தமிழக அரசால் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, உடனடியாக ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த ஜூன் 6-ம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிபெற்று தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றிவரும் செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். அரசு, ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் வாழ்வாதாரம் கருதி செவிலியர்கள் `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.
இதை ஏற்காத ஒப்பந்த செவிலியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், `ஒப்பந்த செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு முறை ஏதும் பின்பற்றப்படவில்லை. மூன்று மாதங்கள்கூட பணி செய்யாத செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடுகிறார்கள். இவர்கள் எவ்வாறு பணி நிரந்தரம் கோர முடியும்?' என்று உண்மையை மறைத்துப் பேசியிருக்கிறார். ஆதாரம் சுகாதாரத்துறைச் செயலரின் அரசுக் கடிதம் எண் 11358/ஆ1/2022 1 தேதி 29.03.2022.

முதலில், பெருந்தொற்று காலத்தில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தொகுப்பூதிய அடிப்படையில், முறைப்படி மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும், பெருந்தொற்று பரவிய காலத்தில், தடுப்பூசி செலுத்தும் பணியில், தங்கள் பாதுகாப்பையும், உயிரையும் பொருட்படுத்தாமல், தேச நலனுக்காகத் தொண்டுகள் புரிந்த தன்னலமற்ற செவிலியர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தி, அவர்களை வஞ்சித்து, அவர்களுக்கு தற்போது வேலையில்லை என்று பணிமுறிப்பு செய்து வெளியேற்றுவது என்பது தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 6,000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக முந்தைய அ.தி.மு.க அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த தி.மு.க அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, தற்போது திடீரென அவர்களைப் பணிநீக்கம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்கத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை மாவட்ட சுகாதார இயக்கத்துக்கு மடைமாற்றி அவர்களைத் தந்திரமாக வெளியேற்றும் மோசடியை, தமிழக அரசு நிறுத்த வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் உறுதிசெய்யப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 3,200 பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், செவிலியர்களின் மருத்துவச் சேவைக்குத் தேவையிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறப்பட்டிருக்கிறது.