Published:Updated:

` வெளிநாட்டுப் பயணத்தில் என்ன நடந்தது?' - புள்ளிவிவரங்களை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி

சகாயராஜ் மு

14 நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார்.

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami

``வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும்,

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``28.8.2019 அன்று இங்கிலாந்து தலைநகரான லண்டன் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்திட, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன" என்று தெரிவித்ததோடு,

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

``இங்கிலாந்தின் Suffolk நகரத்தில் என்ஜென் (Enzen) நிறுவனம், மரபுசாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளைப் பார்வையிட்டதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை (Statement of Intent) கையொப்பமானது. அத்துடன், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி வந்தவுடன்தான் முழுமையா தெரியும்?- எதைக் குறித்து சொல்கிறார் திருமாவளவன்

மேலும், ``29.8.2019 அன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக்கூறுகளைப் பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, 2.9.2019 அன்று அமெரிக்காவின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்குச் சென்று, அங்கு அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி உடைய கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதரப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளைக் கேட்டறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami

``3.9.2019 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதன்மூலம், தமிழ்நாட்டில் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், Haldia Petrochemicals நிறுவனம், Naphtha Cracker Unit--உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க என்னைச் சந்தித்து ஆலோசனை செய்தனர். அதைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், ``யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தேன்" என்று தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி,

``சான் ஹீசே நகரில் 4.9.2019 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதன்மூலம் 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்குத் தேவையான உதவிகள் அளிக்க அமெரிக்கத் தொழில் முனைவோர் (ATEA) அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள Digital Accelerator திட்டத்தை தொடங்கி வைத்தேன். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்குத் தேவையான நிதியில் 10 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சான் ஹீசே நகரில் “யாதும் ஊரே” திட்டத்தையும் தொடங்கி வைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ``5.9.2019 அன்று அமெரிக்காவின், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்குச் (TESLA Inc.) சென்று, சுற்றுப்புறச் சூழல்களைப் பாதுகாக்கின்ற வகையில் அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளைப் பார்வையிட்டேன். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன்" என்று தெரிவித்துள்ள முதல்வர், ``சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரால் உருவாக்கப்பட்டுள்ள ப்ளூம் எனர்ஜி (Bloom Energy) என்ற நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன்" என்று கூறியுள்ளார்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami
ஜெ. கொண்டுவந்த சைக்கிள் ரோந்து... கைவிட்ட எடப்பாடி ஆட்சி?

``6.9.2019 அன்று லாஸ் ஏஞ்சலஸ், Anaheim நகர மேயர் சித்து, அந்நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தைக் காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில், சிறந்த தொழில்நுட்பத்தை இங்கு பயன்படுத்தி வருகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர்ப் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தேன். இதுபோன்று, கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, Anaheim நகராட்சி மேயர் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி,

``அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, 9.9.2019 அன்று துபாய் சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் “Business Leaders Forum” என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில், 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதன்மூலம் 10,800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தேன். இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக நான் நேரடியாகக் கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

மேலும், ``அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழில்கள் தொடங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் எனது அரசு விரைந்து செய்து கொடுக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் அரசும், சுற்றுலாவிற்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு உகந்த சிறந்த மையங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும்" என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.