Published:Updated:

“கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம்!”

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

தலைமைச் செயலாளர் க.சண்முகம் சிறப்புப் பேட்டி

“போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது” என்கிறார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம். ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி இது...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது?”

“சீனாவின் வூஹானில் கொரோனா பரவல் ஆரம்பித்து மற்ற நாடுகளுக்குப் பரவத் தொடங்கியபோதே, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமானநிலையங்களில் பயணிகளைப் பரிசோதிக்க ஆரம்பித்துவிட்டோம். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நடவடிக்கை களையும் ஆரம்பித்துவிட்டோம். திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களை மூடினோம். மக்கள்நலத் திட்டங்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள், மருத்துவமனை களின் அடிப்படைத் தேவைகள் என முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. காவல்துறையினர் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் முழுவீச்சில் இயங்க ஆரம்பித்தனர்.

தலைமைச் செயலாளரான என் தலைமையில் ஒரு ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைக்கப்பட்டது. இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை தமிழக முதல்வர் தினமும் ஆய்வுசெய்து, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார். இந்த நடவடிக்கைகளின் பலனாக, நோய்த்தொற்று பெருமளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரம், ஊரடங்கு சூழலில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்துவருகிறது”.

“ஆனால், இந்த நடவடிக்கைகள் தாமதமாக எடுக்கப்பட்டதாக விமர்சனம் உள்ளதே?”

“எந்தத் தாமதமும் இல்லை. இது உலகம் முழுவதும் பரவக்கூடிய ஒரு நோய் என்பதை உணர்ந்து ஆரம்பக்கட்டத்திலிருந்தே மருத்துவ மனைகளை தயார்செய்ய ஆரம்பித்துவிட்டோம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை அப்போதே பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டோம். வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்த விமானநிலையத்தில் வந்து இறங்கினாலும், அவர்களைப் பற்றிய முழு விவரங்களை எடுத்து மத்திய அரசிடம் அளித்தோம். இந்தப் பணியை முதன்முதலில் செய்த மாநிலம் தமிழ்நாடுதான். அதைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் புள்ளிவிவரங்களைத் தருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை”.

“கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில நாள்களாகக் குறைந்துவருகிறது. அதிகமான நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தாததே குறைந்த எண்ணிக்கையாகத் தெரிவதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறதே?”

“இது வெளியிலிருந்து வந்த நோய். அதனால், இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கக் கண்டுபிடிக்க எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகும். ‘கான்டாக்ட் டிரேஸிங்’ என்ற அந்தப் பணி இப்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. அதனால் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது புதிதாக வருகிற எண்ணிக்கைகூட, கான்டாக்ட் டிரேஸிங் மூலம் கண்டறியப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் இருந்து வரக்கூடியதுதான். இவை போக, வெளியிலிருந்து ‘ஆக்ஸிடென்டல் பரவல்’ என்ற அடிப்படையில் ஒருசிலர் தொற்றுடன் வருகிறார்கள். ஆனாலும், இப்போது நிலைமை சீரடைந்துவருகிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ரேப்பிட் டெஸ்ட் கிட் எனப்படும் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் உள்ளதே?”

“மத்திய அரசு ஆர்டர் கொடுப்பதற்கு முன்பாகவே ரேப்பிட் டெஸ்ட் கருவிகளுக்கு நாம் ஆர்டர் கொடுத்துவிட்டோம். அதனால், ஆர்டர் செய்ததில் 24,000 கருவிகளை நமக்குக் கொடுத்துவிட்டார்கள். மீதியை மத்திய அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கருவிகளில் நமக்குரிய பங்கைக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். அதில் ஒரு பங்கு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. பரிசோதனைகளை ஆரம்பித்துவிட்டோம்”.

“கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம்!”

“தமிழக அரசு கேட்ட நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை. இந்த நெருக்கடியான நிலையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

“இது கடுமையான சோதனைக்காலம்தான். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கும் வகையில் வரம்பைத் தளர்த்துமாறு மத்திய அரசிடம் முதல்வர் கேட்டுள்ளார். தேவையின் அடிப்படையில் கூடுதலாக கடன் வாங்கிக்கொள்ள மத்திய அரசு வரம்பை உயர்த்திக்கொடுத்துள்ளது. மேலும், சுகாதாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவை போக, மத்திய அரசிடம் நிதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதே நேரம், ‘மத்திய அரசின் நிதிக்காகக் காத்திருக்காமல், நம்மிடம் இருக்கும் நிதியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்வோம்’ என்ற நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்”.

“தமிழக அரசின் நிதி நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?”

“மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது. மாநில அரசைப் பொறுத்தவரை, ஒரு மாதத்துக்கு 8,000 கோடி ரூபாய் செலவாகிறது என்றால், 10,000 கோடி ரூபாய்க்குமேல் நிதி இருப்பு வைத்திருப்போம். திடீரென 5,000 கோடி ரூபாய் அல்லது 6,000 கோடி ரூபாய் வருவாய் குறைகிறது என்றால், அந்த நிதி இருப்பிலிருந்து எடுப்போம். அப்படித்தான் இப்போது சமாளித்துக்கொண்டிருக்கிறோம்.

மே மாதம் வரை இப்படிச் சமாளிக்கலாம். அதற்குப் பிறகும் வருவாய் பாதிப்பு ஏற்படுமானால், அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான உத்திகளை, தமிழக அரசு ஆலோசித்துவருகிறது.”

“காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்கள் சந்தைகளுக்குக் கொண்டுவர முடியாமல், விளைவிக்கப்பட்ட இடங்களிலேயே அழுகி வீணாகும் நிலை இருக்கிறது. அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறீர்களா?”

“வேளாண்துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன வேளாண் பொருள்கள் தேங்குகின்றன என்ற விவரங்களைப் பெற்று, அந்தப் பொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மல்லிகைப்பூக்கள் சந்தைக்குக் கொண்டுவர முடியாமல் அழுகுவதாக தகவல் வந்தது. உடனே, வாசனைத்திரவியத் தொழிற்சாலைக்கு அந்தப் பூக்களைக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சில இடங்களிலிருந்து தர்ப்பூசணிப் பழங்களை கோயம்பேடு சந்தைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படவில்லை என்ற பிரச்னை இன்னும் நீடிக்கிறதே?”

“பாதுகாப்புக் கருவிகள் போதுமான அளவில் நம்மிடம் உள்ளன. ஆனால், அவை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் எங்களுக்கு வந்தது. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் எவ்வளவு இருப்பு உள்ளது, எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு, அந்தப் பிரச்னை பெருமளவில் சரிசெய்யப்பட்டது.

ஆனாலும் சில இடங்களில் அந்தப் பிரச்னை வந்ததால், மண்டல அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். இப்போது கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நேரடியாகவே களத்துக்குச் சென்று இதை ஆய்வு செய்து வருகிறார்கள்.”.

`` ‘கலைஞர் அரங்கம், பாலன் இல்லம் உள்ளிட்ட கட்டடங்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தி.மு.க, சி.பி.ஐ ஆகிய அரசியல் கட்சிகள் தமிழக அரசிடம் கூறின. அதற்கு அரசிடமிருந்து பதில் வரவில்லையே?”

“தற்போது அரசிடம் போதுமான வசதிகள் உள்ளன. இதற்கென ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் படுக்கை வசதிகொண்ட கட்டடங்கள், படுக்கை வசதி இல்லாத கட்டடங்கள் எத்தனை உள்ளன என்பதை அடையாளம் கண்டு, அந்தக் குழு ஓர் அறிக்கை அளித்துள்ளது. இவை போக, தானாக முன்வந்து தரும் கட்டடங்களை, தேவைப்படும்பட்சத்தில் அரசு நிச்சயமாகப் பயன்படுத்திக்கொள்ளும்.”

“தற்போதைய சூழலில், தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது. அவர்களின் பணியை எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். சொற்ப ஊதியத்தில் பணியாற்றுகிறார்கள். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?”

“தற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

தற்போது நிலவும் அசாதாரணமான சூழலில் இவ்வளவு கடுமையாகப் பணியாற்றுகிறார்களே என்று தூய்மைப் பணியாளர்கள் மீது மிகுந்த கரிசனத்துடன் முதல்வர் இருக்கிறார்.

எனவே, அவர்களின் கோரிக்கையை உரிய தருணத்தில் அவர் கனிவுடன் பரிசீலிப்பார்.”