Published:Updated:

``ஆளுநர் `தமிழகம்' என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது... நடப்பதெல்லாம் நாடகம்!" - அண்ணாமலை

அண்ணாமலை

``ஆளுநரின் கருத்துகளை, சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு இருக்கிறதா..?" - அண்ணாமலை

``ஆளுநர் `தமிழகம்' என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது... நடப்பதெல்லாம் நாடகம்!" - அண்ணாமலை

``ஆளுநரின் கருத்துகளை, சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு இருக்கிறதா..?" - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதமும், ஆளுநருக்கெதிராக தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு தி.மு.க வேடிக்கை பார்க்கிறது’ என்றும், `சட்டசபையில் நடப்பதெல்லாம் நாடகம்’ என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, ``இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆளுநரின் உரை வாசிக்கப்படும்போது, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியினர் `தமிழகம்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர். `ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய வேண்டும்’ என்ற கோஷத்துடனும் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`ஆதி மனிதன் தமிழன்தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்த் தேன். மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலில் கண்டதும் தமிழகம்தான்' என்று தமிழகம் என்ற தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைவரிகளை நினைவுகூர்ந்து, நான் தமிழக அரசைக் கேட்கிறேன்… ஆளுநர் அவர்கள் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது... ஆகாத மாமியாரின் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்பதுபோல ஆளுநர் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், எதிர்மறையாகப் பேச வேண்டும் என்பதைக் கண்மூடித்தனமாக செய்துகொண்டிருக்கும் தமிழக அரசு, ஆளுநரின் தமிழகம் என்ற சொல்லாடலை எதிர்த்து கிளர்ச்சி செய்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

அண்ணாமலை அறிக்கை
அண்ணாமலை அறிக்கை

பொங்கல் பரிசுக்கான டோக்கன்களையெல்லாம் ரேஷன் அதிகாரிகள் மூலம் வழங்காமல், அந்தந்தப் பகுதியிலுள்ள தி.மு.க கட்சிக்காரர்கள் மூலம் கொடுக்கக் காரணம் என்ன... தமிழக முதல்வர் கொடுப்பது தமிழக அரசுப் பணமா அல்லது தி.மு.க-வின் கட்சிப் பணமா... பல பகுதிகளில் டோக்கன்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட காரணம் என்ன... பொதுமக்களின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்காக ஆளுங்கட்சி திட்டமிட்டு இந்தத் தமிழகம், தமிழ்நாடு என்ற புதுப் பிரச்னையைக் கிளப்புகிறது. மூச்சுக்கு 300 முறை, `தமிழக அரசு’, `தமிழக அரசு’ என்று சொல்லிக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், இனி தமிழக அரசு என்று சொல்லாமல் இருப்பதற்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். பயிற்சி எடுக்கவேண்டியிருக்கும்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில், அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சி இதுவரை கடந்துவந்த பாதையின் விளக்கத்தையும், இனி செய்யவிருக்கும் திட்டங்களின் முன்னறிவிப்புகளையும், ஆளுங்கட்சியினர் எழுதி, ஆளுநரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வது மரபு. ஆக, இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.என்.ரவி வாசித்த ஆளுநர் உரை என்பது தி.மு.க அரசால் எழுதி வழங்கப்பட்ட உரையே தவிர கவர்னரின் சொந்தக் கருத்துகள் அதில் இடம்பெறவில்லை. பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும் தி.மு.க-வினர் கூட்டணிக் கட்சியினரைத் தூண்டிவிட்டு, மௌனமாக ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய  ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தி.மு.க அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் அவர்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்... ஆளுநரின் கருத்துகளை, சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு இருக்கிறதா... கவர்னர் பேசிய பின்னர், மரபுக்குப் புறம்பாக முதல்வர் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துவதும் முற்றிலும் தவறானது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது. ஆளுநரின் வரைவு உரை 6 ஜனவரி, 2023 அன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், ஜனவரி 7-ம் தேதி ஆளுநர் உரையின் சில பகுதிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

`தமிழ்நாடு தொடர்ந்து அமைதி மற்றும் அமைதியின் மாநிலமாகவும், வன்முறையிலிருந்தும் விடுபட்ட மாநிலமாகவும் உள்ளது' என்ற வாசகத்தை அரசு சேர்த்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, பெண் காவலரை தி.மு.க-வின் இளைஞரணியினர் துன்புறுத்திய சம்பவத்தைக் கண்டு தமிழகமே அதிர்ந்த பிறகும், தமிழகத்தின் ஆளுநர், மக்கள் கருத்துக்கு மாறாக தமிழகம் அமைதிப் பூங்கா என்று அவரால் எப்படிப் பொய்யுரைக்க முடியும்... மொத்தத்தில் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவுசெய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பதெல்லாம் நாடகங்களே" எனத் தெரிவித்திருக்கிறார்.