Published:Updated:

`யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்’ - தென்காசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எந்த முட்டுக்கட்டை வந்தாலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் எனத் தென்காசி புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் தொடக்க விழா
தென்காசி மாவட்டம் தொடக்க விழா ( எல்.ராஜேந்திரன் )

நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி, புதிய மாவட்டமாகக் கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்துக்கான தொடக்கவிழா தென்காசியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

புதிய மாவட்டக் கல்வெட்டு
புதிய மாவட்டக் கல்வெட்டு

இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ரூ.28.67 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 45 பணிகளைத் தொடங்கி வைத்தார். அத்துடன், ரூ.12.16 கோடி மதிப்பில் ஆறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 3,000 பயனாளிகளுக்கு 19.69 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ``தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா ஏழு புதிய மாவட்டங்களைத் தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் ஐந்து மாவட்டங்களைத் தொடக்கி வைத்தார். அதேவழியில் தற்போது நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளார்.

தென்காசி மாவட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுத்து, தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக மாற்றுவோம்.
ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்
`மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து தமிழகத்தின் தலை சிறந்த மாவட்டமாகத் திகழச் செய்வோம். புதிய மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தமிழக அரசு புதுமை திட்டங்களைச் செயல்படுத்தும்’’ என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இந்தியத் திருநாடே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுள்ளன. பெய்யும் மழை நீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் சேமிக்கக்கூடிய வகையில் குடிமராமத்துப் பணிகள் நடந்துள்ளன.

புதிய மாவட்ட பிரிப்புக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சிலர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்த இடையூறு வந்தாலும், யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நோக்கில் தேர்தல் ஆணையம் வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

புதிய மாவட்டம் தொடக்க விழா
புதிய மாவட்டம் தொடக்க விழா

தென்காசி மாவட்டத்தில் ராமநதி-ஜம்புநதி இணைப்புத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது செண்பகவல்லி அணையின் கன்னிகாமதகு பிரச்னைக்கு கேரள முதல்வரை நேரடியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதன்மூலம் நீர் மேலாண்மை பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் தோறும்  மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்!

இந்த ஆட்சியில் புதிய தொழில் வரவில்லை, இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள் எனப் பொய்யான தகவலைச் சிலர் சொல்லி வருகிறார்கள். 110-வது விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 110-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட 453 அறிவிப்புகளில், 368 அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வருக்கு வரவேற்பு
முதல்வருக்கு வரவேற்பு

நாட்டிலேயே தமிழகத்தில்தான் நெகிழிக்கு முதன்முதலாகத் தடை விதிக்கப்பட்டது. அதைப் பின்பற்றி தற்போது பல்வேறு மாநிலங்கள் மட்டும் அல்லாமல் நாடே பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில், முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் 9,72,216 மனுக்களைப் பெற்று அதன் மீது ஆய்வு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 4,433 மனுக்கள் பெறப்பட்டு 2,835 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்மஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனை. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வைத்த கோரிக்கைகளின் பலனாகத் தமிழகத்துக்கு 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதால் 900 மருத்துவ மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

ஒவ்வொரு புதிய மருத்துவக் கல்லூரிக்கும் 150 மருத்துவ மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன், கூடுதலாக 3 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை இந்தியா அளவில் அதிகரித்துள்ளது.

முதல்வர் விழாவில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்
முதல்வர் விழாவில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்

தாமிரபரணி - நம்பியாறு - கருமேணி ஆறு இணைப்புத் திட்டம் 2020 டிசம்பரில் முடிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். மக்களுக்கு நல்லது செய்ததற்குச் சான்று வழங்கிய தேர்தல்தான் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல். தொடர்ந்து மக்களுக்காக எங்களுடைய ஆட்சி செயல்படும்’’ என்று பேசினார்.