அரசியல்
அலசல்
Published:Updated:

நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லவில்லை! - எஸ்.ஆர்.சேகர் எஸ்கேப்

 எஸ்.ஆர்.சேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஆர்.சேகர்

தமிழ்நாட்டில், ‘எங்களையும் கூட்டணிக்கு அழையுங்கள்’ என்ற நிலையிலிருந்த நாங்கள் இன்றைக்கு, ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க-தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்கிற இடத்தை நோக்கி அதி விரைவாக வளர்ந்திருக்கிறோம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தனித்துப் போட்டியிடத் தயங்குவதோடு, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பதா, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரில் யாரை ஆதரிப்பது என்கிற உச்சகட்டக் குழப்பத்திலிருக்கிறது பா.ஜ.க! இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்றும் தொடர்கிறதா..?”

“பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி தொடர்கிறது. மற்ற கட்சிகள் பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும்!”

“அ.தி.மு.க தலைமையில் கூட்டணி என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், கூட்டணியிலிருக்கும் மற்ற கட்சிகளோ, ‘பா.ஜ.க எடுக்கும் முடிவுக்குத்தான் எங்கள் ஆதரவு’ என்கின்றனவே... நீங்கள்தான் அவர்களைக் கட்டுப்படுத்துகிறீர்களா?”

“தமிழ்நாட்டில், ‘எங்களையும் கூட்டணிக்கு அழையுங்கள்’ என்ற நிலையிலிருந்த நாங்கள் இன்றைக்கு, ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க-தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்கிற இடத்தை நோக்கி அதி விரைவாக வளர்ந்திருக்கிறோம். ஆனாலும்கூட தமிழ்நாட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க-தான் தலைமை. எனவே, எங்கள் தரப்பு வாதங்களையும் சொல்லி, மற்ற கட்சிகளின் கருத்துகளையும் பெற்று எல்லோரும் சேர்ந்துதான் ஒருமனதாக முடிவெடுப்போம். இந்த நிலையில், ‘பா.ஜ.க திணிக்கிறது, பா.ஜ.க-தான் முடிவு செய்கிறது, பா.ஜ.க-தான் கட்டுப்படுத்துகிறது’ என்றெல்லாம் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பேசிவருகிறார்கள்... அது அவர்களின் வார்த்தைகள் அவ்வளவுதான்.”

“அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்றால், ஓ.பி.எஸ் தலைமையா... இ.பி.எஸ் தலைமையா?”

“ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ‘கட்சி நன்றாக இருக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க-வின் தொண்டன் எப்படி விரும்பு கிறானோ... அதுபோல் தேசத்தின், தமிழ்நாட்டின் நலன் கருதி ஒன்றுபட்ட அ.தி.மு.க-வாக இருக்க வேண்டும் என்றுதான் பா.ஜ.க-வும் விரும்புகிறது. அவர்கள் இருவரும் இணைவார்கள் என்றே பா.ஜ.க-வும் நம்புகிறது.”

“தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்கிறீர்களே... அது உண்மையென்றால், இடைத்தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து நிற்க என்ன தயக்கம்?”

“இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஓர் ஆட்சி மாற்றத்தையோ அல்லது அரசியல் மாற்றத்தையோ முடிவுசெய்வதாக இந்த இடைத்தேர்தல் இல்லை. இதில் பா.ஜ.க நிற்பதன் மூலமாக இமாலய சாதனையை நிகழ்த்திவிடலாம் என்று நாங்கள் நம்பவில்லை. தேர்தலில் நின்று தி.மு.க-வை தோற்கடிப்பதற்கு நூறு காரணங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் தி.மு.க எப்போதும் இடைத்தேர்தல்களில், சகலவிதமான அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்து வெற்றிபெற்று வருகிறது. அதை முறியடிக்க, எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரோடு களமிறங்குகிறோம்.”

நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லவில்லை! - எஸ்.ஆர்.சேகர் எஸ்கேப்

“‘தமிழ்நாட்டில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி’ என்றெல்லாம் பேசிவிட்டு, இப்போது பா.ஜ.க தனித்து நிற்க முடியாது என்கிறீர்களே..?”

“அப்படியெல்லாம் இல்லை... அண்ணா மலையோ அல்லது கட்சியின் பெரிய தலைவர்களோ ‘நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லவில்லை. எதிர் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் என்பதைத்தான் எடுத்துச் சொல்கிறோம். அடுத்ததாக, பா.ஜ.க கட்டுப்பாடான கட்சி. எனவே, கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம். அதனால் எங்கள் முடிவை ஆலோசித்து முன்வைக்கிறோம்.’’

‘‘ `தமிழ்நாட்டில், உண்மையான எதிர்க்கட்சி பா.ஜ.க-தான்’ என்று அண்ணாமலையே கூறியிருக்கிறாரே..?’’

‘‘அப்படியெல்லாம் அண்ணாமலை சொல்லவில்லை. இன்று சட்டமன்றத்துக்குள் எதிர்க்கட்சிக்கான இடத்தில் பா.ஜ.க-வின் நான்கு உறுப்பினர்களை அமரவைத்திருப்பது மக்கள்தான். அவர்களது நம்பிக்கைக்குப் பொருத்தமாக, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தருவதோடு, கருத்துபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘எதிர்க்கட்சி பா.ஜ.க-தான்’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அ.தி.மு.க-வை சிறுமைப்படுத்தி, எங்களுக்குள் இருக்கும் உறவை முறிப்பதற்கு எதிர்க்கட்சிகள்தான் சிண்டு முடிகிறார்கள்.”

நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லவில்லை! - எஸ்.ஆர்.சேகர் எஸ்கேப்

“ஆனால், பா.ஜ.க தலைவர்களேகூட ‘இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்துப்போட்டியிட வேண்டும்’ என்றுதானே வலியுறுத்திவருகிறார்கள்?”

“தமிழ்நாட்டில், பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக அப்படியெல்லாம் பேசினோம். தொண்டர்களுக்கு ஊக்கமளித்து கட்சியை வளர்ப்பதற்காக அந்த மாதிரி பேசுவது இயல்பானதுதானே...”

“ ‘அண்ணாமலையின் யாத்திரை பா.ஜ.க., மத்திய அரசுக்கு இறுதியாத்திரையாக அமையப்போகிறது’ என்கிறாரே கே.பாலகிருஷ்ணன்?”

“அண்ணாமலையின் பாதயாத்திரை என்பது ஆதிக்க வெறிபிடித்த ஊழல் தி.மு.க ஆட்சிக்குத்தான் இறுதியாத்திரையாக இருக்கப் போகிறது. இந்த யதார்த்தம் புரியாமல், எதுகை மோனையாகச் சொல்லியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.”

“மோடி கபடி போட்டி நடத்தியதில் பெரும் மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோதும்கூட, கட்சியின் பொருளாளரான நீங்கள் வாய் திறக்கவேயில்லையே?”

‘‘ ‘நிகழ்ச்சி நடத்தப்போகிறோம்... அதற்குப் பணம் வசூலிக்க அனுமதி தர வேண்டும்’ என்று கட்சியிலுள்ள சிலர் கேட்டனர். ஆனால், ‘பா.ஜ.க-வில் ரசீது அடிப்பது பழக்கமில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால், மாநிலத் தலைமையிலிருந்துதான் ரசீது புத்தகம் தருவோம்’ என்றெல்லாம் சொல்லி, திருப்பியனுப்பிவிட்டோம். எனவே, தவறான முறையில் வசூல் செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எதிர்க்கட்சியினர்தான் இப்படியெல்லாம் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்!’’