Published:Updated:

@CMOTamilNadu அக்கௌன்டை 2 மாதங்களுக்குப் பிறகு மீட்டெடுத்த தமிழக அரசு... என்ன பிரச்னை?!

CMO tamilnadu
CMO tamilnadu ( twitter )

தமிழக முதல்வரின் கணக்கு என்பது அரசாங்க ரீதியிலான கணக்கு. அதைத் தனிக்கணக்குகளாக மாற்றுவதென்பது அறம் கிடையாது.

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதத்துக்குப் பின்னர், ஒரு வழியாக தமிழக முதல்வரின் சமூக வலைதள பக்கங்கள் தமிழகத்தின் முதல்வருக்குக் கிடைத்திருக்கின்றன. குழப்பாமல் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி நிர்வகித்து வந்த சமூக வலைதள அக்கௌண்ட்டுகள் ஸ்டாலின் வசம் வந்திருக்கின்றன.

பொதுவாக இவையெல்லாம் மிக எளிதாக நடக்கும் பரிவர்த்தனைகள். உலகம் முழுக்கவே எளிதாக நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட சிக்கலாக்கி வைத்திருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் ஐடி குழு. டிரம்ப் ~ பைடன், பிரனாப் முகர்ஜி ~ ராம்நாத் கோவிந்த் ஐடி மாற்றங்களில்கூட இவ்வளவு சிக்கல்கள் எழவில்லை.

 CMO Tamil Nadu
CMO Tamil Nadu
Facebook

அரசு ரீதியிலான அக்கௌன்ட்டுகளை அரசு சார்ந்த அதிகாரிகள்தான் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் நிகழும்போது, இதுபோன்ற விஷயங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க ஆட்சியின் போது, இதைக் கையாண்டது அ.தி.மு.க ஐடி விங். சமூக வலைதளங்களின் வருகை அதிகமாகக் காணப்பட்ட சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழவில்லை. அதனால், கடந்த பத்தாண்டுகளாக இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த மே மாதம் தீர்ப்பு வெளியானதும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்த தமிழக முதல்வரின் கணக்குகளை எடப்பாடி பழனிசாமியின் கணக்குகளாக மாற்றிவிட்டனர் அ.தி.மு.க ஐடிவிங் ஊழியர்கள்.

தமிழக முதல்வரின் கணக்கு என்பது அரசாங்க ரீதியிலான கணக்கு. அதைத் தனிக்கணக்குகளாக மாற்றுவதென்பது அறம் கிடையாது. புதிய அக்கௌன்ட்டைத் துவங்கிவிடலாம் என்றால், பெரிய அளவிலான ஃபாலோயர்கள் இருக்கின்ற அக்கௌன்ட்கள் இவை. இன்னொன்று இது எடப்பாடி பழனிசாமி என்பவருக்கோ, ஸ்டாலின் என்பவருக்கோ பிரத்யேகமாக உருவான ஃபாலோயர்கள் அல்ல. தமிழக முதல்வரின் கணக்கை கட்சி சார்பு இல்லாதவர்களும் ஃபாலோ செய்வார்கள். அதனால், புது அக்கௌன்ட்டை உருவாக்கலாம் என்பது வீண் வேலை.
ஸ்டாலின்
ஸ்டாலின்

கட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும், சமூக வலைதள நிர்வாகிகளிடம் பேசி, ஒருவழியாக இரண்டு மாதம் கழித்து இதைச் சாதித்திருக்கிறார்கள். தற்போது, ட்விட்டர் ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களில் CMO Tamilnadu அக்கௌண்ட் மூலம் முதல்வரின் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் டிஸ்பிளே புகைப்படமாக தமிழக அரசின் இலச்சினையை வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு