Published:Updated:

அநாகரிகமாக பேசுகிறவர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே பேசுகிறார் அண்ணாமலை

நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணன் திருப்பதி

- நாராயணன் திருப்பதி சப்போர்ட்

ஜனவரி 12-ம் தேதி, புதிய மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்காகத் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தமிழக அரசியலில் வார்த்தைப்போர் அனலடித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்...

“ ‘கோ பேக்’ என்றவர்கள் ‘ப்ளீஸ் கம்’ என்கிறார்கள் எனத் தமிழக அரசை நீங்கள் விமர்சித்திருப்பது கிண்டலா அல்லது அதிகார ஆணவமா?’’

“அரசியல் யதார்த்தத்தைக் கூறினேன். கடந்த காலத்தில், பிரதமர் தமிழகம் வந்திருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘கோ பேக் மோடி’ என்று சொன்னது, எவ்வளவு அநாகரிகமானது என்பதை இப்போது தி.மு.க அரசு உணர்ந்திருக்கும். அதனால்தான் இன்றைக்குத் தமிழக அரசே, பிரதமரை வரவழைக்கிறது. இதைத்தான் ‘கோ பேக்’ என்றவர்கள் ‘ப்ளீஸ் கம்’ என்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தேன்.’’

அநாகரிகமாக பேசுகிறவர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே பேசுகிறார் அண்ணாமலை

“ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர், ‘தை முதல் நாள்’ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பாரா?’’

“சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. தை முதல் நாள் என்பது திருவள்ளுவர் தினம்தான். இந்த நாளை தமிழ்ப் புத்தாண்டாக ‘தமிழக அரசு அறிவித்திருப்பது தேவையற்ற, கலாசாரக் குழப்பத்தை ஏற்படுத்தும் தவறான செயல்’ என்று நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோம். ஏனெனில், இது அரசின் திட்டமல்ல. தி.மு.க என்ற ஒரு கட்சியின் உள்நோக்கத்தோடுகூடிய செயல்பாடு!’’

“அப்படியென்றால், பிரதமர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல மாட்டாரா?’’

“இல்லை... அனைத்துப் புத்தாண்டுகளுக்கும் பிரதமர் வாழ்த்து சொல்வார்தான். ஆனால், பிடிவாதமாக, தேவையற்ற முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இது மக்களிடையே குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். எனவே, பிரதமர் வாழ்த்து சொல்ல மாட்டார் என்றுதான் நான் உறுதியாகக் கூறுகிறேன். அப்படி வாழ்த்து சொல்லவேண்டிய அவசியமும் பிரதமருக்கு இல்லை!’’

“ ‘தி.மு.க-வினர் எங்களை ஒருமையில் பேசணும், அப்போதுதான் எங்கள் கட்சி அடுத்த லெவலுக்குப் போகும்’ என்று வெளிப்படையாகவே அண்ணாமலை பேசுகிறாரே?’’

“காவல்துறையில் உயரதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. அவரை ‘அவன், இவன்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமைச்சர்களே பேசுகிறார்கள். முதல்வரும் இதைக் கண்டிக்கவில்லை. இது குற்றம் இல்லையா?’’

“அப்படியென்றால், ‘தொட்டுப் பாரு’, ‘அடிச்சுப் பல்லை கில்லை பேத்துருவேன்’ என்றெல்லாம் அண்ணாமலையும் பேசியிருக்கிறார்தானே?’’

“அநாகரிகமாகப் பேசிவருகிறவர்களுக்கு, நாகரிகமாகப் பேசினால் புரிவதில்லை என்று அண்ணாமலை நினைக்கிறாரோ என்னவோ... அதனால்தான் அவர்களுக்குப் புரியும் வகையில் அவர்களது மொழியிலேயே பேசியிருக்கிறார். எனவே, இதில் தவறேதும் கிடையாது. ‘அண்ணாமலை சாதாரண ஒரு போலீஸ்காரர்தானே’ என்று பேசுகிறார் வைகோ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ, ‘போலீஸ் ஸ்டேஷனில் கவர் வாங்கிக்கொண்டிருந்தவர் அண்ணாமலை’ என்கிறார். இதையெல்லாம் நீங்கள் ஏன் கேள்வி கேட்பது இல்லை?’’

“ ‘சைக்கிளில் செல்லவும், செல்ஃபி எடுப்பதற்குமா டி.ஜி.பி’ என்று தமிழகக் காவல்துறை உயரதிகாரியையே அண்ணாமலையும் விமர்சித்திருக்கிறாரே?’’

“தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, சமூக ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பலரும் கைதுசெய்யப்படுகிறார்கள். இப்படி கைதானவர்களெல்லாம் தேசிய சிந்தனை கொண்டவர்கள்; பா.ஜ.க ஆதரவாளர்கள். அதேசமயம், தி.மு.க ஆதரவாளர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சியினர் சமூக ஊடகம் வழியே பிரதமரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதெல்லாம் தமிழக டி.ஜி.பி-க்குத் தெரியவில்லையென்றால், நிர்வாகத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றுதான் தெரிகிறது. இதைத்தான் அண்ணாமலையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.’’

அநாகரிகமாக பேசுகிறவர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே பேசுகிறார் அண்ணாமலை

“பிரதமர் நரேந்திர மோடியை, ‘இன்டர்நேஷனல் புரோக்கர்’ என்று சீமான் இப்போதும் விமர்சிக்கிறாரே... ஏன் பா.ஜ.க எதிர்க்கவில்லை?’’

“சீமான் பேசுவதையெல்லாம் நாம் பொருட்படுத்த ஆரம்பித்தால், அப்புறம் எல்லோருமே பேச ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, சீமான் பேசுவதையெல்லாம் புறக்கணித்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான். அதேசமயம், பிரதமர் குறித்துத் தரம் தாழ்ந்த முறையில் யார் விமர்சனம் செய்தாலும், அவர்களைக் கைதுசெய்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய முழுக் கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது. இதைத்தான் தொடர்ந்து பா.ஜ.க-வும் சொல்லிவருகிறது.’’

“ ‘டி.ஜி.பி-யை விமர்சிக்கும் அண்ணாமலையைக் கைதுசெய்ய முடியுமா...’ என சி.வி.சண்முகமும் தமிழக அரசுக்குச் சவால் விடுத்துள்ளாரே?’’

“கேள்வி கேட்டாலே கைது செய்துவிடுகிறீர்களே... உங்களால் முடிந்தால், அண்ணாமலையைக் கைதுசெய்து பாருங்களேன் என்றுதான் சி.வி.சண்முகம் பேசியிருக்கிறார். மற்றபடி டி.ஜி.பி குறித்து அவர் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. அடுத்து, தனிப்பட்ட முறையில் டி.ஜி.பி-யை ஆபாசமாகவோ, தரம் தாழ்ந்தோ அண்ணாமலையும் பேசவில்லை.’’

“வரவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க சார்பில் எத்தனை மேயர்களை எதிர்பார்க்கலாம்?’’

“இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னர்தான் கூட்டணிக் கட்சியோடு கலந்து பேசுவோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். எனவே, தமிழக மாநகராட்சிகளில் பா.ஜ.க மேயர்களை உறுதியாக எதிர்பார்க்கலாம்!’’