Published:Updated:

16,382 கையெழுத்து; 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை!-முதல்வராக 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வருக்குத் தமிழக அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. `பெரிய ஆளுமை இல்லை ஆட்சியில் அனுபவம் இல்லை’ என ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அசால்ட்டாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் எடப்பாடியார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த சமயம் சசிகலாவுக்குச் சிறைக்கதவுகள் தயாராகிக்கொண்டிருந்த நேரம் திடீரென ஓர் அறிவிப்பு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத பழனிசாமி ஆட்சி அரியணையில் அமர்ந்தார். தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த போது அணிகள்தான் இணைந்துவிட்டது மனங்கள் இணையவில்லை. இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என சவால்விட்டவர்களை சைலன்டாக டீல் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழகம் முதலாவதாக வந்து சாதனை படைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது மூன்றாண்டு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில், தமிழக மக்களின் நீண்ட காலப் பிரச்னையான காவிரியில் தமிழக அரசின் தொடர் முயற்சியால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளில் 250 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 202 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மழலையர் கல்வியை மேம்படுத்த 2,381 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. - யூ.கே.ஜி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை, தமிழகத்தில் 3, 58, 654 இளைஞர்களுக்குக் குறுகியகால திறன் பயிற்சி அளிக்கப்பட்டு 1,34, 992 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு. கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் துறைவாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 16,382 கையெழுத்திட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளது. 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு