Published:Updated:

`பத்து நாளா ஸ்டாலின் தூங்கினாரா... இல்லையா?' - அமைச்சர்களிடம் கலகலத்த எடப்பாடி பழனிசாமி

ந.பொன்குமரகுருபரன்
கே.ஜெரோம்

``பத்து நாளா ஸ்டாலின் தூங்குனாரா... இல்லையா.. மனுஷன் நொந்துபோயிருப்பாரே” என எடப்பாடியார் கிண்டலடிக்க, அமைச்சர்கள் கலகலத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை தமிழகம் திரும்பினார். அதிகாலை ஒரு மணி முதலே ஜி.எஸ்.டி சாலையில் குழுமத் தொடங்கிய அ.தி.மு.க-வினர், தடபுடலான வரவேற்பில் சென்னை விமான நிலையத்தையே அதிர வைத்துவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
அண்ணே, கோட் சூட்ல அசத்திட்டீங்க. இங்க தமிழ்நாடு முழுக்க உங்களைப் பத்தின பேச்சு தான்
அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கக் காத்திருந்த நிர்வாகிகள்
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கக் காத்திருந்த நிர்வாகிகள்

செண்டை மேளங்கள், கொடி, தோரணங்கள் என ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் வரவேற்பைப்போன்று, எடப்பாடி பழனிசாமிக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தி.நகர் எம்.எல்.ஏ சத்யா முன்நின்று செய்துள்ளார்.

சரியாக அதிகாலை 2:40 மணிக்கு, முதல்வரின் விமானம் துபாயிலிருந்து சென்னை வந்திறங்கியது. நான்காம் எண் விஐபி கேட் வழியாக வெளியே வந்த முதல்வரை, அமைச்சர்கள் வரவேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார், ``அண்ணே, கோட் சூட்ல அசத்திட்டீங்க. இங்க தமிழ்நாடு முழுக்க நீங்கதான் பேச்சு” என்று சிரித்தபடி கூற, எடப்பாடிக்கு முகம் முழுதும் மத்தாப்பு.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்கக் காத்திருந்த அமைச்சர்கள்
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கக் காத்திருந்த அமைச்சர்கள்

``எதையும் திட்டம்போட்டு பண்ணல. அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கோணும் இல்லையா... கோட் சூட் அதுமாதிரிதான்” என்று விளக்கியுள்ளார். ``தி.மு.க-காரங்கதான் வயிறு எரிஞ்சுபோயிருக்காங்க. ஒரே புலம்பல்தான்ணே” என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அதற்கு, ``பத்து நாளா ஸ்டாலின் தூங்குனாரா... இல்லையா.. மனுஷன் நொந்துபோயிருப்பாரே” என எடப்பாடியார் கிண்டலடிக்க, அமைச்சர்கள் கலகலத்துள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், ``கோட் சூட்ல நீங்களும் கலக்கிட்டீங்களேங்க. முகமெல்லாம் பிரகாசமா இருக்கு...” என்று ஜெயக்குமார் கிண்டலடிக்க, ``எப்பா, என்ன குளிரு அடிச்சதுனு எங்களுக்குத்தான் தெரியும். வெலவெலத்துப் போய்ட்டோம்” என்று சிரித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வெளிநாடு சுற்றுப்பயணத்தின்மூலம் 8,835 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த எடப்பாடி, வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யத், தனது அரசு உரிய உதவிகளைச் செய்யும் எனவும் உறுதியளித்தார்.

முதல்வரை வரவேற்ற கட்சியினர் பலரும், அவர் காலில் விழுந்து எழுந்தனர். வழக்கம்போல் அவர்களை எடப்பாடியார் தடுக்கவில்லை. விமான நிலையத்திலிருந்து, ஜி.எஸ்.டி சாலை சந்திப்புவரை நடந்தே வந்த எடப்பாடி, கட்சியினரின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னரும், இரண்டு கி.மீ தூரத்துக்கு போலீஸ் பைலட் காரில் ஏறி நின்றபடி தொண்டர்களின் வரவேற்பைப்பெற்ற பிறகுதான், வீட்டுக்குப் புறப்பட்டார். இக்கூட்டம் கலையவே காலை ஐந்து மணி ஆனது.