Published:Updated:

`மறைமுகத் தேர்தல் ஏன்?; ஸ்டாலின் ரெஃபரென்ஸ்!' - தூத்துக்குடியில் கலகலத்த எடப்பாடி பழனிசாமி

``உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் தி.மு.க தான். ஆனால், தற்போது மறைமுகத் தேர்தலை எதிர்ப்பதும் தி.மு.கதான். ஸ்டாலின் சொன்னா சரி, நாங்க சொன்னா மட்டும் தவறா?" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நாளை தென்காசியில் இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,``33 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி புதிய மாவட்டமாக நாளை தொடங்கப்படுகிறது. ரஜினி எந்த அடிப்படையில் அதிசயம் எனச் சொன்னார் எனத் தெரியவில்லை. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும் என்ற அதிசயத்தைச் சொல்லியிருப்பார் என்றே கருதுகிறேன். 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முந்தைய தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், கடந்த 31.6.16 அன்று உள்ளாட்சித் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் இதுபோன்றுதான் நடத்தப்படுகிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றக் கூறினார். கடந்த 1996-ம் ஆண்டுவரை உள்ளாட்சியில் மறைமுக தேர்தல்தான் இருந்தது. மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் தி.மு.கதான். தற்போது அதை எதிர்ப்பதும் தி.மு.கதான். ஆனால், தற்போது ஸ்டாலின் அதை எதிர்ப்பதுதான் விந்தையாக உள்ளது. ஸ்டாலின் சொன்னா சரி, நாங்க சொன்னா மட்டும் தவறா?

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி

அஸ்ஸாம், குஜராத் போன்ற மாநிலத்தில் உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடக்கிறது. விழுப்புரம் உள்ளிட்ட 2 நகராட்சிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால்தான் மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும் மெஜராட்டி கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது. உள்ளாட்சிகளை நடத்துவது கடினமாக இருக்கும். அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும், நிச்சயமாக வெற்றிபெறும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஊராட்சி ஒன்றியங்கள் மாவட்ட ஊராட்சிகளில் நடத்தப்படும் மறைமுகத் தேர்தலைப்போல மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். மறைமுகத் தேர்தலுக்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். காலகட்டத்துக்கு ஏற்றாற்போல முடிவு எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளது. தன்னாட்சி அமைப்பான தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது. பா.ஜ.க-வுடன் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி இன்றும் தொடர்கிறது.

அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் ரேசன் பொருள்கள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு ஏற்றாற்போல கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இருப்பு உள்ளது.

``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல!" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்குவதற்கு கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. பணிகள் முடிந்தவுடன் ரூ.2,000 வழங்கப்படும். தமிழக அரசால் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உயர்த்தி வழங்குவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை. மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்றார்.