Published:Updated:

உதயநிதியை வாழ்த்தினால்தான் அமைச்சர்களுக்கு நிம்மதி! - வாளைச் சுழற்றும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

டாப் கியரில் வேகமெடுத்த முதல்வர் ‘ஸ்ட்ரக்’ ஆகி நிற்கிறார்! - நாங்கள் ஆளுநரின் பிரதிநிதிகள் இல்லை!

உதயநிதியை வாழ்த்தினால்தான் அமைச்சர்களுக்கு நிம்மதி! - வாளைச் சுழற்றும் வானதி சீனிவாசன்

டாப் கியரில் வேகமெடுத்த முதல்வர் ‘ஸ்ட்ரக்’ ஆகி நிற்கிறார்! - நாங்கள் ஆளுநரின் பிரதிநிதிகள் இல்லை!

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

தமிழக சட்டமன்றத்தில் காத்திரமான கருத்துகளை முன்வைத்துவருபவர் பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன். இவர் பேச ஆரம்பித்தால் மூத்த அமைச்சர்கள் உட்பட ஆளும் தரப்பினர் கூர்ந்து கவனிக்கவும் செய்வார்கள்... அடிக்கடி குறுக்கிடவும் செய்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் வேளையில், சட்டமன்றச் செயல்பாடுகள், சட்டமன்ற அனுபவங்கள் தொடர்பான பல கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

“தி.மு.க-வுடன் அரசியல் களத்தில் மோதிக்கொண்டிருந்த நீங்கள், கடந்த ஓராண்டாக சட்டமன்றத்துக்குள் மோதிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வைக்கும் கருத்துகளை ஆளும் தரப்பினர் எப்படி அணுகுகிறார்கள்?”

“எதிர்க்கட்சி உறுப்பினராக இருப்பதால், தங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்கிற எண்ணம் என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தொகுதி மக்களின் பிரச்னைகளை முன்வைத்து, எங்கள் கட்சியின் நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்து அவையில் கருத்துகளை எடுத்துவைக்கிறேன். ஆளும் தரப்பினர் என் கருத்துகளை கவனமாகக் கேட்கிறார்கள். சில நேரங்களில் ‘நன்றாகப் பேசினீர்கள்’ என்று பாராட்டவும் செய்கிறார்கள். கலைஞர் கருணாநிதி குறித்து நான் பேசியபோது, ‘நன்றாகப் பேசினீர்கள்’ என்று மூத்த அமைச்சர்கள் சைகையால் தெரிவித்தார்கள். அதேசமயம், என் கருத்துகளுக்கு எதிராக கோஷமிடவும் செய்வார்கள். என் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதும் உண்டு.”

உதயநிதியை வாழ்த்தினால்தான் அமைச்சர்களுக்கு நிம்மதி! - வாளைச் சுழற்றும் வானதி சீனிவாசன்

“ஓராண்டுக்கால தி.மு.க ஆட்சியில் சட்டமன்றச் செயல்பாடுகள் எப்படியிருந்தன?”

“முதல்வரைப் புகழ்வதற்கே அவையின் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடிய நிலை இருந்தது. அந்த நிலையில், தன்னை அதிகமாகப் புகழக் கூடாது என்று முதல்வர் கட்டுப்படுத்தினார். வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும், முதல்வர் புகழுரை இல்லாமல் இல்லை. மூத்த அமைச்சர்களே அந்தத் தவற்றை செய்கிறார்கள். முதல்வரைப் புகழ்ந்துவிட்டு, அப்படியே உதயநிதியையும் புகழ்ந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. மூத்த அமைச்சர்களே உதயநிதியை வாழ்த்திவிட்டுத்தான் உரையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.”

“ஓராண்டுக்காலத்தில் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?”

“தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், கொரோனா இரண்டாவது அலையைக் கையாள்வதில் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதற்கு மத்திய பா.ஜ.க அரசும் உறுதுணையாக இருந்தது. நேர்மையான ஆட்சியை, அனைவருக்குமான ஆட்சியைக் கொடுக்கப்போவதாக ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், கட்டப்பட்ட நிலையில் இருந்த அமைச்சர்களின் கைகள், கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவிழ்த்துவிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ‘கமிஷன் ரேட்’ அனைத்தையும் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, பல மடங்கு உயர்த்திவிட்டார்கள். இதில், அமைச்சர்களின் பிள்ளைகளுடைய ஆதிக்கம் படுமோசமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கமிஷன், கலெக்‌ஷன். இதை முதல்வரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் ‘டாப் கியரில்’ வேகமெடுத்த முதல்வர், இப்போது எங்கேயோ ‘ஸ்ட்ரக்’ ஆகி நிற்கிறார்.”

“அயோத்தியா மண்டபம் விவகாரத்தை நீங்கள் எழுப்பியபோது, ‘ஏழை, எளிய மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள். மாறாக, அரசியலைப் புகுத்தி உங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். இது என் வேண்டுகோள்’ என்று முதல்வர் உங்களுக்கு அட்வைஸ் செய்தாரே... அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?”

“அதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டேன். ஆனால், மக்கள் பிரச்னைக்காகப் பேசுவதற்கான வாய்ப்பைக் கொடுங்கள். முதல்வர் அப்படிச் சொன்ன மறுநாளே, மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதத்துக்கு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்தேன். இதுவரை அதை எடுத்துக்கொள்ளவில்லை. என் தொகுதி மக்களின் எத்தனையோ பிரச்னைகளுக்காக நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அதிலெல்லாம் அவர்களுக்கு சுவாரஸ்யம் இல்லை.”

“சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார். மாநில நலன் சார்ந்த அந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நிற்காமல், அவையிலிருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்கிறீர்களே?”

“நாங்கள் வெளிநடப்பு செய்வது ஆளுநருக்கு ஆதரவாக அல்ல. அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் நாங்கள் அனைவரும் சட்டமன்றத்தில் செயல்பட்டுவருகிறோம். ஓர் அங்கம், இன்னோர் அங்கத்தைத் தாண்டிப் போக முடியாது. அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆளுநரின் பிரதிநிதிகளாக நாங்கள் அங்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தக் கூறும் பாதித்துவிடக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.’’

“சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவில் குறைகள் இருப்பதாகக் கருதினால், அதை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும்போது, அதை அவர் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இரண்டாவது முறை அனுப்பப்பட்டபோதும் அதை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்தது தவறுதானே?

“அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு இருக்கிற அதிகாரமும், சட்டமன்றத்தின் அதிகாரமும் வரையறுக்கப்பட்ட அதிகாரம். இதில் ஏதேனும் முரண்கள் இருந்தால், அதைத் தீர்த்துவைப்பது நீதித்துறையின் வேலை. இரண்டாவது முறை அனுப்பியும் ஆளுநர் மத்திய அரசுக்கு அதை அனுப்பவில்லையென்றால், நீங்கள் போகவேண்டிய இடம் நீதிமன்றம். ஏன் நீதிமன்றத்துக்குப் போகவில்லை?”

“நீதிமன்றத்துக்கு அரசு போவது இருக்கட்டும். நீங்கள் ஏன் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டிக்கவில்லை?”

“ஆளுநரை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு உண்டான அதிகாரத்தில் அவர் செயல்படுகிறார். மாநில அரசை நடத்தும் உங்களுக்கு அதில் பிரச்னை என்றால், நீங்கள் செல்லவேண்டிய இடம் நீதிமன்றம், அரசியல் கூட்டங்கள் அல்ல.”

உதயநிதியை வாழ்த்தினால்தான் அமைச்சர்களுக்கு நிம்மதி! - வாளைச் சுழற்றும் வானதி சீனிவாசன்

“தனது தலைமையிலான அரசை, ‘திராவிட மாடல்’ அரசு என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துகிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“திராவிடம் என்பது தென்னிந்தியாவைக் குறிக்கிறது என்பதை தி.மு.க-வினரே ஒப்புக்கொள்கிறார்கள். நாங்களும், ‘திராவிடம்’ என்பதை ஒரு நிலப்பரப்பாகவே பார்க்கிறோம். இந்திய தேசியத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கம், திராவிடம். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பலருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டபோது, ‘இல்லை, இல்லை. அதற்கும் முன்பாக நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம். எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் பெருமையில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’ என்று சொன்னார் நிதியமைச்சர். சரி, அந்தப் பெருமையை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். திராவிட மாடல் என்று சொன்னால், அதில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு, அ.தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கிறது. அதனால், இதை ‘தி.மு.க மாடல்’ என்று அவர்கள் சொல்லட்டும்.”

“ `தமிழகத்தில் இரு திராவிட இயக்கங்கள்தான் மாறி மாறி ஆட்சியமைக்கும். இந்த திராவிட மண்ணில் வேறு கட்சிகள் நுழைய முடியாது’ என்கிற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்தக் கருத்தே தவறானது. தமிழகத்தில் பா.ஜ.க வராது… தாமரை மலராது என்று பலர் கிண்டல் செய்தார்கள்; எத்தனையோ மீம்ஸ் வந்தன. நோட்டாவுக்குக் கீழே இருப்பதாகப் பலர் அவமானப்படுத்தினார்கள். ஆனால், இன்றைக்கு நான்கு பேர் சட்டமன்றத்துக்குள் போயிருக்கிறோம். தமிழகத்தை யார் ஆள்வார்கள் என்பதைக் காலம் முடிவுசெய்யும். தேசிய சிந்தனைகொண்ட திராவிடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் நாள் நிச்சயம் வரும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism