Published:Updated:

`ஒன்றியத்தின் தப்பாலே; ஒன்னியும் இல்ல இப்பாலே!'- கமலின் `விக்ரம்' பாடலுக்கு பாஜக ரியாக்‌ஷன் இதுதான்!

கமலின் `விக்ரம்’ பட பாடல் இணையத்தில் வைரலாகி சினிமா களத்தைத் தாண்டி, அரசியல் களத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

`ஒன்றியத்தின் தப்பாலே; ஒன்னியும் இல்ல இப்பாலே!'- கமலின் `விக்ரம்' பாடலுக்கு பாஜக ரியாக்‌ஷன் இதுதான்!

கமலின் `விக்ரம்’ பட பாடல் இணையத்தில் வைரலாகி சினிமா களத்தைத் தாண்டி, அரசியல் களத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

Published:Updated:

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதன்முறையாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். துரதிஷ்டவசமாக ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், ரஜினிபோல் அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக்கொண்டே இருக்காமல், இறங்கிவிட்டார் என்ற பெரிய இமேஜ் அவருக்குக் கிடைத்தது. 2021-ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் நூலிழையில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.

கமல் வானதி வாக்கு எண்ணிக்கையின்போது...
கமல் வானதி வாக்கு எண்ணிக்கையின்போது...

10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது என்பதை பீட் செய்யும் அளவுக்குக் கோவை தெற்குத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சமுக வலைதளத்தில் பேசுபொருளானது. ஏனென்றால் கமல் தனது அரசியல் என்ட்ரியை அங்கிருந்துதான் தொடங்கினார். முன்னதாக ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுத்தான், அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டார் கமல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் கட்சி தொடங்கியபோதும்கூட ட்விட்டரைவிட்டு கமல் நேரடி அரசியல் களத்துக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் கட்சியினரே கூறிவந்தனர். அதேபோல, மாநில அரசை விமர்சிக்கும் அளவில் பாதிகூட கமல் மத்திய அரசை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்மீது வைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், கமல் மத்திய அரசை மறைமுகமாக மட்டுமே சாடிவருகிறார். மத்திய அரசு விவகாரங்கள் குறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேள்வி கேட்டாலும், `அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்' எனக் கூறிவிட்டு நழுவிவிடுவார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என மத்திய, மாநில அரசுகளை ஒரே தராசில் வைத்து அவர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில்கூட கமல் பங்கேற்கவில்லை. 'விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழ்நாட்டு மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளியிருக்கின்றன' என்று கட்சியினரின் போராட்டப் படத்தை மட்டும் கமல் ட்விட்டரில் பதிவிட்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, தான் நடிக்கும் `விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் மற்றும் விளம்பரத்தில் கமல் பிஸியாக இருந்தார். இந்தப் படத்தை தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. அண்மையில், `விக்ரம்’ படத்தின் முதல் பாடல் 12-ம் தேதி வெளியானது. இதில் பம்மல் கே சம்பந்தம் படத்தின் 'மாடசாமி கந்தசாமி' பாடல் தொனியில், பாடலை எழுதிப் பாடிருந்தார் கமல்.

ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் - கமல்
Twitter

அதில், `ஒன்றியத்தின் தப்பாலே... ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கைல, தில்லாலங்கடி தில்லாலே' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில், அரசுக் கோப்புகள், மேடைகள் என எல்லாவற்றிலும், ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவந்தது. ஆனால், அதை அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. கமலின் ம.நீ.ம-வும் ஏற்கவில்லை. மாறாக மத்திய அரசு என்றே குறிப்பிட்டுவந்தது. கமலும் தனது ட்விட்டர் பதிவில் `மத்திய அரசு' என்றே குறிப்பிட்டுவந்தார்.

கமலின் `விக்ரம்’ படப் பாடல் இணையத்தில் வைரலாகி சினிமா களத்தைத் தாண்டி, அரசியல் களத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பாடல் விவகாரம் குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம்.

``கமல்ஹாசன் சிறப்பான நடிகர். ஆனால், பகுத்தறிவாளர் என்று கறுப்புச் சட்டை போடுவார். கம்யூனிசம் பேசி, சிவப்பு அணிவார். காந்தியைப் பின்பற்றுவதாகக் கூறுவார். அரசியலில் அவருக்கென தனிக் கொள்கை கிடையாது. இப்போது, மத்திய அரசை ஒன்றியம் எனக் கூறி, தி.மு.க-வின் 'பி' டீமாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார் கமல். இது போன்று மத்திய அரசை விமர்சித்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்று விளம்பரத்தால் படத்தை ஓட்ட நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" என்றார் காட்டமாக.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்
முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, ``ஒன்றியம் என்ற சொல் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒவ்வாமை இல்லை. அது தவிர்க்கப்படவேண்டிய வார்த்தையும் இல்லை. மத்திய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் ஒன்றுதான். சிலர் ஒன்றியம் என்ற சொல்லைப் பிரிவினையாகப் பார்க்கிறார்கள். ஆனால், அரசியல் சாசனம் அங்கீகரித்த ஒன்றியம் என்ற வார்த்தையைத்தான் தலைவர் பயன்படுத்தியிருக்கிறார். அரசின் செயல்பாடுகளைத் தனது படங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். அதேபோலத்தான் தற்போதும். இதில் எந்தப் பின்னணியும் இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism