தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவிருக்கிறது என்பதுதான் கடந்த ஒருவாரகாலமாக தமிழ்நாட்டு அரசியல் களத்தைச் சுற்றிவந்த புயல். நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ வெளியானது முதல் அவரது பதவி பறிக்கப்பட்டு வேறொருவருக்குக் கொடுக்கப்படும் எனவும், செயல்பாட்டில் திருப்தியில்லாததால் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், நாசர் உள்ளிட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் செய்திகள் வெளியாகின. அமைச்சரவையில் புதிதாக டி.ஆர்.பி.ராஜா, தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் சேர்க்கப்படுவார்கள் என்ற செய்தியும் சுற்றிச் சுழன்று அடித்தது.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்து, சீனியர் அமைச்சர்களுடன் முதல்வர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றத்துக்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுத்துறைச் செயலாளர் ஆகிய இருவரும் கிண்டியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழ் கொடுக்கவிருப்பதாகவும், அதோடு அமைச்சரவை மாற்றம் குறித்த பரிந்துரையையும் ஆளுநரிடம் அவர்கள் முன்வைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பரிந்துரைப் பட்டியலில் மூன்று அமைச்சர்களின் இலாகா மாற்றம், இரண்டு புதிய அமைச்சர்களை உள்ளே சேர்ப்பது, இரண்டு அமைச்சர்களை நீக்குவது உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்கிறது ராஜ் பவன் வட்டாரம்!

தலைமைச் செயலாளருக்கு, அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இருப்பதால், ஆளுநரை அழைக்க அவர் செல்லவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!