அலசல்
Published:Updated:

ஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம்! - எல். முருகன் அதிரடி

எல். முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எல். முருகன்

கட்சிமீது யார் வேண்டுமானாலும் குற்றம் சொல்லிவிட முடியும். ஆனால், அவையெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன?

விடாது துரத்தும் ‘ஒன்றிய அரசு’ சொல்லாடல், ஹெச்.ராஜா கையாடல் செய்துவிட்டதான உட்கட்சிப் புகார், கமலாலயத்தில் விசாகா கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற பகீர் செய்தி... எனப் பரபரத்துக்கிடக்கிறது தமிழக பா.ஜ.க வட்டாரம். இதற்கிடையே, ‘மாநிலங்கள் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கவில்லை!’ எனக் கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்தோம்...

“சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் வல்லபாய் படேல் என 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை வைத்துவிட்டு, ‘இந்தியாவை மாநிலங்கள் உருவாக்கவில்லை’ எனப் பேசலாமா?’’

“பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்துவந்த புதுச்சேரி, டச்சுக்காரர்களிடமிருந்த டாமன் டையூ, நிஜாமிடமிருந்த ஹைதராபாத் உள்ளிட்ட சமஸ்தானங்களையெல்லாம் வல்லபாய் படேல்தான் மிகப்பெரிய முயற்சியெடுத்து இந்தியாவோடு ஒருங்கிணைத்தார். அதனால்தான் அவரை ‘இரும்பு மனிதர்’ எனப் போற்றுகிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தமிழ்நாடு அப்படியல்ல... ஆங்கிலேயர்களின் நேரடி கண்காணிப்பில் அப்போதே ‘சென்னை மாகாணமாக’ இருந்துவந்தது. அதேபோல், கல்கத்தா மாகாணம் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் ஏற்கெனவே ஒருங்கிணைந்துதான் இருந்தன. எனவே, இன்றைய காலகட்டத்தில், ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை தி.மு.க-வினர் பயன்படுத்தி வருவதென்பது, பிரிவினைவாதிகளுக்குக் கைகொடுக்கிற வார்த்தையாக இருக்கிறதோ என்பதுதான் எங்களது சந்தேகமாக இருக்கிறது!’’

“தமிழக பா.ஜ.க தலைவர்களில் சிலர்மீது பாலியல் புகார்கள் வந்திருப்பதாகவும், இது குறித்து ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் செய்திகள் வந்திருக்கின்றனவே?’’

“எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்ற செய்தி இது. எனவே, எங்கள் கட்சி சார்பான வழக்கறிஞர்கள் குழு, இது விஷயமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.’’

“காரைக்குடி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா, தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை அபகரித்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?’’

“தேர்தல் கமிஷன் வரையறுத்திருக்கும் தொகையை மட்டுமே செலவு செய்து பிரசாரம் செய்திருக்கிறார் ஹெச்.ராஜா. மற்றபடி எங்கள் கட்சி யாருக்கும், எந்தவிதக் காசும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால்தானே குற்றச்சாட்டு எழும்!’’

“பா.ஜ.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக, தலா 13 கோடி ரூபாயைக் கட்சி மேலிடம் கொடுத்திருப்பதாக பா.ஜ.க ஆதரவாளரான எஸ்.வி.சேகரே தகவல் வெளியிட்டிருந்தாரே?’’

“கட்சிமீது யார் வேண்டுமானாலும் குற்றம் சொல்லிவிட முடியும். ஆனால், அவையெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? எனவே, இந்த விஷயத்தில், தமிழக பா.ஜ.க-வில் எஸ்.வி.சேகர் பொறுப்பில் இருக்கிறாரா என்பதைத்தான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். அடிப்படையே இல்லாமல், யாரோ ஒருவர் பேசினார் என்பதற்காக அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!’’

ஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம்! - எல். முருகன் அதிரடி

“அப்படியென்றால், இது விஷயமாகக் கட்சித் தலைமைக்குப் புகார் கொடுத்து, ராஜினாமா செய்துகொண்ட சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பொய் சொல்கிறார்களா?’’

“ஹெச்.ராஜா, பா.ஜ.க-வின் மூத்த தலைவர். அப்படிப்பட்ட ஒருவர்மீது போகிற போக்கில் யாரும் குற்றம் சுமத்திவிட முடியாது. அதேசமயம், பா.ஜ.க என்பது ஒரு ஜனநாயகக் கட்சி. எனவே, கட்சி நிர்வாகிகள் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிற சூழலில், இது குறித்து உரிய விசாரணை செய்வோம். இது குறித்து விசாரித்து அறிவதற்காக நேற்றே தலைமைக் கழகத்திலிருந்து ஒரு குழு சிவகங்கை சென்றிருக்கிறது. அவர்களது விசாரணையில் தெரியவரும் செய்திகளை விரைவில் நாங்களே அறிவிப்போம்!’’

“பா.ஜ.க மீதான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் விசாகா கமிட்டி குறித்த செய்திகளில் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா?’’

“இந்த இரண்டு செய்திகளுமே அடிப்படை ஆதாரமற்ற செய்திகள்தான். ஆனாலும்கூட, இந்தச் செய்திகளின் பின்னணி என்னவென்று விசாரணை செய்துவருகிறோம். கமலாலயத்தை நாங்கள் கோயிலாக நினைத்துக் கும்பிடுகிறோம். அப்படிப்பட்ட புனிதமான கமலாலயத்தைக் களங்கப்படுத்த நினைப்பவர்கள் எங்கள் கட்சிக்காரர்களாகவே இருந்தாலும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை!’’

“நீட் தேர்வுக்கு விலக்கு கோருகிற உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராகவே கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்களே?’’

“எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத் தீர்மானத்தின் எந்தவோர் இடத்திலும், அ.தி.மு.க என்ற கட்சியின் பெயரையே நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக ‘திராவிடக் கட்சிகள்’ என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறோம்!”

“ `சட்டத்துக்கு உட்பட்டு, நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு தெரிவிப்போம்’ எனச் சட்டமன்றத்தில் சொல்கிற பா.ஜ.க., வெளியே வந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

“நீட் தேர்வு குறித்த வழக்கு இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் இருந்துவருகிறது. இந்த வழக்கில் வெளிவரவிருக்கிற தீர்ப்பைப் பொறுத்து, சட்டத்தின் வழியிலேயேதான் பா.ஜ.க பயணிக்கும். இதைத்தான் ‘சட்டத்துக்கு உட்பட்டு நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு தெரிவிப்போம்’ என எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லையே!’’

“திராவிடக் கட்சிகளுக்கு எதிராகத் தமிழக பா.ஜ.க இயற்றியுள்ள தீர்மானம், உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்திவிடாதா?’’

“நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதென்பது வழக்கமான ஒன்று. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் என்பது, கட்சியிலுள்ள அடிப்படைத் தொண்டர்களும் கிராமங்கள் அளவிலான சிறுசிறு பொறுப்புகளில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ள தேர்தல் முறை. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலை, கட்சியை வளப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே எங்கள் தொண்டர்கள் பார்க்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எங்கள் தொண்டர்களின் உத்வேக மனநிலையையும் கருத்திற்கொண்டு எங்கள் கட்சி இது குறித்து முடிவெடுக்கும்!’’