Published:Updated:

மத்திய அமைச்சர் எல்.முருகன்: சட்டக் கல்லூரி முதல் டெல்லி அரசியல் வரை! - கடந்துவந்த பாதை

எல்.முருகன்

2020-ல் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகக்குறுகிய காலகட்டத்தில் மத்திய அமைச்சராக உயர்ந்தது எப்படி... அவரின் கடந்தகால வரலாறு என்ன?

மத்திய அமைச்சர் எல்.முருகன்: சட்டக் கல்லூரி முதல் டெல்லி அரசியல் வரை! - கடந்துவந்த பாதை

2020-ல் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகக்குறுகிய காலகட்டத்தில் மத்திய அமைச்சராக உயர்ந்தது எப்படி... அவரின் கடந்தகால வரலாறு என்ன?

Published:Updated:
எல்.முருகன்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து மத்திய அமைச்சரவையில் இதுவரையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் இடமும் காலியாக இருப்பதால் மொத்தத்தில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திவந்தார்.

முன்னதாக நரேந்திர மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது (மோடியைத் தவிர்த்து 21 கேபினெட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தனர். அப்போது அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தநிலையில், விரிவாக்கத்தில் பெண்கள் மற்றும் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கும், இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதாகக் கூறப்பட்டுவந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக உறுதியான வட்டாரத் தகவல்கள் இன்று காலை முதலே டெல்லியிலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. முன்னதாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறப்பட்டுவந்தது. தமிழகத்தின் சார்பாக மத்திய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இருக்கும்போதிலும், தமிழக மக்களுடன் இணக்கமான நபர் என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் மத்தியில் இல்லை. மேலும், எஸ்.சி சமூக பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் இந்தமுறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை
மாதிரி படம்

இந்தநிலையில், தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட புதிதாக 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்குப் பிரதிநிதித்துவம் வாங்கிக் கொடுத்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தற்போது மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020-ல் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகக்குறுகிய காலகட்டத்தில் மத்திய அமைச்சராக உயர்ந்தது எப்படி, அவரின் கடந்தகால வரலாறு என்ன?

1977, மே 29 -ம் தேதி நாமக்கல் மாவட்டத்தின் கோனூர் கிராமத்தில் பிறந்த எல்.முருகன், சுந்தரத் தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலைப் பட்டமும், அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்றுள்ள சட்டக் கல்லூரி மாணவரான எல்.முருகன், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் முருகன், 1997-ல் தனது கல்லூரிப் பருவத்தின்போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைந்தார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் முருகனின் பெயரை பாஜக தலைமைக்குச் சிபாரிசு செய்தனர்.

அதன்பேரில், பாஜக சார்பாகப் போட்டியிட முருகனுக்கு தலைமை வாய்ப்பளித்தது. முதன்முறையாக 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய முருகன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்தத் தேர்தலில் எல்.முருகனுக்கு 1,730 வாக்குகள் மட்டுமே கிடைத்தன, அந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அவர் பெற்றது 1.07 சதவிகிதம்.

மோடியுடன் எல்.முருகன்
மோடியுடன் எல்.முருகன்

அதற்குப் பிறகு, கேரள மாநிலப் பொறுப்பாளராகச் சில காலம் பதவிவகித்தார். அதேபோல், அம்பேத்கர் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் முருகன் இருந்தார். அதைத் தொடர்ந்து, எஸ்.சி ஆணையத்தின் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றினார். இந்தநிலையில், அந்தப் பதவிக் காலம் முடிய ஓராண்டு இருக்கும் நேரத்தில், முருகன் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களைச் சந்தித்தார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களுடன் பழகியவிதம், அவரை தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக டெல்லியில் பிரதிநிதித்துவப்படுத்தியது.

இதற்கிடையில், தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான ரேஸில் கட்சியின் சீனியர்கள் பலரும் வரிசைகட்டினார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமை எல்.முருகனைத் தலைவராக அதிரடியாக அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் முருகன், தனக்கு வழங்கப்பட்ட மாநிலத் தலைவர் பதவியை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதியதுடன், அதற்கான பொறுப்புடனும் கட்சியைத் தமிழகத்தில் வழிநடத்தினார். கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக வேல் யாத்திரை நடத்தியது, அதிமுக, திமுக கட்சிகளுக்கு இணையாக பாஜக சார்பாகப் பேரணி நடத்தியது, நிகழ்ச்சிகளை நடத்தியது என எல்.முருகன், கட்சியோடு தன்னையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அதேபோல், இத்தனை ஆண்டுகாலமாகத் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பாஜக-வுக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பரிசாக அளித்து தாமரையைத் தமிழகத்தின் தொகுதிகளுக்குள் மலரவைத்ததில் முருகனுக்கும் பெரும் பங்கு உண்டு. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் முருகன் போட்டியிட்டு தோல்வியடைய நேரிட்டாலும், வெகு காலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் பாஜக காலடி எடுத்துவைத்திருப்பது பாஜக தலைமையை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சு அடிபட்டதிலிருந்தே டெல்லியில் முகாமிடத் தொடங்கிய எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்து, தனது தலைமையிலான சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அதேபோல், தமிழக மூத்த தலைவர்களும் எல்.முருகனுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை என்பதால், தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் முருகனுக்கு வாய்ப்பு வழங்க பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில்,ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் இன்று காலை ராஜினாமா செய்துவிட்டதால், அமைச்சரவையில் பலருக்கும் புதிதாக வாய்ப்புகள் வழங்கப்படும் சூழல் ஏற்பட்டது.

அமைச்சரவை விரிவாக்க பட்டியல்
அமைச்சரவை விரிவாக்க பட்டியல்

இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாகப் பதவியேற்கவிருக்கும் 43 மத்திய அமைச்சர்களின் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் 42-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை டெல்லியில் அவர் பதவியேற்றார்.

தற்போது, தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அந்தப் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழக பாஜக-வில் எகிறியிருக்கிறது. இந்தநிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அல்லது அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.