Published:Updated:

`நீட் தேர்வில் விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறோம்!' - எடப்பாடி பழனிசாமி

`தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி உள்ளோம்' முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

நெல்லை மாவட்டம் தென்காசியில், முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா தலைமையில் 10 ஆயிரம் பேர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று விமானம்மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டாலும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சேலம் உருக்காலை மிகப்பெரிய பொது நிறுவனம். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான பேர் பணிபுரிந்துவருகிறார்கள். இந்த ஆலைப் பிரச்னை என்பதும் பொதுவான பிரச்னைதான்.

பிற மாநிலங்களில் பொதுப் பிரச்னைகளில் கட்சியினர் இணைந்து செயல்படுவதுபோல, சேலம் உருக்காலையை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது என்ற அடிப்படையில் மனமாச்சர்யங்கள் இல்லாமல் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்துள்ளோம்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதேபோல பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பிற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டபின் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படும். நதிநீர் இணைப்புக்கான விரிவான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.” என்றார்.