Published:Updated:

``இந்தி எதிர்ப்பு பெயரில், வராத ரயில் பாதையில் தலையை வைத்தவரின் வழித்தோன்றல்..." - அண்ணாமலை தாக்கு!

ஸ்டாலின் - அண்ணாமலை

``தமிழ்நாட்டில் தமிழ் மொழி காக்கப்பட்டுள்ளதா என்பதை திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

``இந்தி எதிர்ப்பு பெயரில், வராத ரயில் பாதையில் தலையை வைத்தவரின் வழித்தோன்றல்..." - அண்ணாமலை தாக்கு!

``தமிழ்நாட்டில் தமிழ் மொழி காக்கப்பட்டுள்ளதா என்பதை திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, 100 சதவிகிதம் பயிற்று மொழியாக இந்தியைக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா
அமித் ஷா

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " `இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம்... ஆரம்பத்திலேயே நான்கு காலிகளைச் சுட்டிருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும், உடைமை சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்... எதற்காக போலீஸ்... எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி... எதற்காக முத்தம் கொடுக்கவா... இது என்ன அரசாங்கம்... வெங்காய அரசாங்கம்?’ என்று பேசியிருக்கிறார் பெரியார். (`இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்’ பதிப்புரை)

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

`எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ... தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல. ஆங்கிலம் பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழ் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.’ இதைச் சொன்னதும் பெரியார். (விடுதலை 27.1.1969)

தமிழ் மொழி உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த தாளமுத்து நடராஜன், டாக்டர் தருமாம்பாள் அவர்களின் குடும்பத்தார் இன்று தி.மு.க-வின் தலைவராக இருக்கிறார்களா... குறைந்தபட்சம் முக்கியப் பொறுப்புகளிலாவது இருக்கிறார்களா... அவர்களுக்கு அமைக்கப்பட்ட சமாதி கேட்பாரற்று, பராமரிப்பின்றி இருக்கிறதே... இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்துக்கொண்டு போராடியவர்களின் வழித்தோன்றல்களான தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதற்கு பதிலளிப்பாரா?

அண்ணாமலை
அண்ணாமலை

முன்பு எப்போதுமே இல்லாதவாறு முதன்முறையாக 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தி.மு.க தமிழ் வளர்க்க கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தவிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்... 2020-ம் ஆண்டு தமிழில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,23,278 (ஏஐசிடிஇ வழங்கிய புள்ளிவிவரங்களின்படி) 2021-22 கல்வியாண்டில் தமிழில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 50. தமிழகத்தில் சுமார் 1.9 லட்சம் பொறியியல் பட்டப்படிப்பு இடங்களில், வெறும் 1,377 இடங்கள் மட்டுமே தமிழ்வழிக் கல்வியாகும்.

ஆட்சி மொழிக்குழு வழங்கிய பரிந்துரையில் தமிழ் மொழி உட்பட அனைத்துப் பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, முதல்வர் தனது அறிக்கையில் தவிர்த்தது ஏன்... தமிழுக்காக முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டம் நடந்த 80 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் தமிழ் வளர்ந்திருக்கிறதா... தமிழகத்தில் தமிழ் மொழி காக்கப்பட்டிருக்கிறதா என்பதை தி.மு.க தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இனியும் பிரிவினைவாத சிந்தனைகளைத் தூண்டிவிடாமல், மக்களை வஞ்சிக்காமல், அரசியல் லாபத்துக்காகப் பொய்க் கதைகளைக் கட்டவிழ்த்து விடாமல் தி.மு.க-வினர் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.