Published:Updated:

`துணை முதல்வர் மகன் மீதே கும்பல் தாக்குதல்!' -முதல்வருடனான சந்திப்பில் கொதித்த பா.ஜ.க நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்தபோதுகூட என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் வந்துதான், அந்தப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்து அழைத்துச்சென்றார்கள். இந்தியாவிலேயே அதிகமான நபர்களைத் தமிழகத்தில்தான் கைதுசெய்திருக்கிறார்கள்'.

``குடியுரிமைச் சட்டத்தை ஆதரிப்போர்மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சட்டத்தை ஆதரித்தார் என்ற காரணத்துக்காக அ.தி.மு.க துணை முதல்வரின் மகன்மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை மையமாக வைத்துதான் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் சொல்வதை அரசியலாகப் பார்க்காதீர்கள்'' என முதல்வருடனான சந்திப்பில் விளக்கியுள்ளனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அண்மையில் பேசுகையில், ``தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே இதை நான் சொல்லி வருகிறேன்" என்றார். இதற்கு பதில் கொடுத்த ஜெயக்குமார், ``பா.ஜ.க தலைவர் பதவி கிடைக்காத விரக்தியால் தமிழக அரசைப் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறார். நல்லாட்சி நடப்பதாகத் தமிழக அரசைப் பாராட்டிய மத்திய அரசைப் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா.. மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்?'' என்று பதிலடி கொடுத்தார்.

`ரவீந்திரநாத் குமாரின் கார் வழிமறிப்பு; கைது, மறியல் சம்பவங்கள்!’- தேனியில் இரவில் நடந்த களேபரங்கள்

இவரின் கருத்துக்கு வானதி சீனிவாசனும், `எதிர்க்கட்சி சொல்வதாக நினைக்காமல் களத்தின் சூழல் கருதி நடவடிக்கை எடுங்கள்' என்று பேட்டிகொடுத்தார். தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு இரு கட்சிகளுக்குள் கருத்து மோதல்கள் நீடித்துவரும் நிலையில், இன்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், கறுப்பு முருகானந்தம், வினோஜ் ஆகியோர் தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஒரு மணிநேரம் இச்சந்திப்பு நடந்திருக்கிறது. தற்போது உள்ள அரசியல் சூழலில், தமிழக முதல்வருடனான பா.ஜ.க நிர்வாகிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிற‌து.

கே.எஸ் நரேந்திரன்
கே.எஸ் நரேந்திரன்

கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். ``தமிழகத்தை மையமாக வைத்து பல தீவிரவாத குழுக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றவர், ``தமிழகத்தில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரிப்போர்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க தொண்டர்கள் மாவட்டங்கள்தோறும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு, நோட்டீஸ் கொடுக்கும் இடத்திலும் திட்டமிட்டு தாக்குகிறார்கள். இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திருச்சி, சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, மேட்டுப்பாளையம் எனத் தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை. மேலும், குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க எம்.பி-யும் துணை முதல்வரின் மகனுமான ரவீந்திரநாத் குமாரின் கார்மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்துகிறது. அவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?

இதற்கு, எதிர்க்கட்சிகள் எல்லாம் வாய் மூடி இருக்க என்ன காரணம்... இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்தபோதுகூட என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் வந்துதான் அந்த பயங்கரவாதிகளைக் கைதுசெய்து அழைத்துச்சென்றார்கள். என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்தியாவிலேயே அதிகமான நபர்களைத் தமிழகத்தில்தான் கைதுசெய்திருக்கிறார்கள்.

எம்.பி ரவீந்திர நாத்
எம்.பி ரவீந்திர நாத்

இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும். இல்லையென்றால் நிலைமை கேள்விக்குறிதான். அதேபோல், சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில், ஒரு அரசியல் கட்சிகூட கண்டிக்கவில்லை. ஒரு சில தீவிரவாத, மத பயங்கரவாத அமைப்புகளுக்கு தமிழகம் மையக் களமாக இருக்கிறது என்று முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அவரும் முழுமையாகக் கேட்டுக்கொண்டார். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு