அரசியல்
Published:Updated:

நானெல்லாம் டைட்டன் வாட்ச்தான் கட்டியிருக்கிறேன்... ஹெச்.ராஜா கலாய்

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.ராஜா

விபூதி, பூணூல், காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவரின் உண்மையான நிறத்தை அவர்கள்தான் மாற்றிவிட்டார்கள். அதை நாங்கள் சரிசெய்திருக்கிறோம்... அவ்வளவுதான்.

தடாலடி கருத்துகளைச் சொல்லி, எப்போதும் லைம்லைட்டிலேயே இருக்கும் ஹெச்.ராஜா, சமீபகாலமாக ஊடக வெளிச்சத்தில் அதிகம் தென்படுவதில்லை. கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்ததால், சென்னை வடபழனியிலுள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். ரொம்பவே நிதானமாகப் பேசினார் ஹெச்.ராஜா...

“ஒருகாலத்தில், தமிழ்நாடு பா.ஜ.க என்றாலே நினைவுக்கு வருவது நீங்கள்தான். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டதே?”

“யாரும் என்னை மறந்துவிடவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க-வில் நான்தான் இப்போது மோஸ்ட் சீனியர். மாவட்டப் பொறுப்புக்கு மேலே, தொடர்ந்து 33 ஆண்டுகள் பதவியில் இருக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். எனது கருத்துக்கு அகில இந்திய தலைவர்கள் யாருமே மறுப்பு தெரிவித்தது இல்லை.”

“உங்களுக்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்களெல்லாம் பெரிய பதவிக்குப் போய்விட்டார்கள். அதை நினைத்தால் கஷ்டமாக இல்லையா?”

“(பலமாகச் சிரிக்கிறார்.) அந்தப் பதவிக்கெல்லாம் சென்றால், இது போன்று சுதந்திரமாகப் பேச முடியாது. என்னை அரசியல் களத்தைவிட்டு வெளியேற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்களா?”

“சர்ச்சைக் கருத்துகள் பேசுவதில், அண்ணாமலை உங்களையே ஓவர்டேக் செய்துவிட்டார் என்கிறார்களே?”

(மீண்டும் சிரிப்பு) நானெல்லாம் டைட்டன் வாட்ச்தான் கட்டியிருக்கிறேன் (தனது வாட்சைக் காட்டுகிறார்). தனது தவறை மறைக்க வாட்ச் கதையை கிளப்பிவிட்டார் செந்தில் பாலாஜி. அண்ணாமலைக்கு என் மகள் வயது இருக்கும். தந்தைக்குப் பிறகு மகன் பொறுப்புக்கு வருவது சந்தோஷம்தான். அதேநேரத்தில் என்னை யாராலும் ஓவர்டேக் செய்ய முடியாது. ஐ ஹேவ் மை ஓன் பாத்.”

நானெல்லாம் டைட்டன் வாட்ச்தான் கட்டியிருக்கிறேன்... ஹெச்.ராஜா கலாய்

“பா.ஜ.க என்றாலே ஆபாசம்தான் என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து ஆடியோ, வீடியோக்கள் வெளியாகின்றனவே?”

“தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரின் வீடியோ குறித்து யாருமே பேசவில்லையே, ஏன்... ஏனென்றால், பாலியல் தொழில் செய்யும் பெண் சாலை ஓரத்தில் அந்தத் தொழிலைச் செய்தாலும் அதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இரவு 10:30 மணி ஆகியும் கணவனைக் காணவில்லையே என்று ஜன்னலைத் திறந்து பார்க்கும் பத்தினியை, இந்த ஊர் தப்பாகத்தான் பேசும். நாங்கள் இரண்டாவது ரகம். எனவே, பா.ஜ.க-வினர் மிக கவனமாக இருக்க வேண்டும்.”

“ஆனால், ‘தனக்கென ஒரு டீம் வைத்துக்கொண்டு இந்தச் சர்ச்சைகளை உருவாக்குவது தமிழக பா.ஜ.க தலைமைதான்’ என்பதுதானே குற்றச்சாட்டே?”

“மாநிலத் தலைவரை நம்பவில்லை என்றால், டெல்லியில் பேசலாம். அதை விட்டுவிட்டு, கட்சி குறித்து வெளியில் பேசுவது தவறு. குறிப்பாக, கட்சியைவிட்டு வெளியேறிய காயத்ரி பேசுவது சரியில்லை.”

“ `ஆளுநர் பேச்சை அப்படியே அவைக்குறிப்பில் ஏற்றாமல்விட்டதால், அரசு பல சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும்’ என்று சொன்னீர்களே... எப்படி?”

“மாநில அரசு எழுதிக் கொடுத்ததைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்பது சட்டமில்லை. மரபாக இருக்கலாம். அதற்காக அவையில் வாசித்ததைக் குறிப்பில் ஏற்றாமல் இருப்பார்களா?”

“யாரும் செய்யத் துணியாத காரியம் என்பதால்தான், ‘Stalin is more dangerous than Karunanidhi’ என்று தொடர்ந்து சொல்லிவருகிறீர்களா?”

“ரோட்டில் செல்லும் பெரியவர்மீது சின்னப் பையன்களை விட்டு கல் எறிய வைப்பதுபோல, கூட்டணிக் கட்சியினரை வைத்து ஆளுநருக்கு எதிராகச் செயல்படவைக்கிறார் ஸ்டாலின். அந்த மோசமான குணத்தைக் குறிப்பிடத்தான் நான் அப்படிச் சொன்னேன்.”

“தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சையை ஆளுநர் கிளப்பிவிட்டதால்தானே சட்டமன்றத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது?”

“அதற்கு ஆளுநர் விளக்கம் கொடுத்துவிட்டார். (தனது போனிலிருக்கும் போட்டோவைக் காட்டி...) `தமிழ்நாடு’ என்று 1966-ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்.”

“திருவள்ளுவருக்குக் காவி பூசி, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்குவது எந்த வகையில் நியாயம்?”

“விபூதி, பூணூல், காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவரின் உண்மையான நிறத்தை அவர்கள்தான் மாற்றிவிட்டார்கள். அதை நாங்கள் சரிசெய்திருக்கிறோம்... அவ்வளவுதான். எஜமான் என்ன சொன்னாரோ, அதன்படிதான் வேணுகோபால் சர்மாவும் வரைந்திருக்கிறார். புத்த மதத்துக்கு மாறிய அம்பேத்கரின் அடையாளமே காவிதான். அதைத் தீயசக்தி திருமாவளவன் போன்றவர்கள் நீல நிறம் கொடுத்து திரித்துவிட்டார்கள்.”

“பல ஆண்டுகளாக எதிர்த்துவந்த சேது சமுத்திர திட்டத்துக்கு பா.ஜ.க திடீரென ஆதரவு தெரிவித்திருப்பது ஏன்?”

“உள்நாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றாமல் சென்னையை அடைவதற்காக சேது சமுத்திர திட்டம் வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்தே பேசப்படுகிறது. ராமர் பாலமோ அல்லது மணல்திட்டோ... அது இருந்ததால்தான் சுனாமியிலிருந்து ராமேஸ்வரம் தப்பியது. செலவு, நேரத்தைக் குறைக்கும் வகையில் ராமர் பாலத்துக்குச் சேதம் இல்லாமல் மீதமுள்ள ஆறு வழித்தடங்களில் திட்டத்தைச் செயல்படுத்தினால் எந்த ஆட்சேபமும் இல்லை.”

“அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னை... ஈரோடு இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு பற்றி...”

“யார் அ.தி.மு.க என்பது குறித்து வழக்கு இருப்பதால், அது குறித்துப் பேசுவது சரியாக இருக்காது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க கண்ணும் கருத்துமாக இருக்கிறது.”