இருந்தால் போதாதா... இதற்காக அலுவலகம் வர வேண்டுமா?’ என்றெல்லாம் அண்ணாமலையின் அடிப்பொடிகள் காரணங்களை அடுக்குகிறார்கள். பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் தொடங்கி, சக்தி கேந்திர கூட்டங்களை வலிமைப்படுத்துவது வரை பல பிரச்னைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் களத்தில் இறங்கினால்தான் முடியும். கட்சியில், ஒருங்கிணைப்பு என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் ஆபத்தை அவர் உணரவில்லை. ‘நாட் ரீச்சபிள்’ மோடிலிருந்து அண்ணாமலை முதலில் வெளியே வர வேண்டும்” என்றனர் விரிவாக.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அண்ணாமலை மீது எழுந்திருக்கும் இந்த விமர்சனங்கள் தொடர்பாக, பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஓர் இளம் தலைவர் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படும்போது, அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் இது போன்ற விமர்சனங்களை எழுப்பத்தான் செய்வார்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. 24 மணி நேரமும் அலைபேசியில் கட்சி நிர்வாகிகள் தொடர்புகொள்ளும்படியாகத்தான் இருக்கிறார் அண்ணாமலை. சென்னையில் இருக்கும்போது அலுவலகத்துக்கு நேரில் வந்து, தொண்டர்கள் மட்டுமல்லாமல், சாதாரண பொதுமக்களையும் அவர் சந்திக்கிறார். அவர்மீதான விமர்சனங் களெல்லாம் அர்த்தமற்றவை” என்றார்.

இதற்கிடையே, “அண்ணாமலையின் சுற்றுப்பயணத்துக்கு, மேப்பும் நோட்டுமாகத் திரிந்த நிர்வாகிகளெல்லாம் ரொம்பவே சோர்ந்து போய்விட்டார்கள். ஒன்பதாண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடத்தாமல், சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கக் கூடாது என டெல்லி உத்தரவிட்டுவிட்டதுதான் அதற்குக் காரணம்” என்கிறது கமலாலய வட்டாரம்!

அண்ணாமலையையும் சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாதுபோல!