Published:Updated:

“பாபர் மசூதி இடிப்பு, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஒரு சம்பவம்!”

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

விறுவிறு வானதி சீனிவாசன்

2021 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடவிருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் இப்போதே களப்பணியை ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில், கோவை தெற்குத் தொகுதியில், ‘தாமரையின் துளசிப் பயணம்’ திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன். தற்போதைய பரபர அரசியல் சூழல்கள் குறித்து அவரிடம் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“புதிய வேளாண் சட்டம் பற்றிப் பேசும்போது, ‘மத்திய அரசு, சட்டம் இயற்றுவதற்கு மக்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியிருக்கிறீர்களே..?’’

“நமக்கான சட்டத்தை இயற்றுவதற்காகத்தான் நமது பிரதிநிதிகளாகத் தலைவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கிறோம். ஒவ்வொரு சட்டத்தைக் கொண்டுவரும்போதும், அது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு, விவாதம் நடத்தி, அதன் பின்னரே சட்டம் இயற்ற வேண்டுமென்றால், அது ‘உன்னுடைய மருந்தை நீயே முடிவு செய்துகொள்’ என்று ஒரு நோயாளியிடம் சொல்வதாகவே அமையும்! அந்த அர்த்தத்தில்தான் பேசினேன்.’’

“விவசாயிகளைக் காக்க, ‘குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்தி சட்டம் இயற்றுவோம்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது நேர்மாறாகச் சட்டம் இயற்றியிருக்கிறீர்களே?’’

“கடந்தகால காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டுவந்த ஆதார விலையைவிடவும் பா.ஜ.க ஆட்சியில் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான சந்தையைக் கொஞ்சம் பெரிதுபடுத்திக் கொடுத்திருக்கிறோம். இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிந்து, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதிசெய்திருக்கிறோம்.’’

“பதுக்கலைத் தடுப்பதற்குத்தான் ‘அத்தியாவசியப் பொருள் சட்டம்.’ ஆனால், புதிய சட்டமோ பதுக்கலை ஊக்கப்படுத்துகிறதே... இது விவசாயிகளுக்கு எப்படி நன்மை பயக்கும்?’’

“சரிதான்... ஆனால், விவசாயிகளோடு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு, விளைபொருள்களைச் சேமிப்புக் கிடங்குகளில் சேமித்துவைப்பதால், விளைபொருள்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். இதுதவிர, விவசாயிகளே ஒன்றிணைந்து ‘குளிர் பதனக்கிடங்கு’ உருவாக்கி, பொருள்களைச் சேமிப்பதற்காக மானிய வசதிகளைச் செய்துதரவிருக்கிறது மத்திய அரசு.”

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

“இவ்வளவு நல்ல சட்டமென்றால்... உங்கள் கூட்டணியிலுள்ள அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் கடுமையாக அதை விமர்சித்தாரே?’’

“உண்மைதான். ஆனால், ‘இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்று முதல்வரே அறிவித்துவிட்டார். அதன் பிறகும் இது குறித்து நான் விவாதிப்பது நாகரிகம் இல்லை.’’

“ `முதல்வர் என்னிடம் விளக்கம் கேட்க மாட்டார்’ என்று எஸ்.ஆர்.பி பேட்டி கொடுத்திருக்கிறாரே..?’’

“இருக்கட்டும்... முதல்வர் சொன்ன பதிலை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.’’

“ `இந்தி தெரியாது போடா - என்று டி-ஷர்ட் போடுவதாலேயே தமிழ் வளர்ந்துவிடாது’ என்கிறீர்கள். ‘கைதட்டினாலும், டார்ச் அடித்தாலும்கூடத்தான் கொரோனா ஓடிவிடாது’ என்று நெட்டிசன்கள் கேட்கிறார்களே..?’’

(வாய்விட்டுச் சிரிக்கிறார்) “கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டுவரும் முன்களப் பணியாளர்களை உற்சாகப்படுத்துவதற்கான அடையாளமாக நாங்கள் கைதட்டினோம்; மணி அடித்தோம். ஆனால், இத்தனை ஆண்டுக்காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க அப்போதெல்லாம் தமிழை வளர்க்காமல், இப்போது தமிழைவைத்து அரசியல் செய்ய முயல்வதைத்தான் நான் குறிப்பிட்டேன்.’’

“தமிழைவைத்து தி.மு.க அரசியல் செய்கிறது என்றால், ‘இந்தித் திணிப்பு; சம்ஸ்கிருதம் வளர்ப்பு’ எனச் செயல்படும் பா.ஜ.க-வின் செயல்பாட்டை எப்படிப் பார்ப்பது?’’

“இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்றோ, சம்ஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும் என்றோ பா.ஜ.க முயற்சி செய்யவில்லை. உங்கள் கற்பனைக் கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.’’

“12,000 வருட இந்தியப் பண்பாட்டை ஆராய சம்ஸ்கிருத வல்லுநர்களை மட்டுமே நியமித்திருப்பது ஏன்?’’

“பண்பாட்டை ஆராயும் குழுவில், தமிழ் அறிஞர்களையும் சேர்க்கச்சொல்லி நமது முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். நாங்களும் வலியுறுத்துகிறோம். அந்தக் குழுவில் இன்னும் நபர்கள் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுசரி... ‘சம்ஸ்கிருதமும் இந்த நாட்டின் மொழிதானே... ஏன் அதை மட்டும் வெறுக்கிறீர்கள்?’’

“ `பாபர் மசூதி இடிப்பு விவகாரம், திட்டமிடப்பட்ட சம்பவம் அல்ல’ என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகச் சமூக ஊடகத்தில் விவாதங்கள் எழுந்திருக்கின்றனவே?’’

“2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோது, ‘உண்மை கிடைத்தது’ என்றெல்லாம் வரவேற்றவர்கள், இந்தத் தீர்ப்பை மட்டும் ஏன் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும்?’’

“பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்டது அல்ல என்றால், நாடு முழுக்க நடத்தப்பட்ட ரத யாத்திரையும் கரசேவையும் எதை நோக்கியவை என்ற சாமானியரின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?’’

“ரத யாத்திரை மற்றும் விசுவ ஹிந்து பரிஷத்தின் ராமஜென்ம பூமிக்கு பா.ஜ.க ஆதரவு கொடுத்தது உண்மைதான். அந்த ஆதரவு என்பது, ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற ஆதரவுதான். மற்றபடி ‘மசூதியை இடிக்க வேண்டும்’ என்று யாருமே, எங்கேயுமே சொல்லவும் இல்லை; அதற்காகத் திட்டமிட்டதும் இல்லை. எனவே, ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதைத் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியும்!’’

“தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவர்கூட தேசிய அளவிலான கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்படவில்லை. இது தமிழக பா.ஜ.க-வினர் மீதான நம்பிக்கையின்மையைத்தானே காட்டுகிறது?’’

“ஜனா கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை என தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அகில இந்தியப் பொறுப்புகளில் அமரவைத்திருப்பதும் இதே அகில இந்திய பா.ஜ.க-தான். இன்றைய சூழலில், தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு வேறு ஏதேனும் பொறுப்புகளைக் கொடுக்கும் திட்டமிடலோடு அகில இந்தியத் தலைமை நினைத்திருக்கலாம்... அவ்வளவுதான்!’’