Published:Updated:

`பொங்கலுக்குள் புதுத் தலைவர்..!'- டெல்லி சிக்னலால் கதிகலங்கும் கமலாலயம்

தமிழக பா.ஜ.க தலைவர் பதவியைப் பெறுவதற்காகச் சிலர் டெல்லியிலும் லாபி செய்யத் தொடங்கியுள்ளனர்.

தமிழக பா.ஜ.க
தமிழக பா.ஜ.க

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் கிளம்பியுள்ள நிலையில் பா.ஜ.க தலைவரைத் தேர்வு செய்வதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் பதவியைப் பிடிக்க நிர்வாகிகள் சிலர், டெல்லி லாபியை நம்பிக் களமிறங்கியுள்ளனர்.

கமலாலயம்
கமலாலயம்

தமிழகத்தில் பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

இக்கட்சியின் விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கையும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலும் நடத்தப்படும். அதன்படி, 2018 டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய உட்கட்சி தேர்தலும் உறுப்பினர் சேர்க்கையும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் கடந்த அக்டோபரில் உட்கட்சித் தேர்தல் தொடங்கியது. கிளை, மண்டல தலைவர் தேர்தல் முடிந்து மாவட்டத் தலைவர் தேர்தல் நடந்துவந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்டதால் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தேர்தலை விரைந்து முடிக்குமாறு கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவரைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சித் தலைமை தொடங்கியுள்ளது. இதற்காக வரும் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் அகில இந்தியப் பொதுச் செயலாளர்கள் இருவர் கலந்துகொண்டு, யாரை மாநிலத் தலைவராக நியமிக்கலாம் என்று மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களிடம் கருத்துக் கேட்கவுள்ளனர். அதன் அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர், ஆசீர்வாத ஆச்சார்யா ஆகியோர் கடுமையாகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில், தலைவர் பதவியைப் பெறுவதற்காக சிலர் டெல்லியிலும் லாபி செய்து வருகின்றனர்.

சி.பி ராதாகிருஷ்ணன் முன்னாள் எம்.பி-யாகவும் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். இவரும் தலைவர் பதவியைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக வானதி சீனிவாசன் மிகவும் திறமையானவர் என்பது பா.ஜ.க மேலிடத்துக்கு நன்கு தெரியும். ஆனால், ஏற்கெனவே மாநிலத் தலைவராக தமிழிசை இருந்ததால் இந்தமுறைப் பெண்களுக்குக் கொடுக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அடுத்தாக நயினார் நாகேந்திரன் மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறது. ஆனால் அவர் `அ.தி.மு.க-விலிருந்து பி.ஜே.பி-க்கு வந்தவர். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து வருடங்களாவது கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். பா.ஜ.க-வுக்கு அவர் வந்து நான்கு வருடங்கள்தான் ஆகின்றன' என மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், `யார் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும்' எனத் தொண்டர்களிடம் கருத்துக் கேட்கும் வைபவத்தை நடத்த உள்ளது கமலாலயம்.