Published:Updated:

இங்கிலாந்தில் ஈ.பி.எஸ்; பின்லாந்தில் செங்கோட்டையன்! - அசத்தும் முதல்வர், அமைச்சர்கள்

தினேஷ் ராமையா

பின்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்நாட்டு கல்வி முறை குறித்து நேரில் கேட்டறிந்தார்.

EPS, Sengottaiyan
EPS, Sengottaiyan

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாள்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்த அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றிருக்கிறார். லண்டனின் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையைத் தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கையொப்பமானது.

`என்னப்பா நம்ம ஊரு இட்லிலாம் கிடைக்குது!' - லண்டனைக் கலக்கும் ஈ.பி.எஸ்
EPS, Vijyabaskar
EPS, Vijyabaskar

அப்போது தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உடனிருந்தார். இதையடுத்து அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் குறித்து இங்கிலாந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களது சேவையை மனதாரப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் உள்ள காற்றாலை மின்உற்பத்தி நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மின்உற்பத்தியை எளிமையான முறையில் கட்டமைப்பது குறித்த வழிமுறைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார். இதையடுத்து, இங்கிலாந்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் அமெரிக்கா புறப்பட இருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் திரும்புகிறார். லண்டனில் கோட் - சூட்டில் முதல்வர், அமைச்சர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.

Sengottaiyan
Sengottaiyan
`மனதார பாராட்டுகிறேன்!’ - லண்டன் மருத்துவர்கள் முன் அசத்திய எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்து சென்றிருக்கிறார். கல்வி முறையில் புகழ்பெற்று விளங்கும் பின்லாந்தில், அந்நாட்டு கற்றல், கற்பித்தல் முறைகள் உள்ளிட்டவை குறித்து நேரில் கேட்டறிந்து வருகிறார் அவர். இந்தப் பயணத்தில் அவருடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருக்கின்றனர். முன்னதாக தமிழகம் வந்த பின்லாந்து அதிகாரிகள், அமைச்சர் செங்கோட்டையனை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை ஏற்றே அவர் பின்லாந்து சென்றிருக்கிறார்.

பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் வாணி ராவைச் சந்தித்துப் பேசினார். பின்னர், அங்குள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்துக்குச் (Aalto University) சென்ற அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். அங்கிருந்து பின்லாந்தின் வடக்கு கரோலியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரிவேரா கல்விநிறுவனத்துக்கு அதிகாரிகளுடன் விசிட் அடித்த அமைச்சர், அந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.

Sengottaiyan
Sengottaiyan

பின்லாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக தமிழகக் கல்வித் துறை சார்பில் மலேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகக் கல்வித் துறையில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பின்லாந்தை அடுத்து ஸ்வீடன் நாட்டுக்கும் தமிழகக் கல்வித் துறைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.