Published:Updated:

`கப்பலோட்டிய தமிழன் விருது முதல் திரைப்படம் வரை' வ.உ.சி-யின் பெயரில் வெளியான 14 அறிவிப்புகள்!

முதல்வரின் புதிய அறிவிப்பு
முதல்வரின் புதிய அறிவிப்பு

சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய இன்றைய சட்டசபைக் கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர், வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர்
சட்டப்பேரவையில் முதல்வர்

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், `` வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாள் வருகிறது. அதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். நான் முதல்வராகப் பொறுப்பேற்று எனது முதல் சுதந்திர தின உரையில் `வ.உ.சி-யின் பிறந்தநாள்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்' எனக் குறிப்பிட்டிருக்கிறேன். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாள் வருவதால், 14 அறிவிப்புகளை அறிவிக்கவிருக்கிறேன். காந்தி மண்டபத்தில் வ.உ.சி -க்கு மார்பளவு சிலை வைக்கப்படும். தூத்துக்குடி மாநகரில் முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை இனி `வ.உ.சிதம்பரனார் சாலை’ என்று பெயர் மாற்றப்படும். தனது வாழ்நாளில் முக்கிய நாள்களைக் கோவைச் சிறையிலே கழித்த வ.உ.சி-க்கு முழு உருவச் சிலை கோவை, வ.உ.சி-பூங்காவில் அமைக்கப்படும்" என்றார்.

மேலும், ``செய்தித்துறையின் பராமரிப்பிலுள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சி வாழ்ந்த நினைவு இல்லமும், நெல்லையிலுள்ள வ.உ.சி-யின் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அந்த இடங்களில் அவரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். வ.உ.சி-யின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் திரைப்படத்தை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதத்தில் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றி வெளியிடப்படும். நெல்லை மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்விருக்கை அமைக்கப்படும். வ.உ.சி எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நெல்லையில் வ.உ.சி-யும் மகாகவி பாரதியாரும் படித்த பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள், கலையரங்கங்கள், நினைவு நுழைவாயில்கள் 1.5 கோடி செலவில் அமைக்கப்படும்" என்றார்.

`அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்'- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
வ.உ.சி
வ.உ.சி

தொடர்ந்து பேசியவர், ``கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் சார்ந்த துறைகளில், சிறப்பாகப் பங்காற்றிவரும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும், `கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது' வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். வ.உ.சி மறைந்த நவம்பர் 18-ம் தேதி தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வரை தூத்துக்குடி, திருநெல்வேலியில் திறக்கப்படும் அரசுக் கட்டடங்களுக்குக் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரின் பெயர் சூட்டப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத்துறை சார்பில் பேருந்து ஒன்றில் வ.உ.சி வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சி குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும். தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக வ.உ.சி எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் முழுவதும் இணையத்தில் மின்மயப்படுத்தி வெளியிடப்படும்" போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு